புதன், 14 நவம்பர், 2018

என்னுள்ளே என்னுள்ளே


‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடலை இன்று கேட்ட போது இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கி ஶ்ரீவள்ளி மற்றும் ப்ரபாகர் சார் நினைவுகளில் விழுந்தேன். ஆம், அப்போது மிண்ட் ஸ்ட்ரீட்டிலிருந்து வந்த ஹிந்தி சாரின் பெயர் ப்ரபாகர் என்று தான் நினைவு. அவருக்கு அன்று இருபத்தெட்டு வயது இருந்திருக்கும் என்று கணிக்கிறேன்

பத்தாவது முடித்த லீவில் டைப்ரைட்டிங்கும் ஹிந்தியும் கற்றுக் கொள்வது அப்போதைய ட்ரெண்ட். அப்படித் தான் கிருஷ்ணா இன்ஸ்ட்டிட்யூட்டில் ஹிந்தி க்ளாஸ் சேர்ந்தேன். மூக்கிலிருக்கும் வியர்வையை அடிக்கடி கர்ச்சீப்பால் துடைத்துவிட்டுக் கொள்ளும் மெலிந்த உயரமான ஶ்ரீவள்ளியை அங்கு தான் சந்தித்தேன்.

பயங்கர ஆர்வக்கோளாறு கொண்டிருந்த சமயம் அது. ஆம், ஆத்மி என்று சில வார்த்தைகளையும் ஒரு வாக்கியத்தை எப்படி அமைப்பது என்ற அடிப்படையையும் கற்றுக் கொண்ட நாளில் என் கற்பனை சிறகடிக்கத் தொடங்கியது. ஒரு சிறுகதை எழுதிக் கொண்டு போய் ப்ரபாகர் சாரிடம் காட்டினேன்.

என் ஆர்வத்தைப் பார்த்து புன்னகைத்த அவர், கொஞ்சம் பொறுக்கச் சொல்லி அன்றைய வகுப்பில் ஒரு வாக்கியத்தை இன்னும் முறையாக எப்படி எழுதுவது என்று கற்றுக் கொடுத்தார். (என் முதல் சிறுகதை முயற்சி ஹிந்தியில் இருந்திருக்கிறது) மறுநாள் அதைத் திருத்தி கொண்டுபோய் மீண்டும் காட்டினேன். மீண்டும் புன்னகைத்தார். என்ன நினைத்துப் புன்னகைத்திருப்பார் என்று இப்போது புரிகிறது.

ப்ராத்மிக் பாஸாகி மத்யமாவிற்குச் சென்ற நாட்களில் சிறு மாற்றம். நாங்கள் வகுப்பிற்குச் செல்லும் போது, முன்பே வந்திருக்கும் ஶ்ரீவள்ளியுடன் ப்ரபாகர் சார் பேசிக் கொண்டிருப்பார். நாங்களும் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.

ஒருநாள் நாங்கள் வகுப்பிற்கு வரும் போது ஶ்ரீவள்ளி அங்கு இல்லை. ப்ரபாகர் சாரும் தலையெல்லாம் கலைந்து போய் அயர்ன் பண்ணாத சட்டையுடன் அன்று லேட்டாக வந்தார். வகுப்பு முடிந்ததும், நாங்கள் ‘என்ன சார் ஆச்சு?’ என்று கேட்க, அவரது கண்கள் கலங்கி விட்டன. அதுவரை ஆண்கள் கலங்கி நான் பார்த்ததில்லை.

‘நேற்று ஶ்ரீவள்ளியோட மாமாக்கள் வந்து என்னை அடிச்சுட்டாங்க’ என்று பிசிறு தட்டிய குரலில் சொல்லி கட்டை விரலைக் காட்டினார்.
அப்பொழுது தான் இருவரும் காதலித்திருக்கிறார்கள் என்று என் களிமண் மண்டைக்கு உறைத்தது. அப்பொழுதெல்லாம் காதலென்பது எங்கள் அகராதியில் கெட்ட வார்த்தை. திகைத்துப் போனோம்.

அதன் பிறகு ஷேவ் செய்யாத கலைந்த உருவமாய் வந்து போனார் ப்ரபாகர் சார். பழைய கலகலப்பான சாரைப் பார்க்க முடியாத வருத்தத்தில் நாட்கள் சென்றன.

ஒரு நாள் வகுப்பு முடிந்ததும், என்னிடமும் லலிதாவிடமும் அவரது தொலைப்பேசி எண் எழுதியிருந்த தாளைக் கொடுத்து ஶ்ரீவள்ளியின் வீட்டிற்குச் சென்று அதைச் சேர்த்துவிட முடியுமா என்று கேட்டார். பயமாயிருந்தது. ஆனாலும் சரி என்றோம்.

அவருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை விட, அப்போது டெக்கில் பார்த்த சின்ன தம்பி முதலிய படங்கள் கொடுத்த அசட்டுத் துணிச்சலும், அதிலிருந்த த்ரில்லுமே எங்களை நகர்த்தியிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.

ஶ்ரீவள்ளியின் வீட்டில் அவளைப் பார்க்க எங்களுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அவளது அம்மா நன்றாகப் பேசினார். ஆனால் அம்மா சென்று விட்ட பிறகும் கூட ஶ்ரீவள்ளியின் தம்பி எங்களுடனே தொக்கி நின்றான். எப்படியோ, அந்தத் தாளை ஶ்ரீவள்ளியிடம் சேர்த்துவிட்டுத் திரும்பினோம். அதன் பிறகு நாங்கள் அவளைப் பார்க்கவே இல்லை. எங்கள் ஹிந்தி சாரும் மாறிவிட்டார்.

மத்யமாவிற்குப் பின்னர் நான் ஹிந்தி க்ளாஸ் போகவில்லை. ஹிந்தி பேசும் நல்லுலகமும் ஒரு நல்ல சிறுகதையாசிரியரை இழந்தது.
அடுத்த சில மாதங்களில் ஶ்ரீவள்ளிக்கு அவளது மாமாவுடன் திருமணம் நடந்து விட்டதாகக் கேள்விப்பட்டோம்.

வள்ளி படத்தின் குறிப்பிட்ட அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் இருவரையும் பார்த்துப் பேச வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் எழுந்தபடியிருக்கிறது. அதை ஶ்ரீவள்ளி நிச்சயம் விரும்பமாட்டாள், ஆனாலும் சார் எழுதிக்கொடுத்த அந்தத் தாளின் நினைவுகளையும் அதைச் சுமந்து வந்த எங்களையும் ஶ்ரீவள்ளி  மனதின் மூலையில் ரகசியமாய் இன்னமும் ஒளித்து வைத்திருப்பாள் தானே!