ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்



     மஞ்சுளாவிற்கு சாப்பிடுவதில் அதிக விருப்பம் இருந்தது. எதையாவது சாப்பிட்டபடியே இருந்ததால் அவள் பூசின உடல்வாகைக் கொண்டிருந்தாள். சிறுவயதில் அப்பாவோ அல்லது உறவினர்களோ வாங்கி வரும் பொட்டலங்களில் மற்றவர்களை விட தனக்கு கொஞ்சமாவது அதிகம் கிடைக்கும் படி பார்த்துக் கொள்வாள். வீட்டின் கடைசி பெண் என்பதால் அம்மாவின் பங்கில் பாதியேனும் அவளுக்குக் கிடைத்துவிடும்.

     மெல்லிய சவ்வுத் தாளில் கடைக்காரர்கள் சுற்றித்தரும் தீனிகளை விட கவர்ச்சிகரமான தகர டப்பாக்களில் விற்கப்படும் சாக்லேட்டுகளின் மீது அவளுக்கு ஆசை அதிகம் இருந்தது. ஒரு முறை சித்தியின் வீட்டிற்கு சென்றிருந்த போது மழமழ வென்று சிறிய முட்டை வடிவ சாக்லேட்டுகள் படம் போட்ட செவ்வக டப்பா ஒன்றைப் பார்த்ததிலிருந்து தான் இந்த ஆசை ஏற்பட்டது. அந்த டப்பாவின் உள்ளே நிஜமாகவே அது போன்ற சாக்லேட்டுகள் இருக்குமா என்ற சந்தேகம் அவளுக்கு ஏற்பட்டது. அதை ஆவலுடன் திறந்து பார்க்க பேனா மற்றும் பென்சில்கள் போட்டு வைக்கப்பட்டிருந்தன. வீட்டிற்கு வந்த சித்தப்பாவின் நண்பர் ஒருவர் வாங்கி வந்ததாய் சித்தி சொன்னாள். தன்  வீட்டிற்கு வருபவர்கள் மட்டும் இது போல வாங்கி வருவதில்லையே என்ற ஆதங்கம் மஞ்சுளாவிற்கு ஏற்பட்டது.

     அந்த சாக்லேட் தொட்டுப் பார்க்க கண்ணாடியைப் போல மழமழப்பாய் இருந்ததாகவும், வாயில் போட்டவுடன் கரைந்து போகக்கூடியதாய் இருந்ததாகவும், நடுவில் வைக்கப்பட்டிருந்த பருப்பு ஒரே கடியில் தூள் தூளாகி இனிப்புடன் கலந்து நாவில் பட்ட போது அமிர்தம் போல இருந்ததாகவும், இரவு படுத்திருக்கும் போது சித்தியின் பெண் சொன்னாள். அன்று இரவு கனவில்கல்யாண சமையல் சாதம்பாட்டில் வருவது போல தட்டுகளில் குவியல் குவியலாய் முட்டை வடிவ சாக்லேட்டுகள் வந்தன. அதைச் சாப்பிடுவதாய்  நினைத்து இரவெல்லாம் தூக்கத்தில் வாயை அசைத்தபடி படுத்திருந்தாள் மஞ்சுளா. வீட்டிற்கு போகும் போது அப்பாவிடம் அதை வாங்கித் தரச் சொல்லி அடம் பிடித்தாள். அவள் இன்னும் சிறு பிள்ளை இல்லையென்பதை நினைவு படுத்திய அப்பா, அந்த மாத சம்பளம் வந்ததும் வாங்கித் தருவதாய் சொல்லி, அதை அதோடு மறந்தும் போனார்.

      அதன் பிறகு அவள் ஆசை கல்யாண சாப்பாட்டின் மீது சென்றது. பசிய வாழையிலையில் இனிப்பு, வடை, பொரியல், கூட்டு, ஊறுகாய் போன்றாவற்றைக் கரைகட்டி, சூடான சாதம் வைத்து, சிறிது நெய் விட்டு, சாம்பார் ஊற்றி சாப்பிடும் சுகமே அலாதியாய் இருந்தது. திருமண சமையலுக்கென்று இருந்த பிரத்தியேக மணம் அவளைக் கவர்ந்தது. இது போன்றதொரு மணம் அம்மாவின் சமையலில் ஏன் இல்லை என்ற சந்தேகம் அவளுக்குள் நெடுநாட்கள் இருந்தது. எந்த திருமணத்திற்கு சென்றாலும் அவளின் நினைவு சாப்பாட்டு பந்தியின் மீதே இருந்தது. அவள் கெட்டி மேளம் கொட்டியதும் முதல் பந்தியில் அமர விரும்புபவளாய் இருந்தாள். எதையும் தவறவிடக் கூடாது என்ற ஆவேசத்தில் மிக வேகமாய் சாப்பிடக் கூடியவளாக அவள் மாறினாள்.

     ஒரு முறை பந்தியில் பரிமாறப்பட்ட கேசரி மிக நன்றாய் இருந்தது. இன்னொரு முறை கேட்கலாமா என்று தயக்கத்தோடு யோசித்தாள். எதிர் வரிசையில் உட்கார்ந்திருந்த பெரியவர் ஒருவர்

ஏம்ப்பா! அந்த கேசரியைக் கொஞ்சம் போடு!”

என்று சொல்ல, இவளும் தைரியமாய் கேட்க தயாரானாள். அதற்குள் நேரமாகிவிட்டது என்று அப்பா அவளை அவசரப் படுத்தியதில் மனமில்லாமல் பந்தியை விட்டு எழுந்தாள். அன்று தவறவிட்ட இனிப்பின் சுவை அவள் நாவில் நெடுநாட்கள் தங்கியிருந்தது.

     அதே போல நெடுந்தூர பயணங்களையும் அவள் விரும்புபவளாயிருந்தாள். பிரயாணத்தின் போது கிடைத்த நொறுக்குத் தீனிகள் அவளுடைய பயண நேரத்தை இனிமையாக்கின. மஞ்சுளாவின் பயணங்கள் உணவை நோக்கியே சென்றன. காலையில் பயணம் துவங்கும் போதே மதிய உணவிற்கு என்ன  வாங்குவது என்று அவள் மனதிற்குள் முடிவு செய்துக் கொள்வாள். மதிய உணவு வரை அந்த சுகம் நீடிக்கும். பின் இரவு உணவை நோக்கி அவளின் பிரயாணம் நீளும்.

     அவளின் திருமணத்தின் போது தான் முதன்முறையாக அவளுக்கு உணவின் மீதான உரிமை மறுக்கப்பட்டது. சடங்குகளின் காரணமாக பந்திக்கு மற்றவர்களைப் போல நேரத்திற்கு செல்ல முடியாமல் போனது. சென்ற போது, இலையோரத்தில் வைக்கப்படும் வடை மற்றும் இனிப்புகள் தீர்ந்து போயிருந்தன. அது அவளுடைய மனதில் ஒரு குறையாகவே நின்று போனது.

     புகுந்த வீட்டில் உண்ணும் சுதந்திரம் குறைந்துவிட்டது. காலை எழுந்த உடன் பசித்தாலும், குழந்தைகளும், வேலைக்குச் செல்லும் ஆண்களும் சாப்பிட்டு முடிக்க காத்திருக்க வேண்டியிருந்தது. இட்லி வேகும் மணமும் சட்னி தாளிக்கும் மணமும் பசியைக் கிளறிவிட்டாலும், நாவில் நீர் சுரக்க, மனதால் உணவை சுவைத்தபடி, மற்றவர்கள் உண்டு முடிக்க காத்திருப்பாள். இப்போது சூடான உணவைச் சாப்பிடுவதும் அரிதாகிப் போனது. உறவினர்கள் வாங்கிவரும் சிற்றுண்டிகளை மூத்த தலைமுறையினர் குழந்தைகளுக்கு மட்டும் பகிர்ந்தளித்த போது தான், மற்றவர்கள் தன்னை பெரியவர்களின் உலகில் சேர்த்துவிட்டதை உணர்ந்தாள். சட்டென்று காலடியில் நழுவிப்போன பிள்ளைப் பருவம் மிகப்பெரிய வருத்தத்தைக் கொடுத்தது.


    
நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கு உணவு பங்கிடும் பொறுப்பையும், சிறிய பிள்ளைகளுக்கு ஊட்டிவிடும் பொறுப்பையும் அவள் எடுத்துக் கொண்டாள். அவர்களுக்கு உணவளிக்கும் போதே யாரும் அறியாமல் இவளும் சாப்பிட பழகிக் கொண்டாள். அவ்வப்போது கிடைக்கும் உணவுப் பொருட்களைத் தன் கைப்பைக்குள் பதுக்கி வைக்கவும் தலைபட்டாள். குழந்தைகள் வளர்ந்த பின்னும், வீட்டுப் பெரியவர்கள் இறந்து போய் தனிக் குடும்பமாய் பிரிந்த பின்னும் இந்த பழக்கம் தொடர்ந்தது.

     பிள்ளைகளின் திருமணத்திற்கு பின் மருமகள்கள் வந்த போது தான் இது ஒரு பிரச்சனையாக மாறியது. வாங்கி வந்ததை கிழவி திருடி ஒளித்து வைக்கிறாள் என்ற வசைமொழி கிடைத்தது. ஆனாலும் இந்த பழக்கத்தை துறக்க மஞ்சுளாவால் முடியவில்லை. அதனால் அவள் அனைவரும் உறங்கிய பின் இருட்டில், உணவு சேகரிப்பிற்காக அலையும் எறும்பைப் போல நடமாடத் தொடங்கினாள். குறைபட்ட கண் பார்வையோடு பாத்திரங்களை உருட்டிவிட்டு மருமகள்களின் பேச்சுக்கு ஆளாகவும் செய்தாள்.

     அவள் கைப்பையில் சேகரித்த உணவுப்பொருட்கள் நாள்பட்டு, அழுகி, எறும்புகள் மொய்த்த பின் கைப்பற்றபட்டு அனைவரின் கேலிக்கும் உள்ளானது. இதனால் அவள் ஒளித்து வைக்கும் இடத்தை மாற்றியபடியே இருந்தாள். வைத்த வேகத்திலேயே மறந்து போகவும் துவங்கினாள். இப்போது அவள் அனைவரின் கண்களுக்கும் திருட்டுப் பாட்டியாக தோன்றினாள். ‘இதென்ன பரலோகம் போற வயசுல, இப்படி ஒரு பெருந்தீனி!’ என்று அவள் காதுபட மற்றவர்கள் உரக்க பேசத் தொடங்கினர்.

     கண்ணும் காதும் மந்தமாகிப் போனாலும் வாசனையை வைத்தே சமையலில் குறைபட்டிருப்பது புளியா, உப்பா என்று அவளால் அறிந்துக் கொள்ள முடிந்தது. இவளுக்கு பத்தியச் சோறு என்றாகிப் போயிருந்தாலும் இவளால் அதை பொறுக்க முடிந்ததில்லை. அந்த வழியே செல்லும் பேரனையோ பேத்தியையோ அழைத்து,

டேய் தம்பி! அம்மாவை குழம்புல கொஞ்சம் உப்பு போடச் சொல்லுடா!” என்பாள்

இந்த கிழத்தால சும்மா இருக்க முடியலை! இது நொள்ளை, அது நொட்டைன்னு எதையாவது சொல்லிகிட்டே இருக்கணும்! வயசாயிடுச்சில்ல, பேசாம கிருஷ்ணா, ராமான்னு இருக்கறத விட்டுட்டு சாப்பாட்டுக்கு எப்படி அலையுது பார்!” என்பாள் மருமகள்.

     மஞ்சுளா இறந்த போது மருமகள்களுக்கு நிம்மதியாகவே இருந்தது. வருடம் தவறாமல் அவளுடைய திவசத்தின் போது பலவகையான இனிப்புகள் மற்றும் திண்பண்டங்களை இலையில் வைத்து கும்பிட்டு, மாமியாரின் ஆத்மா சாந்தி பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையில் அவற்றை தங்களுக்குள் பகிர்ந்துக் கொண்டனர்.