திங்கள், 14 மார்ச், 2022

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா

 தோழி ரேவதி மூலமாக அறிமுகமான நண்பன் ராஜசிம்மன் . ரேவதியின் வீட்டிற்கு அருகில் அவன் வீடு இருந்ததால் அவன் வீட்டிற்கு அடிக்கடி க்ரூப் ஸ்டடிக்குப் போவோம்.


கல்லூரி காலத்தில் பேசிய மிகச் சில ஆண்களுள் அவனும் ஒருவன். அவனுடைய அப்பா எம். எஃப். எல்லில் பொறியாளர் என்று நினைவு. அவனுக்கும் அந்தத் துறையில் நிறைய ஆர்வமிருந்தது.

நான் இங்கி பிங்கி பாங்கி போட்டு தேர்ந்தெடுத்த துறையை அவன் யோசித்துத் தேர்ந்தெடுத்திருந்தான். பாடத்தை முழுமையாகப் படித்து உள்வாங்கி விளக்குவான்.

அவனுடைய அப்பா பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர் மாதிரி கம்பீரமாய் இருப்பார். அவனது அம்மாவும் தங்கையும் மிகவும் தோழமையாய் பழகுவார்கள். என் அப்பா நன்றாகப் பேசக் கூடியவர் என்பதால் குடும்பமாய் நண்பர்களாகிவிட்டோம்.

வாழ்க்கையின் சிறு சிறு விஷயங்களைப் பற்றி நிறைய யோசிப்பவனாய் அவன் அப்போது இருந்தான். ரேவதியின் செல்ல நாய் ஜீனோ இறந்து போன போது ஓவென்று அழுத அவளைத் தெளிவாய் பேசி சமாதானப்படுத்தியவன். பிள்ளையார் பக்தன்.

பரீட்சை நேரமெல்லாம் பகலில் ராஜசிம்மன் வீட்டில் படித்து விட்டு இரவு ரேவதி வீட்டிற்குச் சென்று விடுவேன். ஷானே எழுதிய புத்தகம் என்று நினைவு. மல்லாக்கப் படுத்துப் படிக்க முடியாத அளவிற்குப் பெரிது, குப்புறப்படுத்துக் கொண்டு தான் படிக்க வேண்டும். நானும் ரேவதியும் ஆளுக்கு ஒன்று என்று பங்கு போட்டு முக்கிய கேள்விகளைப் படித்து, பிறகு மற்றவருக்கு விளக்குவோம்.

அவன் எங்களைப் போன்றவனில்லை. எல்லாவற்றையும் நிதானமாய் புரிந்து கொண்டு முழுமையாய் படிப்பவன். புரியாத விஷயங்களைத் தெளிவாக விளக்குவான். அவனுடைய அப்பா அதே துறையில் வேலை செய்தால் அவனுக்கு அந்த ஆர்வம் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. எங்களைத் தவிர பிற நண்பர்களும் அவன் வீட்டுக்குப் படிக்க வருவார்கள்.

பரீட்சைக்குப் படித்து ரொம்பவும் ஸ்ட்ரெஸ் ஆகி சினிமாக்களுக்குக் கிளம்பிப் போன நினைவு இருக்கிறது.

ஒருமுறை டி.வி.எஸ் எக்ஸலை ஓட்டிக் கொண்டு போய் வேறொரு வண்டியுடன் நேராக மோதியதில் வண்டியின் பின்வீல் வளைந்து விட்டது. வீலின் பெண்ட் நிமிர்த்துவது முதற்கொண்டு மெக்கானிக் கடையில் செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்து கொடுத்தான்.

கடைசி வருட ப்ராஜெக்ட் அவன் புண்ணியத்தில். பெரும்பாலான வேலைகளை அவன் இழுத்துப் போட்டுச் செய்தான், ரேவதி சின்சியராய் உதவி செய்ய, என்னுடைய பங்கு அதில் குறைவு தான். கடைசி ப்ரெஸன்டேஷனிலும் குத்து மதிப்பாய் செய்தேன். மூன்று பேரை ஒப்பு நோக்க அவனுக்கே கம்மியான மதிப்பெண்களை வழங்கியிருந்தார்கள். பெண்கள் பொறுப்பாய் செய்திருப்பார்கள் என்று ஆசிரியர்கள். நம்பியிருப்பார்கள் என்று இப்போது தோன்றுகிறது.

கடைசி வருடம் அவனுக்கு ஏதோவொரு சப்ஜெக்ட்டில் மதிப்பெண் குறைந்துவிட அப்பீல் செய்த பின்னர் நல்ல மதிப்பெண் வந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் நண்பர்கள் பலரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்று பின்னால் ஒருமுறை சொன்னான்.
எட்டிப்பார்க்காத அவர்களுள் நானும் ஒருத்தி, அப்போதெல்லாம் அந்தந்த நேரத்து எண்ணங்களுடன் வாழ்ந்திருக்கிறேன். அந்தக் குறுகுறுப்பு இப்போதும் என்னுள் இருக்கிறது. என் அப்பாவின் தோழமையால் என் முசுட்டுத் தங்களை அவன் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டான் என்று இப்போது தோன்றுகிறது.

உன்னுடன் தொடர்பில் இருப்பேனோ இல்லையோ உன் அப்பாவுடன் தொடர்பில் இருப்பேன் என்று அவன் கல்லூரியின் கடைசி தினங்களில் சொன்னான்.

காலத்தால் தொலைந்து பல வருடம் கழித்து கல்லூரி வாட்சாப் குழுவில் மீண்டும் சந்தித்தோம்.

காலமெல்லாம் காதல் வாழ்க படத்தை நாங்கள் தியேட்டரில் சென்று பார்த்தோமா, இல்லை அந்தப் பாடல்களை அவனது வீட்டிற்கு அருகிலிருக்கும் ஸ்பீக்கரில் ஒலித்துக் கேட்டிருக்கிறேனா என்பது மறந்துவிட்டது,

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா பாடலைக் கேட்கும் போதேல்லாம், அவனது அம்மாவோடு அவனது வீடும், அதில் நாங்கள் சாப்பிட்ட நினைவும் உடன் வருகிறது.

ஞாயிறு, 13 மார்ச், 2022

தென்பாண்டி சீமையிலே . . .

 லக்ஷ்மியின் வீடு மாமா வீட்டிற்கு நேர் பின்னால் இருந்தது. நான் அப்போது மாமா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு நெருக்கமாயிருந்த தோழிகளில் ஒருத்தி லக்ஷ்மி.


இருவரும் ஒரே வகுப்பு, வெவ்வேறு பள்ளி, நான் செயின்ட் மேரிஸ், அவள் அரசாங்கப் பள்ளி. செயின்ட் மேரிசில் படித்தற்காக உயர்வாய் நினைத்துக் கொள்ளும் மனநிலையெல்லாம் எனக்கு இல்லை. சாரதா வித்யாலயாவில் டென்த்தில் கணக்கில் நூறும் அறிவியலில் தொண்ணூரும் எடுத்துவிட்டு, அப்போது புதிதாய் சேர்ந்த செயின்ட் மேரிசின் புத்திசாலிகளுக்கு மத்தியில் பாடம் புரியாமல் தொலைந்து போயிருந்தேன்.

ஒருமுறை ஜெயலலிதா கலந்து கொண்ட பெரிய விழாவில் நடனமாட லக்ஷ்மிக்கு சமிக்கி வைத்து தைத்த கறுப்புப் பாவாடை, பெரிய ஜிமிக்கியுடன் கூடிய நகை செட் எல்லாம் அவளது பள்ளியில் கொடுத்திருந்தார்கள். ‘அம்மா ஜெயலலிதா . . .’ என்ற வார்த்தைகளைக் கொண்ட பாடல். அவ்வளவு பெரிய ஜிமிக்கி, மாட்டலுடன், ஓசியில் தருகிறார்களே என்று அவள் பள்ளியின் மீது பொறாமையாக இருந்தது. தடவித் தடவி பார்த்துக் கொண்டிருந்தேன். போட்டுப் பாரேன் என்று பெருந்தன்மையாய் சொன்னாள்.

இருவரும் ஒரே ட்யூஷன் போனோம். திடீரென ஒருநாள் காரணம் சொல்லாமல் ட்யூஷனிலிருந்து நின்றுவிட்டாள். சார் என்னை விசாரித்தார். அழைத்து வரச் சொன்னார். மறுத்துவிட்டாள். அதற்கான காரணத்தை அவள் சொன்ன நாளில் நான் ப்ளஸ் டூ படித்து முடித்திருந்தேன்.

அவளுடைய அப்பாவும் அம்மாவும் அண்ணனும் எக்ஸ்போட்டிற்காக பீஸ் எடுத்து வந்து வீட்டில் தைத்துக் கொடுப்பார்கள். சிறிய அறைகள் கொண்ட ஓட்டு வீடு அவர்களுடையது. அவளுடைய அப்பா இருந்தால் தையல் மிஷினின் மோட்டர் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். கோபக்காரர். நான் நன்றாக படிப்பவள் என்று ஏனோ நம்பி என்னிடம் மதிப்பாக பேசுவார்.

லக்ஷ்மி பெரும்பாலும் பாவாடை தாவணி அணிவாள். அவளது அண்ணன் யுவராஜ், அவனும் நல்ல நண்பன். தம்பி அவ்வளவாய் எங்களுடன் சேர்ந்ததில்லை. அப்போது கேபிள் டி.வி வந்த புதிது, கேசட் வாடகைக்கு எடுத்து வந்து படம் போட்டுப் பார்ப்போம். பள்ளி நேரம் போக, வீட்டில் வேலையில்லாத நேரமெல்லாம் லஷ்மியும் யுவராஜூம் எங்கள் வீட்டில் தான் இருப்பார்கள்.

ப்ளஸ் டூ ப்ளிக் எக்ஸாமில் பேப்பர் அவுட் ஆகிவிட்டது என்று சொல்லி தினமும் ஒரு கேள்வித்தாளைக் கொண்டு வந்து கொடுப்பான் யுவராஜ். நாங்கள் படித்துவிட்டு போவோம் ஆனால் அந்தப் பேப்பராக இருக்காது. அப்படி நினைத்து அலட்சியாமாய் பார்த்துவிட்டு போன இயற்பியல் பேப்பர் அப்படியே வந்தது. நல்ல வேளை அலட்சியமாய் என்றாலும் விடைகளை ஒரு முறை பார்த்து விட்டு வந்திருந்தேன்.

நானும் லஷ்மியும் சேர்ந்து லீவில் ஹிந்தி கிளாஸ் போனோம். ப்ராத்மிக் படித்தோம். ஹிந்தி சாருக்கும் உடன் படித்த இன்னொரு தோழிக்கும் விருப்பம் உண்டாகிவிட பிரச்சனை பெரிதாகிவிட்டது. என்னை மிண்ட் ஸ்ட்ரீட்டில் ஆள் வைத்து அடித்தார்கள் என்று வீங்கியிருந்த கட்டை விரலைக் காட்டினார் ஹிந்தி சார்.

நாங்கள் இருவரும் அந்தப் பெண்ணை வீட்டில் பார்க்கப் போனால் அவளுடன் தனியே பேசும் வாய்ப்பே கிட்டவில்லை. சீக்கிரமே அவளை அவளது மாமாவிற்கோ மாமா பையனுக்கோ கட்டி வைத்துவிட்டார்கள்.

மத்யமாவை புதிதாய் சேர்ந்த லஷ்மண் சாரிடம் நான் மட்டும் படித்தேன். அவள் சேரவில்லை.

லக்ஷ்மிக்கு இளையராஜா குரலை ஏனோ பிடிக்காது. எருமைமாடு குரல் என்பாள். எனக்கு இந்த வகை இனப்பிரிப்பெல்லாம் அப்போது தெரியாது. எஸ்.பி.பி குரலையே அடையாளம் காணத் தெரியாத அபலையாய் இருந்தேன். நிறைய நடிகர்களை, பாடகர்களை விமர்சிக்கும் ஒற்றைச் சொல்லைச் சட்டென உதிர்ப்பாள்.

அவளுக்கு கல்லூரி படித்து முடித்ததும் உறவிலேயே திருமணம் நிச்சயமாகிவிட்டது. சின்ன மாம்பலத்தில் ஓட்டல் கடை வைத்திருப்பவர்களின் வீடு.
திருமணத்திற்குப் பின்னர் தோழிகள் சேர்ந்து ஒருமுறை பார்க்கப் போனோம். மிகவும் யோசித்துப் பேசினாள். எதார்த்தமாய் ஏதோவொன்றைச் சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டு, முறைத்த மாமியார் பக்கம் திரும்பிப் பார்த்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

அங்கிருந்து கிளம்பும் போது வருத்தமாய் இருந்தது. அது தான் அவளைப் பார்த்த கடைசி தினம். பின்னர் ஒருமுறை அவளுக்கு பையன் பிறந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டேன்.

அவளுடைய புகுந்த வீட்டிற்கான வழி இப்போது மறந்துவிட்டது. அவள் அம்மா வீட்டினரும் வீடு மாறி போய்விட்டார்கள்.

என்றேனும் ஒருமுறை தொலைந்து போய்விட்ட அவளைத் தேடிப் பிடித்து பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். திருமணத்தின் ஆரம்பத் தயக்கமெல்லாம் மறைந்து இப்போது பழைய லஷ்மியாகியிருப்பாள் என்று நம்புகிறேன்.

‘தென்பாண்டி சீமையிலே , தேரோடும் வீதியிலே…’
இளையராஜாவின் குரலில் கேட்கும் போதெல்லாம் அவளை நினைத்துக் கொள்கிறேன்.

அப்போது தனக்கென்று சொந்தக் கருத்தைக் கொண்டிருக்காத இந்தத் தோழியின் நினைவை எந்தப் பாடலாவது அவளுக்கு இப்போது கொண்டு வருமா என்று தெரியவில்லை!