வெள்ளி, 26 டிசம்பர், 2014

மழைக் கவிதை


மழையைப் பற்றிய

அனுபவக் கவிதையை

நான் எழுதுவதற்குள்

என்னைப் பற்றி

எழுதிச் சென்றுவிட்டது

மழை.

வியாழன், 25 டிசம்பர், 2014

ஆலம் விழுது


 

   செடிகளின்  வேர்களுக்கு சுடுநீரை ஊற்றிவிடப்போவதாக க்ளாரா மிரட்டிய தினத்திலிருந்தே சரோஜா பாட்டிக்கு தூக்கம் கொள்ளவில்லை. அன்றிரவு, செம்பருத்திகளையும் ரோஜாக்களையும் அபரிதமாய் கொண்டிருந்த செடிகள் அவரிடம் வந்து தம்மைக் காப்பாற்றுமாறு  கண்ணீரோடு முறையிடுவதாகக் கனவு கண்டார். அவற்றைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் நேரம் கொதிநீரைக் கொண்டு வந்து கொட்டினாள் க்ளாரா. திடுக்கிட்டு விழித்த போது, சுடுநீர் தன் மீது தெறித்தாய் தோன்றிய உணர்வு மிக உண்மையானதாக இருந்தது, அவருக்கு. அது கனவு என்று அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. வெளியே சென்று செடிகளின் பாதுகாப்பை உறுதி செய்துக் கொண்ட பின்னும் உறக்கம் வரவில்லை.

   அன்றிலிருந்து மூட்டு வலி, முதுகு வலி போன்ற உடல் உபாதைகளெல்லாம் அவருக்கு ஒன்றுமற்றதாய் போய்விட்டது. நடுநிசியில் மெல்லிய சத்தம் கேட்டாலும் சட்டென்று சன்னல் வழியாக எட்டிப் பார்க்கத் தொடங்கினார். அவருக்கு தான் செடிகளை தொட்டியோடு தூக்கிக் கொண்டு போய் எங்கோ ஒளித்து வைப்பதாகவும், வைத்த இடத்தை மறந்து போய் அலைவதாகவும் கனவுகள் வரத் துவங்கின. கனவுகள் பூதங்களாய் பயமுறுத்தத் துவங்கிய நேரத்தில், ஆஸ்திரேலியாவிலிருந்து தொலைபேசியிருந்த  பேரன் ராசுவிடம் அதைப் பற்றிச் சொன்ன போது அவருக்கு அழுகை வந்தது. இந்த சனிக்கிழமை வருவதாய் சொல்லியிருந்த அவன் ஏதோவொரு தீர்வைக் தன்னோடு நிச்சயமாய் கொண்டு வருவான் என்று நம்பினார்.

   இரண்டு வருடங்களுக்கு  முன் ஆஸ்திரேலியா சென்ற பேரன், படிப்பு முடிந்து சிங்கப்பூருக்கு வரப்போகிறான் என்ற செய்தியே பாட்டிக்கு தெம்பையும் சந்தோஷத்தையும் கொடுத்தது. சரோஜா பாட்டிக்கு ராசுவின் மீது தனி வாஞ்சை உண்டு. தாயும் தந்தையும் வேலைக்குச் சென்ற காரணத்தால் பன்னிரெண்டு வயது வரை இவரிடம் முழுமையாக வளர்த்த பேரன் அவன். கடந்த இரண்டு வாரங்களைப் பேரன் வரப்போகிற அன்றைய தினத்தை நோக்கியே நெட்டித் தள்ளி வந்திருந்தார் சரோஜாப் பாட்டி. அவனுக்காக ஏதேனும் சமைக்க வேண்டும் என்று அவர் மனம் பரபரத்தது.


தனக்காக ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் தானே எல்லாவற்றையும் வாங்கி வருவதாகவும் அவன் சொல்லியிருந்தான். இருந்தாலும் அவருக்கு மனசு கேட்கவில்லை. பேரனுக்கு பிடித்த கோழியையாவது வாங்கிப் பொரிக்க வேண்டும் நினைத்துக் கொண்டார்.

   ஆகவேண்டிய வேலைகளை கவனிப்பதற்காக எழுந்த பாட்டி மூக்குக் கண்ணாடிக்காக தன் பக்கத்தில் இருந்த மேசையைத் தடவினார். அங்கே இல்லாமல் போகவே கண்களைச் சுருக்கி பார்த்தபடி, சலவை இயந்திரத்தின் பக்கத்தில், குளிர்பதன பெட்டிக்கு மேலே, சாப்பாட்டு மேசையின் மேலே, நாற்காலியில் என்று கவனமாய் கைகளால் தடவிக் கொண்டே வந்தார். கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்ததில் லேசாக தலையைச் சுற்றுவது போல இருந்தது. மின்விசிறியைப் போட்டுவிட்டு சற்று நாற்காலியில் அமர்ந்தார்.

   இப்போதெல்லாம் அவரால் முன்போல தொடர்ந்து வேலை செய்ய முடிவதில்லை. மயக்கமா தூக்கமா என்று புரியாத ஒரு சுழலுக்குள் அவரது மனமும் உடலும் அவ்வப்போது சென்று விடுகிறன. ஏதோ ஒரு கதையில் ராட்சஸன் ராஜகுமாரியைக் கடத்திச் சென்றது போல யாரோ தன்னை இந்த உலகத்திலிருந்து மாயாலோகத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் பின், தான் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் அவர் கற்பனை செய்துக் கொள்வார்.  அடிக்கடி ஆட்கொண்ட இந்த மனப்பெயர்ச்சி சோர்வைத் தருவதாக இருந்தது. தன் சொந்த வேலைகளை முடிக்க அது ஒரு தடையாக இருந்தது. இதனால் ஒரு சாதாரண வேலை கூட மலையாகத் தோற்றமளித்தது. அதை முடிப்பதற்குள் திணறிப்போனார்.

    முன்பெல்லாம் அவர் சுறுசுறுப்பிற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது. பிள்ளைகள் வளர்ந்து கல்லூரிக்கும் வேலைக்கும் சென்ற பின் இவர் தனக்கென்று வேலைகளைத் தேடிக் கொண்டார். செம்பாவாங்கிலிருந்த பாலர் பள்ளி ஒன்றில் துப்புரவாளர் வேலையை முடித்து விட்டு அதே மூச்சில் ஜீராங் ஈஸ்ட்டில் ஒரு அலுவலகத்தை சுத்தம் செய்ய கிளம்பிவிடுவார். அதையும் முடித்து விட்டு கொஞ்சம் கூட அலுத்துக் கொள்ளாமல் வீட்டிற்கு வந்து பிள்ளைகளுக்கு உணவு பறிமாரி, மறுநாளைக்கான கறி சமைத்து, வீட்டையும்  துப்புரவாக துடைத்து அதன் பின் தான் படுப்பார். இது போல கிட்டத்தட்ட பதிநான்கு வருடங்கள். நாடி தளர்ந்து போன இன்றைய நாட்களில் அதை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்வார்.

   பெண் மற்றும் பிள்ளைகளோடு போய் இருக்க அவர் என்றும் விரும்பியதில்லை. முடிந்தவரை மற்றவற்களுக்கு உதவியாக இருக்க வேண்டும், முடியாவிட்டால் உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும் என்பது அவரின் கொள்கை. உடம்பு முடியாவிட்டால் இப்போது குளிக்காமல் கொள்ளாமல் கூட ஒரு நாள் ஓய்வாக படுத்துக் கொள்ளலாம். அடுத்தவர் வீட்டில் அப்படி இருக்க முடியுமா! சில இரவுகளில் சிறுநீரை அடக்க முடியாமல் போய் விடுவது உண்டு. அப்போது கொஞ்சமாய் நனைந்து போகும் துணிகளால் அவமானப்பட நேருவதில்லை. மற்றவருக்காக கவலைப்பட தேவையற்ற இந்த வாழ்க்கை வாழ்வதற்கு சுலபமாய் இருந்தது. என்ன, பேசுவதற்கு தான் ஆட்கள் யாரும் இல்லை!

   அப்படியொன்றும் போட்டியிட்டுக் கொண்டு இவரை தன்னுடன் வைத்துக் கொள்ள பிள்ளைகள் யாரும் ஆசைப்படவும் இல்லை. வாரம் ஒருமுறை தொலைபேசுகிறார்களே அது போதாதா! அவர்கள் பிள்ளை குட்டிகளை வைத்துக் கொண்டு தன் புறாக் கூண்டுக்குள் நிம்மதியாய் இருந்தால் போதும் என்று தன்னை சமாதானப் படுத்திக் கொள்வார். கொஞ்சம் ஏமாந்தால் இப்படி தான்! ஏதேதோ நினைப்புகள் ஆளை விழுங்கி விடுகின்றன. ‘இன்று உட்கார நேரமில்லை!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே நாற்காலியிலிருந்து எழுந்துக் கொண்டார்.

   உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திரிக்கும் போதே பூட்டுக்கு பூட்டு வலித்தது. கூடத்தைக் கடந்து குசினிக்குள் நுழையும் போது மூச்சு வாங்கியது. சற்று நிதானித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார். மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்துவிட்டதில் அடுப்பு பிசுக்கேறிப் போயிருந்தது. கண்ணாடியை சற்று மறந்து, அதை சுத்தப் படுத்துவதில் முனைந்தார். அடுப்பைத் துடைத்து முடிப்பதற்குள் கை வலியெடுத்துக் கொண்டது. அந்த வேலையை முடித்துவிட்டு நாற்காலியில் மறுபடி சென்று அமர்ந்துக் கொண்டார்.

   சாலையில் சென்ற தீயணைப்பு வண்டி அமைதியைக் கிழித்துக் கொண்டு அலறியது. அந்த சத்தம் தூரம் சென்று தேய்ந்த பின் நிசப்தம் ஆக்கிரமித்துக் கொண்டது. முன்பைவிட சப்தமின்மையின் வீர்யம் இப்போது  அதிகமாகி விட்டதாய் தோன்றியது அவருக்கு. இப்போதெல்லாம் அவரால் இந்த தனிமையைத் தாங்க முடிவதில்லை. பிள்ளைகள் ஓடி விளையாடிய வீடு, எப்போதும் கூச்சலும் குழப்பமுமாய் இருந்த வீடு, யாருமற்றிருப்பது பொட்டற்று வெறிச்சிடும் நெற்றி போல காட்சியளித்தது.

   குழந்தைகள் சிறுவர் சிறுமியராய் இருந்தவரை வேலைகள் சரியாய் இருந்தது சரோஜாவுக்கு. ஒரு புத்தகம் படிக்கக் கூட அவருக்கு நேரமிருக்காது. காலையில் பள்ளிக்குச் சென்ற மகள் திரும்பி வரும் நேரம் மகன் கிளம்ப தயாராகிக் கொண்டிருப்பான். இதில் கைக்குழந்தையாய் சிறியவன் வேறு. கணவர் மற்றும் மகன் வீடு திரும்பும் நேரத்திற்குள் மற்ற வேலைகளை முடிக்கவேண்டும். ஆரம்பகாலங்களில் இவர்கள் வீடு திரும்பும் நேரம் நோக்கியே அவரது வாழ்க்கை நகர்ந்தது. சரோஜா என்றும் வேலைக்கு அஞ்சியவர் இல்லை. இழுத்து செருகிக் கொண்டு ஆரம்பித்தால் வேலைகள் சட் சட்டென்று முடிந்துவிடும்.

   பிள்ளைகள் ஒவ்வொருவராய் திருமணம் முடிந்து சென்று, பின் கணவரும் இறந்த பின் கவிந்த இந்த சப்தமின்மை தான் அவருக்கு தாங்கமுடியாததாக இருந்தது. சேவாவுக்கு ஆளை வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். கண்ணாடி வைத்த இடத்தை அவரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. வர வர மறதி வேறு அதிகமாகிக் கொண்டு வருகிறது. ‘ஒலியில் சொல்லும் ராயல் ஃபுட்ஸ்சை முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் அவர்.

   கடைக்குச் செல்வதற்காக வீட்டின் கதவைத் திறந்த போது, வாசலிலிருந்த செடிகள், காய்ந்த இலைகளை உதிர்த்துவிட்டு பளிச்சென்று காட்சியளித்தன. இவை வந்த நேரம் இவர் வாழ்க்கை சற்று மாறிப் போயிருந்தது. நட்டநடுவில் இருந்த செம்பருத்தி செடி தான் முதலில் வந்தது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டிற்கு முன் அவளுடைய தோழி கொடுத்தது. அப்போது அது இவ்வளவு தூரம் கிளைத்திருக்கவில்லை. அன்புக்கு ஏங்கும் சோனிக் குழந்தையைப் போல ஒடுங்கிப் போயிருந்தது. அதற்கு, தண்ணீர்விட்டு, பேசி, கொஞ்சி, அதை பாசத்தோடு தடவி கொடுக்க சட்டென்று வளர்ந்துவிட்டது. அதற்கு அடுத்து இருக்கும்பட்ரோஸ் இவராக கேட்டு வாங்கி வந்தது. நடுவே இருக்கும் தக்காளிச் செடி இரண்டு மாதங்களுக்கு முன் மகள் வயிற்று பேரன் சிவா கொண்டு வந்தது. பள்ளியில் பாட சம்பத்தமாக விதைகளை விதைத்தவன் அதை இங்கே வைத்துவிட்டு போயிருந்தான். பாட்டியின் சற்றே சோம்பேறியான செல்லக் குழந்தை அது. முதல் இலை வெடித்து கிளம்ப கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் பிடித்தது. இளம்முடிகளைக் கொண்ட ஒரு குழந்தையின் பிஞ்சு உடலை நினைவுபடுத்தும் அதன் இளம் காம்புகளைத் தடவி தடவிப் பார்ப்பாள் பாட்டி. அவ்வப்போது அதை கோபத்தில் திட்டினாலும் அவள் மனம் பொறுக்காது. பாட்டியின் கொஞ்சலும் கெஞ்சலும் அதற்கு புரிந்தது போல இருந்தது, அதன் வளர்ச்சி. இப்படியாக ஏதோவொரு காரணத்தோடு  சேர்ந்து போன செடிகளின் வரிசை இப்போது மின் தூக்கிவரை நீண்டுவிட்டது.

   காலையில் எழுந்தவுடன் ரோஜா பாட்டி நேரம் செலவழிப்பது இந்த செடிகளோடு தான். பழுத்திருக்கும் இலைகளை நாசூக்காய் கிள்ளி. அழுக்கடந்திருக்கும் இலைகளை சுத்தமான துணியால் துடைத்து, கண்பட்டுவிடும் என்று  பூக்களை உள்பக்கமாய் வளைத்து விட்டு, பின் தேவையான அளவு தண்ணீர் தெளித்தோ ஊற்றியோ விடுவார். இவற்றின் காரணமாகவே அவர் வெளியே எங்கும் தங்குவது கிடையாது. கொப்பும் கிளையுமாக செழித்து வளர்ந்திருக்கும் இந்தச் செடிகள் பாட்டிக்கு இதம் தருவதாய் இருந்தன.

   அவருக்கு நிம்மதியைக் கொடுத்த அவை, அக்கம்பக்கத்தாருக்கு தொல்லையாய் அமைந்தது தான் பிரச்சனையாகிப் போனது. முதலில் கிளைகள் வெளிச்சத்தை மறைப்பதாய் புகார் செய்தாள் பக்கத்துவீட்டுப் க்ளாரா. அதன்பின் மற்றொரு நாள், அவளது பிள்ளை சீக்கில் படுத்ததற்கு அதிலிருந்து கிளம்பிய கொசுக்களே காரணம் என்று கோபத்தோடு கத்திய போது தான் அதன் வேர்களில் சுடுநீர் ஊற்றப் போவதாக சொன்னாள். அதைக் கேட்ட பாட்டியின் உயிர்க்குலை ஆடிப் போயிற்று.

குழந்தைகளாய் வளரும் இந்த பிஞ்சுகள் துடித்துப் போய்விடாதோ! அவள் பிள்ளைக்கு சீக்கு வந்ததற்காக என் பிள்ளைகளைக் குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயம்என்றெல்லாம் தனக்குத் தானே புலம்பியபடி இருந்தார். க்ளாரா அப்படி சொன்ன தினத்திலிருந்து பேரனின் வரவிற்காக காத்திருக்கும் இந்த நிமிடம் வரை அவள் சொன்னதை எண்ணி அவரது மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது.

   ராசு தன் இரண்டு கூட்டாளிகளோடு வந்த போது மணி மூன்றாகியிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் பார்த்ததை விட  உயரமாகியிருந்தான். அவனைப் பார்க்க பார்க்க பாட்டிக்கு நெஞ்சு நிறைந்து போனது. கையோடு பாட்டிக்கு பிடித்த இறைச்சி பிரியாணியை வாங்கி வந்திருந்தான் ராசு. அதோடு தான் பொரித்த கோழியையும் சேர்த்து, பேரனுக்கும் அவன் நண்பர்களுக்கும் பறிமாரி, தானும் அவர்களோடு அமர்ந்துக் கொண்டார் பாட்டி.  நெடுநாட்கள் கழித்து பேரனோடு கதைகள் பேசியபடி சாப்பிட்டது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

   ராசு உணவிற்கு பின் சற்று நேரம், வெளிநாட்டில் அவனது வாழ்கை முறையைப் பற்றியும், காரசாரமான உணவிற்காக ஏங்கிப் போன தன் நாவைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தான். பாட்டிக்கு அவனது பேச்சு வியப்பாயிருந்தது. அவன் படும் சிரமங்களை எண்ணி மனம் வருந்தினார். அவனுக்கு சீக்கிரம்  திருமணம் செய்து வைத்துவிட்டால் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார். 

   பிறகு ராசு பக்கத்து வீட்டின் கதவைத் தட்டி க்ளாராவிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, சற்று நேரம் பேசினான்.  கோபத்தோடு பேசத் தொடங்கிய க்ளாரா  சற்று நேரத்தில் அமைதியடைந்தவளாக மாறினாள்.

   பின் ராசு, கூட்டாளிகளின் உதவியோடு  அதிகப்படியாக வளர்ந்திருந்த செடிகளின் கிளைகளை கழித்துவிட்டான். இருளடைந்திருந்த அந்த தாழ்வாரம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிச்சத்தை அனுமதித்தது. குப்பைகளை வாரி சுத்தம் செய்ததும் பளிச்சென்று சுத்தமாகிப் போனது. பின் தொட்டிகளை இரண்டிரண்டாக அடுக்கி அவை அடைத்திருந்த இடத்தின் நீளத்தைக் குறைத்தான். இப்போது நடைபாதை அடைப்புகளற்று துப்புரவாக இருந்தது. பாட்டி ஆர்வமாய் செடிகளைத் தடவிக் கொடுத்தார். கண்கலங்க பேரனைக் கட்டிக் கொண்டார்.

ராசு கிளம்பும் முன்,

பாட்டி! எந்த பிரச்சனையாக இருந்தாலும் இனி அவங்க என்கிட்டயோ அம்மாகிட்டயோ பேசுவாங்க, நீங்க வீணா கவலைப்படாதீங்க! எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க! நான் பார்த்துக்கறேன்!” என்றான். பல வருடங்களுக்கு முன், சிறுவனாய் இருந்த ராசுவிற்காக பள்ளி ஆசிரியரிடம் பேசி, பின் அவனைச் சமாதானப்படுத்த தான் பயன்படுத்திய இதே போன்ற வார்த்தைகள் நினைவிற்கு வந்தன, பாட்டிக்கு. செடிகள் முடிவெட்டிக் கொண்ட சிறு குழந்தைகள் போல உற்சாகமாய் இலைகளை அசைத்துக் கொண்டிருந்தன. சரோஜா பாட்டிக்கு பேரனை நினைக்கையில் பெருமையாக இருந்தது.

முத்தமிழ் விழா 2013ல் இரண்டாம் பரிசு பெற்ற கதை


 

விற்பனையாளன்


கூடையைச் சுமந்தபடி

என் வீட்டைக் கடந்த போது

“தேங்கோ தேங்கோ. . .!” என்று

சத்தமாய் அவ னுதிர்த்த வார்த்தைகளிலிருந்து

புறப்பட்ட தேங்காய்கள் இரண்டும்

மோதி உடைந்ததில் தெறித்த சில்லுகள்  

தெருவெங்கும் சிதறிக் கிடந்தன.