திங்கள், 14 மார்ச், 2022

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா

 தோழி ரேவதி மூலமாக அறிமுகமான நண்பன் ராஜசிம்மன் . ரேவதியின் வீட்டிற்கு அருகில் அவன் வீடு இருந்ததால் அவன் வீட்டிற்கு அடிக்கடி க்ரூப் ஸ்டடிக்குப் போவோம்.


கல்லூரி காலத்தில் பேசிய மிகச் சில ஆண்களுள் அவனும் ஒருவன். அவனுடைய அப்பா எம். எஃப். எல்லில் பொறியாளர் என்று நினைவு. அவனுக்கும் அந்தத் துறையில் நிறைய ஆர்வமிருந்தது.

நான் இங்கி பிங்கி பாங்கி போட்டு தேர்ந்தெடுத்த துறையை அவன் யோசித்துத் தேர்ந்தெடுத்திருந்தான். பாடத்தை முழுமையாகப் படித்து உள்வாங்கி விளக்குவான்.

அவனுடைய அப்பா பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர் மாதிரி கம்பீரமாய் இருப்பார். அவனது அம்மாவும் தங்கையும் மிகவும் தோழமையாய் பழகுவார்கள். என் அப்பா நன்றாகப் பேசக் கூடியவர் என்பதால் குடும்பமாய் நண்பர்களாகிவிட்டோம்.

வாழ்க்கையின் சிறு சிறு விஷயங்களைப் பற்றி நிறைய யோசிப்பவனாய் அவன் அப்போது இருந்தான். ரேவதியின் செல்ல நாய் ஜீனோ இறந்து போன போது ஓவென்று அழுத அவளைத் தெளிவாய் பேசி சமாதானப்படுத்தியவன். பிள்ளையார் பக்தன்.

பரீட்சை நேரமெல்லாம் பகலில் ராஜசிம்மன் வீட்டில் படித்து விட்டு இரவு ரேவதி வீட்டிற்குச் சென்று விடுவேன். ஷானே எழுதிய புத்தகம் என்று நினைவு. மல்லாக்கப் படுத்துப் படிக்க முடியாத அளவிற்குப் பெரிது, குப்புறப்படுத்துக் கொண்டு தான் படிக்க வேண்டும். நானும் ரேவதியும் ஆளுக்கு ஒன்று என்று பங்கு போட்டு முக்கிய கேள்விகளைப் படித்து, பிறகு மற்றவருக்கு விளக்குவோம்.

அவன் எங்களைப் போன்றவனில்லை. எல்லாவற்றையும் நிதானமாய் புரிந்து கொண்டு முழுமையாய் படிப்பவன். புரியாத விஷயங்களைத் தெளிவாக விளக்குவான். அவனுடைய அப்பா அதே துறையில் வேலை செய்தால் அவனுக்கு அந்த ஆர்வம் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. எங்களைத் தவிர பிற நண்பர்களும் அவன் வீட்டுக்குப் படிக்க வருவார்கள்.

பரீட்சைக்குப் படித்து ரொம்பவும் ஸ்ட்ரெஸ் ஆகி சினிமாக்களுக்குக் கிளம்பிப் போன நினைவு இருக்கிறது.

ஒருமுறை டி.வி.எஸ் எக்ஸலை ஓட்டிக் கொண்டு போய் வேறொரு வண்டியுடன் நேராக மோதியதில் வண்டியின் பின்வீல் வளைந்து விட்டது. வீலின் பெண்ட் நிமிர்த்துவது முதற்கொண்டு மெக்கானிக் கடையில் செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்து கொடுத்தான்.

கடைசி வருட ப்ராஜெக்ட் அவன் புண்ணியத்தில். பெரும்பாலான வேலைகளை அவன் இழுத்துப் போட்டுச் செய்தான், ரேவதி சின்சியராய் உதவி செய்ய, என்னுடைய பங்கு அதில் குறைவு தான். கடைசி ப்ரெஸன்டேஷனிலும் குத்து மதிப்பாய் செய்தேன். மூன்று பேரை ஒப்பு நோக்க அவனுக்கே கம்மியான மதிப்பெண்களை வழங்கியிருந்தார்கள். பெண்கள் பொறுப்பாய் செய்திருப்பார்கள் என்று ஆசிரியர்கள். நம்பியிருப்பார்கள் என்று இப்போது தோன்றுகிறது.

கடைசி வருடம் அவனுக்கு ஏதோவொரு சப்ஜெக்ட்டில் மதிப்பெண் குறைந்துவிட அப்பீல் செய்த பின்னர் நல்ல மதிப்பெண் வந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் நண்பர்கள் பலரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்று பின்னால் ஒருமுறை சொன்னான்.
எட்டிப்பார்க்காத அவர்களுள் நானும் ஒருத்தி, அப்போதெல்லாம் அந்தந்த நேரத்து எண்ணங்களுடன் வாழ்ந்திருக்கிறேன். அந்தக் குறுகுறுப்பு இப்போதும் என்னுள் இருக்கிறது. என் அப்பாவின் தோழமையால் என் முசுட்டுத் தங்களை அவன் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டான் என்று இப்போது தோன்றுகிறது.

உன்னுடன் தொடர்பில் இருப்பேனோ இல்லையோ உன் அப்பாவுடன் தொடர்பில் இருப்பேன் என்று அவன் கல்லூரியின் கடைசி தினங்களில் சொன்னான்.

காலத்தால் தொலைந்து பல வருடம் கழித்து கல்லூரி வாட்சாப் குழுவில் மீண்டும் சந்தித்தோம்.

காலமெல்லாம் காதல் வாழ்க படத்தை நாங்கள் தியேட்டரில் சென்று பார்த்தோமா, இல்லை அந்தப் பாடல்களை அவனது வீட்டிற்கு அருகிலிருக்கும் ஸ்பீக்கரில் ஒலித்துக் கேட்டிருக்கிறேனா என்பது மறந்துவிட்டது,

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா பாடலைக் கேட்கும் போதேல்லாம், அவனது அம்மாவோடு அவனது வீடும், அதில் நாங்கள் சாப்பிட்ட நினைவும் உடன் வருகிறது.

ஞாயிறு, 13 மார்ச், 2022

தென்பாண்டி சீமையிலே . . .

 லக்ஷ்மியின் வீடு மாமா வீட்டிற்கு நேர் பின்னால் இருந்தது. நான் அப்போது மாமா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு நெருக்கமாயிருந்த தோழிகளில் ஒருத்தி லக்ஷ்மி.


இருவரும் ஒரே வகுப்பு, வெவ்வேறு பள்ளி, நான் செயின்ட் மேரிஸ், அவள் அரசாங்கப் பள்ளி. செயின்ட் மேரிசில் படித்தற்காக உயர்வாய் நினைத்துக் கொள்ளும் மனநிலையெல்லாம் எனக்கு இல்லை. சாரதா வித்யாலயாவில் டென்த்தில் கணக்கில் நூறும் அறிவியலில் தொண்ணூரும் எடுத்துவிட்டு, அப்போது புதிதாய் சேர்ந்த செயின்ட் மேரிசின் புத்திசாலிகளுக்கு மத்தியில் பாடம் புரியாமல் தொலைந்து போயிருந்தேன்.

ஒருமுறை ஜெயலலிதா கலந்து கொண்ட பெரிய விழாவில் நடனமாட லக்ஷ்மிக்கு சமிக்கி வைத்து தைத்த கறுப்புப் பாவாடை, பெரிய ஜிமிக்கியுடன் கூடிய நகை செட் எல்லாம் அவளது பள்ளியில் கொடுத்திருந்தார்கள். ‘அம்மா ஜெயலலிதா . . .’ என்ற வார்த்தைகளைக் கொண்ட பாடல். அவ்வளவு பெரிய ஜிமிக்கி, மாட்டலுடன், ஓசியில் தருகிறார்களே என்று அவள் பள்ளியின் மீது பொறாமையாக இருந்தது. தடவித் தடவி பார்த்துக் கொண்டிருந்தேன். போட்டுப் பாரேன் என்று பெருந்தன்மையாய் சொன்னாள்.

இருவரும் ஒரே ட்யூஷன் போனோம். திடீரென ஒருநாள் காரணம் சொல்லாமல் ட்யூஷனிலிருந்து நின்றுவிட்டாள். சார் என்னை விசாரித்தார். அழைத்து வரச் சொன்னார். மறுத்துவிட்டாள். அதற்கான காரணத்தை அவள் சொன்ன நாளில் நான் ப்ளஸ் டூ படித்து முடித்திருந்தேன்.

அவளுடைய அப்பாவும் அம்மாவும் அண்ணனும் எக்ஸ்போட்டிற்காக பீஸ் எடுத்து வந்து வீட்டில் தைத்துக் கொடுப்பார்கள். சிறிய அறைகள் கொண்ட ஓட்டு வீடு அவர்களுடையது. அவளுடைய அப்பா இருந்தால் தையல் மிஷினின் மோட்டர் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். கோபக்காரர். நான் நன்றாக படிப்பவள் என்று ஏனோ நம்பி என்னிடம் மதிப்பாக பேசுவார்.

லக்ஷ்மி பெரும்பாலும் பாவாடை தாவணி அணிவாள். அவளது அண்ணன் யுவராஜ், அவனும் நல்ல நண்பன். தம்பி அவ்வளவாய் எங்களுடன் சேர்ந்ததில்லை. அப்போது கேபிள் டி.வி வந்த புதிது, கேசட் வாடகைக்கு எடுத்து வந்து படம் போட்டுப் பார்ப்போம். பள்ளி நேரம் போக, வீட்டில் வேலையில்லாத நேரமெல்லாம் லஷ்மியும் யுவராஜூம் எங்கள் வீட்டில் தான் இருப்பார்கள்.

ப்ளஸ் டூ ப்ளிக் எக்ஸாமில் பேப்பர் அவுட் ஆகிவிட்டது என்று சொல்லி தினமும் ஒரு கேள்வித்தாளைக் கொண்டு வந்து கொடுப்பான் யுவராஜ். நாங்கள் படித்துவிட்டு போவோம் ஆனால் அந்தப் பேப்பராக இருக்காது. அப்படி நினைத்து அலட்சியாமாய் பார்த்துவிட்டு போன இயற்பியல் பேப்பர் அப்படியே வந்தது. நல்ல வேளை அலட்சியமாய் என்றாலும் விடைகளை ஒரு முறை பார்த்து விட்டு வந்திருந்தேன்.

நானும் லஷ்மியும் சேர்ந்து லீவில் ஹிந்தி கிளாஸ் போனோம். ப்ராத்மிக் படித்தோம். ஹிந்தி சாருக்கும் உடன் படித்த இன்னொரு தோழிக்கும் விருப்பம் உண்டாகிவிட பிரச்சனை பெரிதாகிவிட்டது. என்னை மிண்ட் ஸ்ட்ரீட்டில் ஆள் வைத்து அடித்தார்கள் என்று வீங்கியிருந்த கட்டை விரலைக் காட்டினார் ஹிந்தி சார்.

நாங்கள் இருவரும் அந்தப் பெண்ணை வீட்டில் பார்க்கப் போனால் அவளுடன் தனியே பேசும் வாய்ப்பே கிட்டவில்லை. சீக்கிரமே அவளை அவளது மாமாவிற்கோ மாமா பையனுக்கோ கட்டி வைத்துவிட்டார்கள்.

மத்யமாவை புதிதாய் சேர்ந்த லஷ்மண் சாரிடம் நான் மட்டும் படித்தேன். அவள் சேரவில்லை.

லக்ஷ்மிக்கு இளையராஜா குரலை ஏனோ பிடிக்காது. எருமைமாடு குரல் என்பாள். எனக்கு இந்த வகை இனப்பிரிப்பெல்லாம் அப்போது தெரியாது. எஸ்.பி.பி குரலையே அடையாளம் காணத் தெரியாத அபலையாய் இருந்தேன். நிறைய நடிகர்களை, பாடகர்களை விமர்சிக்கும் ஒற்றைச் சொல்லைச் சட்டென உதிர்ப்பாள்.

அவளுக்கு கல்லூரி படித்து முடித்ததும் உறவிலேயே திருமணம் நிச்சயமாகிவிட்டது. சின்ன மாம்பலத்தில் ஓட்டல் கடை வைத்திருப்பவர்களின் வீடு.
திருமணத்திற்குப் பின்னர் தோழிகள் சேர்ந்து ஒருமுறை பார்க்கப் போனோம். மிகவும் யோசித்துப் பேசினாள். எதார்த்தமாய் ஏதோவொன்றைச் சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டு, முறைத்த மாமியார் பக்கம் திரும்பிப் பார்த்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

அங்கிருந்து கிளம்பும் போது வருத்தமாய் இருந்தது. அது தான் அவளைப் பார்த்த கடைசி தினம். பின்னர் ஒருமுறை அவளுக்கு பையன் பிறந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டேன்.

அவளுடைய புகுந்த வீட்டிற்கான வழி இப்போது மறந்துவிட்டது. அவள் அம்மா வீட்டினரும் வீடு மாறி போய்விட்டார்கள்.

என்றேனும் ஒருமுறை தொலைந்து போய்விட்ட அவளைத் தேடிப் பிடித்து பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். திருமணத்தின் ஆரம்பத் தயக்கமெல்லாம் மறைந்து இப்போது பழைய லஷ்மியாகியிருப்பாள் என்று நம்புகிறேன்.

‘தென்பாண்டி சீமையிலே , தேரோடும் வீதியிலே…’
இளையராஜாவின் குரலில் கேட்கும் போதெல்லாம் அவளை நினைத்துக் கொள்கிறேன்.

அப்போது தனக்கென்று சொந்தக் கருத்தைக் கொண்டிருக்காத இந்தத் தோழியின் நினைவை எந்தப் பாடலாவது அவளுக்கு இப்போது கொண்டு வருமா என்று தெரியவில்லை!

புதன், 22 டிசம்பர், 2021

அண்ணாநகரு ஆண்டாளு ஐனாவரம் கோபாலு

அண்ணாநகரு ஆண்டாளு ஐனாவரம் கோபாலு

ஐ.சி.எஃப்புல எடுக்கறாண்டா தண்டாலு…

இந்தப் பாடலைக் கேட்கும் போது ரேவதி நினைவுக்கு வருவாள்.

பொறியியல் கல்லூரி இரண்டாம் வருடத்தில் அறிமுகமான தோழி. அவளுடைய வீடும் என் வீடும் ஓரளவிற்கு அருகில். இருவருமே, அவள் சைக்கிளில் நான் டி.வி.எஸ் எக்ஸ்செல், லோக்கோ ஸ்டேஷனில் சந்திப்போம். ரயிலின் பெண்கள் பெட்டியில் ஏற்கனவே ஏறியிருக்கும் தோழிகளுடன் சத்தமாய் பாட்டெல்லாம் பாடிக்கொண்டு போவோம். மானாமதுர மாமரக் கிளையிலே, வெண்ணிலவே வெண்ணிலவே . . .

செமஸ்டர் பரீட்சைக்கு முன்தினம் அவளது வீட்டில் தங்கிவிடுவேன். எந்தெந்த கேள்விகள் வருமென அனுமானம் செய்து அவற்றை சாப்டர் வாரியாகப் பங்கு பிரித்து, இரவெல்லாம் படித்து, ஒருவர் படித்ததை மற்றவருக்குச் சொல்லி படிக்கும் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்வோம்.

அவளது அப்பாவும் என்னுடைய அப்பாவும் நல்ல நண்பர்களாகவும் ஆகியிருந்தார்கள். மாலையானால் கதவை மூடி வையுங்கள் என்று சொல்லும் லோகத்தில் திறந்து வைம்மா அப்போது தான் கொசுவெல்லாம் வெளியே போகும் என்று அவளுடைய அப்பா சொன்னதாக நினைவு. என்னை யோகாவிலும் தியானத்திலும் சேரச் சொல்லி அந்த அத்தியாயத்தை என் வாழ்வில் சீரியஸாகத் தொடக்கி வைத்தவள் அவள்.

இப்போது போலவே அப்போதும் நானொரு மகா introvert. அதோடு கோபமோ அழுகையோ சட்சட்டென வரும்.  யோசிக்காமல் அதை அப்படியே வெளிக்காட்டி விடுவேன். நம் கண்ணீருக்கு மதிப்பில்லாத இடத்தில் அதை வெளிக்காட்டிவிடக் கூடாது என்று அவள் சொன்ன தினம் மூடியிருந்த மூளையின் ஒருசிறுபகுதி திறக்க, இன்று வரை கண்ணீர் முட்டி வரும் தினங்களில் ரேவதி நினைவுக்கு வருவாள்.

திருமணத்திற்குப் பின்னர் தொடர்பு நீங்கி தொலைந்து போனோம். திருமணத்தின் தொடக்கால குழப்பங்கள் நீங்கி அவள் வீட்டைத் தேடிச் சென்ற போது அவளுடைய அம்மா அன்று பார்த்த அதே போல இருந்தார், அவளும் கூட. நட்பு விட்ட இடத்திலிருந்து மீண்டும். நடுவில் மறைந்த இரண்டு தசாப்தங்களில் என் பிறந்த நாளை அவள் மறந்திருக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் பிறந்தநாளில் அவளிடமிருந்து எனக்கு வாழ்த்து வந்துவிடுகிறது. (குறிப்பு: இன்றோ நேற்றோ, அதற்கு முன் தினமோ, நாளையோ, அதற்கு மறு தினமோ என் பிறந்த நாள் அல்ல!)

குற்றவுணர்வு உந்த இந்த வருடம் தான் அவளிடம் அவளுடைய பிறந்தநாளைக் கேட்டிருக்கிறேன். அடுத்த வருடம் முதல் நானும் வாழ்த்திவிடுவேன்.

சைட்டடிச்சா ஐ.சி.எப்புல எடுக்கறாண்டா தண்டாலு….

எம். ஃப். எல்ன்னு அவ அப்பா வேலை செய்யுற கம்பெனியை சொல்லக் கூடாதா, உங்கப்பா வேலை செய்யுற பென்ஷன் பே ஆபீசை சொல்லக் கூடாதா,

ஏண்டா என்னோட அப்பா வேலை செய்யுற ஐ.சி.எப்ல தண்டால் எடுக்கறீங்க என்று சிரித்தபடி அவள் கேட்பது,

இப்போது ஒலித்துக் கொண்டிருக்கும் அண்ணாநகரு ஆண்டாளு பாடலை விட சத்தமாய் கேட்கிறது.


சனி, 20 மார்ச், 2021

தங்க இளவரசியின் ஆலயம்

      Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது.



     Pangeran என்ற வீரன் ஜாவானிய அரசனின் சகோதரன். இவன் அரசவையில் நாட்டியமாடும் பெண்ணின் மீது காதல் கொண்டு அவளை ரகசிய திருமணம் செய்து கொள்கிறான். அவர்களுக்கு பிறக்கும் பெண் தான் Radin Mas Ayu. தங்க இளவரசி என்ற பெயருக்கேற்ப அழகான குழந்தையாக அவள் இருக்கிறாள். 
     அவர்களுடைய இந்தக் காதல் ஜாவானிய அரசனுக்குத் தெரிய வருகிறது. Pangeran-ஐ எதிரிகளுடன் போரிட அனுப்பிவிட்டு Radin Mas Ayu குடியிருக்கும் வீட்டை தீயிட்டு கொளுத்த ஆணையிடுகிறான். அதில் Radin Mas Ayuவின் தாய் இறந்துவிடுகிறாள். பணிப்பெண் ஒருத்தி Radin Mas-உடன்  தப்புகிறாள். இவ்விஷயம் தெரியவரும் போது சினம் கொள்ளும் Pangeran ஜாவானிய அரச குடும்பத்துடன் தனக்கிருக்கும் தொடர்பை அறுத்துக் கொண்டு  Radin Mas-உடன் நாட்டை விட்டு வெளியேறுகிறான்.                                      
                                      

     அவர்கள் சிங்கப்பூரின் தெலோக் ப்ளாங்கா பகுதிக்கு வந்து இங்கு எளிமையாக வாழ்கிறார்கள். ஒருநாள் Pangeran ஜாவானிய அரசகுலத்தைச் சேர்ந்தவன் என்பது சிங்கப்பூர் சுல்தானுக்குத் தெரிய வருகிறது. அவனை அரசவைக்கு அழைத்து மரியாதை செய்கிறான். இதன் வழி ஜாவானிய அரசனுக்குத் தன் சகோதரனின் இருப்பிடம் தெரிய வருகிறது. அவன் சிங்கப்பூர் சுல்தானின் மகளை Pangeranக்கு திருமணம் செய்து வைக்கிறான்.

     அழகான பெண்ணாக வளர்ந்து நிற்கும் Radin Masஐத் தன் வழியிலிருந்து அகற்ற முயலும் Pangeran-இன் புது மனைவி அவளைத் தனது தமக்கையின் மகனான Tengku Bagus-க்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயல்கிறாள். அதற்குத் தடையாக வரும் Pangeran-ஐ Tengku Bagus கத்தியால் குத்த வருகிறான். தந்தையைக் காக்கும் நோக்கில் இடையில் புகுந்து கத்திக் குத்தை ஏற்றுக் கொண்டு இறந்து போகிறாள் Radin Mas. அவள் நினைவாக அமைதியான சூழலில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

வியாழன், 18 மார்ச், 2021

ரப்பர் மரமும் அது காத்து நிற்கும் பழைய மசூதியும்

செம்பாவாங் கடற்கரைக்கு அருகிலிருக்கும் Andrews avenue சாலை வழியாகச் சென்றால் பாதி வழியில் தனியார் வீடுகள் மறைந்து மரங்கள் அடர்ந்த சாலையான Jln Mempurong வருகிறது. தொடர்ந்து நடந்தோமென்றால் அச்சாலையின் இறுதியில் Masjid Petempatan Melayu Sembawang என்றழைக்கப்படும் இம்மசூதியைப் பார்க்கலாம்.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை இந்தப் பகுதி இஸ்லாமியர்களின் கல்லறைகளைக் கொண்டிருந்திருக்கிறது. 1900 களின் துவக்கத்தில் அவை அகற்றப்பட்டு ரப்பர் தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் 1940களில் அந்த ரப்பர் தோட்டமும் அகற்றப்பட்டு செம்பவாங் கடற்படைத் தளத்தில் வேலை செய்த மலாய் ஊழியர்களுக்காக ஒரு சிறு  குடியிருப்பு இப்பகுதியில் உருவானது. பின்னர் 1963 ல் இந்த மசூதி கட்டப்பட்டது. அதன் வாயிலில், இந்த ரப்பர் மரம் அங்கு ஒருகாலத்திலிருந்த ரப்பர் வனத்தின்் கடைசி சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. 

இந்த மரத்தை வெட்ட முயன்ற போதெல்லாம் அதை செயல்படுத்த நினைத்தவர்களுக்கு ஏதோவொரு பாதிப்பு ஏற்பட்டதாம். அந்த மசூதியை இந்த மரம் காத்து நிற்கிறது என்று மலாய்க்காரர்கள் நம்புகிறார்கள்.

வியாழன், 5 டிசம்பர், 2019

பற்று

அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும் சொல்லிவிட முடியும்.
சாம்பிராணி புகைக்கிடையே, கடைக்கு வெளியே இருக்கும் கூடையில் உருளைக்கிழங்குகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் வெள்ளை வேட்டியணிந்த அந்த முதியவர். இந்த ஊருடன் இன்னமும் ஒட்டியிராத அன்னியத்தன்மை அவரது உடல் மொழியில். இந்திய அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெற்றவராக இருப்பார் என்று தோன்றியது.
இந்த ஊரில் தடம் பதிப்பதற்கான தொடக்க முயற்சியாக அவரது மகன் அக்கடையைத் துவக்கியிருக்க வேண்டும். Emotional supportக்காக ஊரிலிருந்து தந்தையை வரவழைத்திருக்க வேண்டும்.
வாடிக்கையாளர் பொறுக்கி எடுத்து, பின்னர் வேண்டாம் என்று விட்டுவிட்டுச் சென்ற உருளைக்கிழங்குகளை மீண்டும் அவர் சீராய்த் தட்டில் அடுக்கிய பாங்கில் மகன் தொழிலில் முன்னேறிவிட வேண்டும் என்ற வேண்டுதலுடன் கூடிய நம்பிக்கை தெரிந்தது.
அவரது அந்த நம்பிக்கை மெய்யாக வேண்டும் என்று மனம் அனிச்சையாக வேண்டிக்கொண்டது.

செவ்வாய், 12 நவம்பர், 2019

உவன்



கதை ஒன்று

   மங்கிய பீச் பழத்தோலின் நிறத்திலிருக்கும் சிறுவன் உவன். உவனின் வீடு இளம்பச்சைச் சுவர்களையும், பழுப்பு கதவு ஜன்னல்களையும், அடர் சிவப்பு கூரையையும் கொண்டிருந்தது. அந்தக் கூரையின் பக்கவாட்டிலிருந்த புகைப்போக்கி, சிக்கலாகிவிட்ட கம்பியைப் போலச் சுருண்டு செல்லும் புகையை எந்நேரமும் கக்கியபடி இருந்தது. உவனுடைய வீட்டிற்கு முன்னால் இருந்த செங்கற்படிகள் சிதைந்திருந்தாலும், வெப்பச் சலனங்களால் விரிசல் விட்டு, நாளடைவில் துண்டுகளாகி மண்ணில் புதைந்து தட்டையாகிவிட்டிருந்த அதன் கற்கள் உவன் தவ்வி குதிக்க ஏதுவானதாய் அமைந்திருந்தன.  

   உவனது வீட்டுக் கூரையின் கிடைமட்டக் கோட்டிற்கு 47 டிகிரி சாய்மானத்தில், ஆறு கதிர்களுடன் எப்பொழுதும் மிதந்து கொண்டிருந்த சிவப்புச் சூரியன் இரவு பகல் பாராமல் வெயிலை அந்த இடம் முழுக்க பரப்பிக் கொண்டிருந்தது. அதற்கு இரண்டு பக்கமும் வெண்குன்றுகளாய் பம்மிய ஓரங்களுடன் படர்ந்திருந்த மேகங்களில் ஒன்று மல்லார்ந்து படுத்தபடி கால்களை மேல் நோக்கி நீட்டியிருக்கும் மூன்று கால் பூனை போல இருந்தது.

   வீட்டின் முன்புறம் இருந்த புல்தரை தான் உவனுடைய விளையாட்டு மைதானம். சில சமயங்களில் அந்தப் புற்களில் ஒன்றை விரல்களால் கிள்ளியெடுத்து, அதன் உச்சியில் மொட்டாய்  அமர்ந்திருக்கும் பனித்துளியைச் சுவைத்துப் பார்ப்பான். புல் வாடை படர்ந்த குளிர்ந்த பனிக்கூழாய் கரைந்து அரைநொடியில் காணாமல் போகும் அந்தத் துளியை, என்றேனும் ஒருநாள் தன் தொண்டை நனையும் வரை உள்ளிழுத்துச் சுவைக்க வேண்டும் என்ற பேராசை உவனுக்கு உண்டு. ஆனால் ஒவ்வொரு துளியும் எச்சிலுடன் கரைந்து தொண்டையை அடையும் பொழுது குளுமையின் சுவடே தெரியாமல் போய்விடும்.  
அந்தப் புல்வெளியில் இரண்டு கைகளாலும் கால்களைக் கட்டிக் கொண்டு ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு உடலின் பகுதிகள் நிலத்தில் பதிய, உருண்டு செல்லும் விளையாட்டு உவனுக்குப் பிடித்தமான ஒன்று. அந்தப் புல்தரையின் மீது படர்ந்திருக்கும் பனித்துளிகள் உவன் உடையைத் தாண்டி தோலை நனைத்த போது எழும் சில்லிப்பில் உவனுக்கு விருப்பமிருந்தது. அப்படி உருள்வதால் சட்டை அழுக்காகும் என்று அம்மா உவனை என்றுமே தடுத்ததில்லை. உவனது அம்மா எப்பொழுதும் வீட்டு  வேலைகளைச் செய்தபடியே இருந்ததால் உவனுக்கு விளையாடுவதற்கு வீட்டின் பின்புறமிருந்த குளத்தில் மிதக்கும் மஞ்சள் வாத்தையும் அதன் குஞ்சையும் தவிர வேறு யாருமில்லை. அந்த வாத்துகள் வளைந்த நூலைப் போன்ற அலட்சியமான நீர்க்கோடுகளைத் தங்களின் கீழ் இழுத்தபடி தண்ணீரில் நீந்திச் செல்பவை. குளத்தின் நடுவில் வட்ட இலைகளுக்கிடையே பூத்திருந்த செந்தாமரையை நெருங்கும் போதெல்லாம் அதைத் தன் சிவந்த அலகால் முத்தமிட்டுச் செல்பவை.
சீரான இடைவெளியில் சுற்றிலும் நடப்பட்டிருந்த பழுப்பு மரக்கட்டைகள் தான் உவர்கள் வீட்டின் வேலி. உவனது வீட்டின் புல்வெளியில்  அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடக்கும் வெள்ளைப் பூக்கள், அந்த வேலியோரமாக உயர்ந்து நிற்கும் பைன் மரங்களின் கீழ் உதிர்ந்து கிடப்பவை. அம்மரங்களுக்கு மேல் கறுத்த வளைகோடுகளாய் இறகை அசைத்துப் பறந்தபடியிருக்கும் பறவைகள் கவ்வியிழுத்து போட்டவை.
இது நாள் வரையில் அந்த வேலியைத் தாண்டி உவன் சென்றதே இல்லை. அந்த வேலிக்கு அப்பால் சரிந்து செல்லும் பசிய வெளியை மட்டுமே அங்கிருந்து உவனால் பார்க்க முடிந்தது. அதற்கு அப்பாலிருக்கும் உலகம் எத்தகையதாக இருக்கும் என்று அங்கிருந்த பைன் மரங்களில் ஒன்றின் கீழ் படுத்தபடி கற்பனை செய்வது உவனது பொழுது போக்குகளில் ஒன்று.

   சில சமயம், அந்த சரிவைச் சுற்றி சரிகையாய் ஒரு ஆறு ஓடுவதாகவும் அதிலிருக்கும் ஆரஞ்சு நிற மீன்கள் தன் வீடிருக்கும் குன்றைச் சுற்றிச் சுற்றி வருவதாகவும் நினைத்துக் கொள்வான். மற்றொரு முறை அந்தச் சரிவு முடியும் இடத்தில் ஒரு ரயில் தண்டவாளம் இருப்பதாகவும் அதில் எப்பொழுதும் பெரிய எஞ்சின் பகுதியும், போகப் போகச் சிறுத்து வாலாய்த் தேயும் பெட்டிகளையும் கொண்ட மஞ்சள் ரயில் ஒன்று கரும்புகையைக் கக்கியபடி  சுற்றிவருவதாகவும் கற்பனை செய்து கொள்வான். உடனே ரயிலாக மாறி வேலியின் உட்புறமாக சுற்றிச் சுற்றி ஓடுவான். அப்படி ஓடும் போது உவன் எழுப்பும் கூவென்ற ஒலியில் குளத்தில் இருக்கும் வாத்துகள் தன் பச்சை வளையம் கொண்ட கழுத்தைத் திருப்பி உவனைப் பார்க்கும். 

உவனுக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு ஆசை தான். தன்னுடன் புல்வெளியில் உருண்டு விளையாட ஒரு சிறுமி. பலவண்ண பூக்கள்  போட்ட ப்ராக் அணிந்திருக்கும் அவள் தன் கூந்தலை இரு பின்னல்களாக்கி அதன் நுனியில் ரிப்பன் கட்டிக் கொண்டிருப்பவளாக இருப்பதை உவன் விரும்பினான். இதற்காக உவன் இன்று மீண்டும் ஒரு முறை கடவுளை வேண்டிக் கொண்டான்.

கதை இரண்டு

   நிதிலனின் தங்கை, அவள் கேட்ட நாய்க்குட்டியை அப்பா வாங்கித் தரவில்லை என்ற வருத்தத்துடன் நிதிலனின் அறைக்குள் நுழைந்தாள். கையில் பென்சிலுடன் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்த அண்ணனைப் பார்த்ததும் அவளுக்கு நாய்க்குட்டி மறந்து போனது. ஆவலுடன் அவனுக்கு முன்னாலிருந்த தாளை எட்டிப் பார்த்தாள். அதில் அவன் தீட்டியிருந்த சித்திரம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று தன்னை வரையும் படி அவனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.
நிதிலன், அவளை அருகிலிருந்த முக்காலியில் அமரச் சொன்ன போது, கொஞ்சம் இரு என்று சொல்லிவிட்டு, ஓடிப்போய் தன் டெட்டி பேரை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள். அவளது முகத்தைப் பார்த்தபடி தாளில் இருந்த புல்வெளிக்குச் சற்று மேலாக அந்தரத்தில் ஒரு வட்டமிட்டான் நிதிலன். அதனுள் மேலும் இரண்டு சிறு வட்டங்களைப் போட்டு அதற்குள்ளிருந்த பாதி வெளியைக் கருப்பாகி அதைக் கண்களாக்கினான். அதற்குக் கீழே ஆங்கில எழுத்து சியைக் கால்நீட்டி படுக்க வைத்தது போல வாயை வரைந்தான். பின்னர் மெலிந்த கழுத்தும், முன்பக்கம் பட்டன் வைத்த சட்டையும் பூக்கள் அலங்கரித்த அவளது அரைப் பாவாடையையும் வரைந்தான். தாளில் மொட்டைத் தலையுடன் நின்றிருந்த தன் தங்கையின் சிரத்தின் உச்சியில் கருப்பு வளை கோடுகளை இழுத்து அதை குதிரைவாலாக்கினான். தன் அம்மா வைத்திருப்பதைப் போன்ற ரப்பர் பேண்ட் ஒன்றை வரைந்து அதனால் அவளது கூந்தலை முடிச்சிட்டான். பின்னர் மெலிந்த கால்களை வரைந்து, அதன் மேல் அவள் வைத்திருந்தது போலத் தொடைகளின் மீது பதிந்திருக்கும் கைகளையும் அதிலிருக்கும் டெட்டி பேரையும் வரைந்தான். அவனது தங்கைக்கு அந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது.

மீண்டும் கதை ஒன்று

   தூங்கியெழுந்த போது தன் வீட்டிற்கு முன்னாலிருந்த புல்வெளியில் பூப்போட்ட பாவாடையையும் பொத்தான் வைத்த சட்டையும் அணிந்து உட்கார்ந்திருந்த அந்த மூக்கில்லா சிறுமியைக் கவனித்தான் உவன். மஞ்சள் நிறத்திலிருந்த உவளின் கைகள் உவனுடையதைப் போலவே மெலிந்திருந்தன. உவள் கூந்தலை உச்சியில் முடிச்சிட்டிருந்தாள். உவளது கைகளில் வைத்திருந்த கரடிப் பொம்மை உவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு, இரண்டு கால்களாலும் எம்பி எம்பிக் குதித்தபடி உவளை நோக்கி ஓடத் துவங்கினான் உவன்.
(அரூ இணைய இதழ் ஜனவரி 2019)