வியாழன், 31 ஜனவரி, 2019

ஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும்


இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோடாவைப் பற்றி அறிந்த போது ஆச்சர்யமாக இருந்தது. இணையத்தில் ‘No Surrender’ என்ற அவரது சுயவரலாற்று புத்தகத்தைத் தேடி வாசித்த போது அந்த மனிதர் தன் நாட்டின் மீது கொண்டிருந்த பற்றும் நம்பிக்கையும் வியப்பளித்தது.
1922ல் பிறந்த ஒனோடா இரண்டாம் உலகப் போரின் சமயம் இராணுவத்தின் கொரில்லா படையில் சேர்கிறான். பொதுவாக, அப்போதிருந்த ஜப்பானிய வீரர்கள் தோல்வி என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்பவர்கள் இல்லை. அப்படி பின்னடைய நேர்ந்தால் கூட தற்கொலை செய்து கொள்ளவே அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தது.
ஒனோடாவிற்கு அளிக்கப்பட்ட பயிற்சி அதிலிருந்து மாறுபட்டது. அதில் தற்கொலை என்ற பேச்சுக்கே இடமில்லை. தனித்து ஒருவனாய் நின்றால் கூட ஒளிந்திருந்து தன்னால் இயன்ற அழிவை எதிரிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று அவனுக்குப் போதிக்கப்படுகிறது.
டிசம்பர் 1944ல் பிலிப்பைன்ஸிலிருக்கும் லுபாங் தீவிற்குப் பணி நிமித்தமாகச் செல்கிறான் ஒனோடா. அங்கு, தன்னுடையதிலிருந்து மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்த ஜப்பானிய வீரர்களுடன் இணைந்து வேலை செய்வது அவனுக்குச் சிரமமாயிருக்கிறது.
அந்த நேரம் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானுக்குப் பின்னடைவு ஏற்படுகிறது. அதை ஏற்றுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளவோ அல்லது சரணடையவோ தயாராகும் மற்ற வீரர்களை அவன் வெறுக்கிறான்.
ஒனோடா தன் கொள்கையுடன் ஒத்துச் என்ற மூன்று வீரர்களுடன் பிலிப்பைன்ஸ் காடுகளுக்குள் தஞ்சம் கொள்கிறான். அங்கிருந்து தனது போராட்டங்களைத் தொடர்கிறான்.
சிறிது நாட்களில் காடு அவன் வயப்படுகிறது. அங்கிருக்கும் இடங்கள் அவனுக்கு பழகிப் போகின்றன. அதுவே அவனுடைய பலமாகவும் எதிரிகளின் பலவீனமாகவும் மாறுகிறது.
காட்டிற்குள் ஜப்பானியர்களைத் தேடிவரும் காவலர்களை அவனும் அவனது சகாக்களும் துப்பாக்கிகள் கொண்டு வீழ்த்துகிறார்கள்.
இப்படி காட்டிற்குள்ளாகவே திரிந்ததால் 1945 ஆகஸ்டு மாதம் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது குண்டு வீசப்பட்டதோ, அதனைத் தொடர்ந்து ஜப்பான் சரணடைந்ததோ அவனுக்குத் தெரியாமலே போகிறது. அவனும் அவனது சிறுகுழுவும் நேசநாடுகளுக்கு எதிராகப் போராடியபடி இருக்கிறார்கள்.
ஒருநாள் மரங்களுக்கிடையேயிருந்து, போர் முடிந்துவிட்டது காடுகளிலிருந்து வெளியே வாருங்கள், என்ற தகவல் கொண்ட துண்டுத்தாளை அவன் கண்டெடுக்கிறான். அது தன்னை ஏமாற்ற அமெரிக்கா செய்யும் சதி என்று நினைக்கும் அவன் தனக்குள்ளாக சிரித்துக் கொள்கிறான்.
1945 தாம் ஆண்டின் முடிவில் ஜெனரல் யமாஷிடா கையெழுத்திட்ட சரணடையும் ஆணை காட்டிற்குள் வானூர்தி மூலமாக போடப்படுகிறது. அதை ஆய்வு செய்யும் அவனும் அவனுடைய சகாக்களும், அமெரிக்கா தோற்கும் நிலைக்குச் சென்று விட்டது, அதனால் தான் இவ்வளவு தீவிரமாக தங்களை ஏமாற்றி, காட்டை விட்டு வெளியேற்ற முயற்சி செய்கிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
தன் மேலதிகாரிகள் போர்க்கைதிகளாய் தண்டனைப் பெற்று இறந்து போனதை அவர்கள் அறியவேயில்லை.
அவர்கள் நால்வரும் காட்டிற்குள்ளாக வாழ பழகிக் கொள்கிறார்கள். உணவு குறைந்த போதெல்லாம், காட்டிற்கு அருகிலிருக்கும் கிராமங்களுக்குச் சென்று அரிசி மூட்டைகளைத் திருடி வருகிறார்கள்.
ஓரிடத்தில் தங்கியிருந்தால் அமெரிக்க வீரர்கள் தம்மை எளிதாகப் பிடித்துவிடுவார்கள் என்று எண்ணும் அவர்கள், சில நாட்களுக்கு ஒரு முறை தங்கள் இருப்பிடத்தை மாற்றியபடி காட்டைச் சுற்றி வருகிறார்கள். சிரமமான வாழ்க்கை முறை அவர்களுக்கு மிகவும் களைப்பைத் தருகிறது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து இயங்குகிறார்கள்.
1949 ஆம் ஆண்டு, அவர்களுடனிருந்த Yuichi Akatsu சரணடைந்து விடுகிறான். இதனால் தங்கள் பாதுகாப்பிற்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதாய் நினைக்கும் மீதமிருந்த மூவரும் விழிப்புடன் இருக்க முடிவுசெய்கிறார்கள்.
1952ல் அவர்களின் குடும்பங்களின் புகைப்படங்கள் இணைத்து காட்டிற்குள் போடப்பட்ட கடிதங்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றன. நெகிழ்ந்து போகிறார்கள். ஆனாலும் அதுவும் எதிரிகளின் சதி என்றே எண்ணுகிறார்கள்.
அடுத்த சில மாதங்களில் ஒனோடாவின் சகாக்கள் இருவரும் சண்டையின் போது துப்பாக்கி சூட்டில் இறந்து போகிறார்கள். ஒனோடா தனியொருவனாகிறான்.
ஜப்பானும் பிலிப்பைன்ஸும் இணைந்து எவ்வளவு முயற்சித்தும், தனது நாடு தோற்றுப் போகாது என்ற அவனது நம்பிக்கையை மாற்ற முடியவில்லை.
1974ஆம் ஆண்டு Norio Suzuki என்ற சற்றே மூளைக் கலக்கமடைந்த ஜப்பானிய ஆடவன் Lieutenant Onoda, a wild panda, and the Abominable Snowman இவர்களை அதே வரிசையில் கண்டுபிடிக்கப்போவதாகச் சொல்லி புறப்படுகிறான். நான்கு நாட்களில் ஒனோடாவைக் கண்டுபிடித்து விடும் அவனாலும் கூட ஒனோடாவைச் சமாதானப்படுத்த முடியவில்லை.
தனது மேலதிகாரி வந்து தன்னை பொறுப்பிலிருந்து விடுவித்தாலே தவிர தன்னால் அங்கிருந்து வெளியேற முடியாது என்று சொன்ன ஒனோடாவுக்காக, அவனுக்கு மேலதிகாரியாய் இருந்துவ் அப்போது புத்தக விற்பனையாளராக மாறிவிட்டிருந்த Major Yoshimi Taniguchi யை பிலிப்பைன்ஸூக்க்கு அனுப்புகிறார்கள்.
அவர் சொன்ன தகவல்களைக் கேட்ட ஒனோடா உடைந்து போய் அழுகிறான். Yoshimi Taniguchi, அவனைப் பொறுப்பிலிருந்து விடுவிப்பதாகச் சொன்ன பின்னரே அவன் தன்னிடமிருந்த ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு சரணடைகிறான்.
போர் நடந்து கொண்டிருந்ததாக நம்பியே அவன் அதுவரை கொலைகளைச் செய்தான் என்பதால் அவனுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுகிறது.
ஜப்பானுக்குத் திரும்பும் அவன் மிகவும் பிரபலமாகிவிடுகிறான். ஆனால் இப்போது ஜப்பான் அவனுக்கு அந்நியமாகியிருக்கிறது. அது தனது இரண்டாம் உலகப்போர் காயங்களை துடைத்தெறிந்து விட்டு மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறத் துவங்கியிருக்கிறது.
மேற்கத்திய நாடுகளை எதிர்த்துப் போராடிய தன்னுடைய முப்பதாண்டுக் கால உழைப்பிற்கு எந்தவொரு பலனும் இல்லை என்பதை உணர்ந்து வருந்தும் ஒனோடா பிரேசிலுக்குச் சென்று விடுகிறான்.
திரைப்படங்களில் வருவது போன்றவொரு வாழ்க்கை ஒனோடாவினுடையது. ஒனோடாவின் நோக்கம் சரியா தவறா என்பதையெல்லாம் தாண்டி தன் நாட்டின் மீது அவன் கொண்டிருந்த பற்று அவன் மீது ஒரு வாஞ்சையை உருவாக்கவே செய்கிறது.