புதன், 14 நவம்பர், 2018

என்னுள்ளே என்னுள்ளே


‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடலை இன்று கேட்ட போது இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கி ஶ்ரீவள்ளி மற்றும் ப்ரபாகர் சார் நினைவுகளில் விழுந்தேன். ஆம், அப்போது மிண்ட் ஸ்ட்ரீட்டிலிருந்து வந்த ஹிந்தி சாரின் பெயர் ப்ரபாகர் என்று தான் நினைவு. அவருக்கு அன்று இருபத்தெட்டு வயது இருந்திருக்கும் என்று கணிக்கிறேன்

பத்தாவது முடித்த லீவில் டைப்ரைட்டிங்கும் ஹிந்தியும் கற்றுக் கொள்வது அப்போதைய ட்ரெண்ட். அப்படித் தான் கிருஷ்ணா இன்ஸ்ட்டிட்யூட்டில் ஹிந்தி க்ளாஸ் சேர்ந்தேன். மூக்கிலிருக்கும் வியர்வையை அடிக்கடி கர்ச்சீப்பால் துடைத்துவிட்டுக் கொள்ளும் மெலிந்த உயரமான ஶ்ரீவள்ளியை அங்கு தான் சந்தித்தேன்.

பயங்கர ஆர்வக்கோளாறு கொண்டிருந்த சமயம் அது. ஆம், ஆத்மி என்று சில வார்த்தைகளையும் ஒரு வாக்கியத்தை எப்படி அமைப்பது என்ற அடிப்படையையும் கற்றுக் கொண்ட நாளில் என் கற்பனை சிறகடிக்கத் தொடங்கியது. ஒரு சிறுகதை எழுதிக் கொண்டு போய் ப்ரபாகர் சாரிடம் காட்டினேன்.

என் ஆர்வத்தைப் பார்த்து புன்னகைத்த அவர், கொஞ்சம் பொறுக்கச் சொல்லி அன்றைய வகுப்பில் ஒரு வாக்கியத்தை இன்னும் முறையாக எப்படி எழுதுவது என்று கற்றுக் கொடுத்தார். (என் முதல் சிறுகதை முயற்சி ஹிந்தியில் இருந்திருக்கிறது) மறுநாள் அதைத் திருத்தி கொண்டுபோய் மீண்டும் காட்டினேன். மீண்டும் புன்னகைத்தார். என்ன நினைத்துப் புன்னகைத்திருப்பார் என்று இப்போது புரிகிறது.

ப்ராத்மிக் பாஸாகி மத்யமாவிற்குச் சென்ற நாட்களில் சிறு மாற்றம். நாங்கள் வகுப்பிற்குச் செல்லும் போது, முன்பே வந்திருக்கும் ஶ்ரீவள்ளியுடன் ப்ரபாகர் சார் பேசிக் கொண்டிருப்பார். நாங்களும் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.

ஒருநாள் நாங்கள் வகுப்பிற்கு வரும் போது ஶ்ரீவள்ளி அங்கு இல்லை. ப்ரபாகர் சாரும் தலையெல்லாம் கலைந்து போய் அயர்ன் பண்ணாத சட்டையுடன் அன்று லேட்டாக வந்தார். வகுப்பு முடிந்ததும், நாங்கள் ‘என்ன சார் ஆச்சு?’ என்று கேட்க, அவரது கண்கள் கலங்கி விட்டன. அதுவரை ஆண்கள் கலங்கி நான் பார்த்ததில்லை.

‘நேற்று ஶ்ரீவள்ளியோட மாமாக்கள் வந்து என்னை அடிச்சுட்டாங்க’ என்று பிசிறு தட்டிய குரலில் சொல்லி கட்டை விரலைக் காட்டினார்.
அப்பொழுது தான் இருவரும் காதலித்திருக்கிறார்கள் என்று என் களிமண் மண்டைக்கு உறைத்தது. அப்பொழுதெல்லாம் காதலென்பது எங்கள் அகராதியில் கெட்ட வார்த்தை. திகைத்துப் போனோம்.

அதன் பிறகு ஷேவ் செய்யாத கலைந்த உருவமாய் வந்து போனார் ப்ரபாகர் சார். பழைய கலகலப்பான சாரைப் பார்க்க முடியாத வருத்தத்தில் நாட்கள் சென்றன.

ஒரு நாள் வகுப்பு முடிந்ததும், என்னிடமும் லலிதாவிடமும் அவரது தொலைப்பேசி எண் எழுதியிருந்த தாளைக் கொடுத்து ஶ்ரீவள்ளியின் வீட்டிற்குச் சென்று அதைச் சேர்த்துவிட முடியுமா என்று கேட்டார். பயமாயிருந்தது. ஆனாலும் சரி என்றோம்.

அவருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை விட, அப்போது டெக்கில் பார்த்த சின்ன தம்பி முதலிய படங்கள் கொடுத்த அசட்டுத் துணிச்சலும், அதிலிருந்த த்ரில்லுமே எங்களை நகர்த்தியிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.

ஶ்ரீவள்ளியின் வீட்டில் அவளைப் பார்க்க எங்களுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அவளது அம்மா நன்றாகப் பேசினார். ஆனால் அம்மா சென்று விட்ட பிறகும் கூட ஶ்ரீவள்ளியின் தம்பி எங்களுடனே தொக்கி நின்றான். எப்படியோ, அந்தத் தாளை ஶ்ரீவள்ளியிடம் சேர்த்துவிட்டுத் திரும்பினோம். அதன் பிறகு நாங்கள் அவளைப் பார்க்கவே இல்லை. எங்கள் ஹிந்தி சாரும் மாறிவிட்டார்.

மத்யமாவிற்குப் பின்னர் நான் ஹிந்தி க்ளாஸ் போகவில்லை. ஹிந்தி பேசும் நல்லுலகமும் ஒரு நல்ல சிறுகதையாசிரியரை இழந்தது.
அடுத்த சில மாதங்களில் ஶ்ரீவள்ளிக்கு அவளது மாமாவுடன் திருமணம் நடந்து விட்டதாகக் கேள்விப்பட்டோம்.

வள்ளி படத்தின் குறிப்பிட்ட அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் இருவரையும் பார்த்துப் பேச வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் எழுந்தபடியிருக்கிறது. அதை ஶ்ரீவள்ளி நிச்சயம் விரும்பமாட்டாள், ஆனாலும் சார் எழுதிக்கொடுத்த அந்தத் தாளின் நினைவுகளையும் அதைச் சுமந்து வந்த எங்களையும் ஶ்ரீவள்ளி  மனதின் மூலையில் ரகசியமாய் இன்னமும் ஒளித்து வைத்திருப்பாள் தானே!

வெள்ளி, 9 மார்ச், 2018

வசந்தா மிஸ்

“என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும்.

ஒருகாலத்தில் என் கணக்கும் அப்படி தான் ஆட்டம் கண்டு கொண்டிருந்தது. அன்றைக்கு என் படிப்பு 35 மதிப்பெண்களைக் குறி வைத்தே இருந்தது. அப்பொழுதெல்லாம் வகுப்பிற்கு வெளியே தரையில் உட்கார்ந்து பேடை மடியில் வைத்து பரீட்சை எழுதுவோம்.
12 X 44 X 6 X 0 =?
இது என் பரீட்சையில் ஒரு கேள்வி.
பென்சிலை மடியில்  வைத்துவிட்டு, பள்ளித் திடலில் குடை விரித்திருந்த மரத்தைப் பார்த்தபடி கொஞ்சம் நேரம் யோசித்தேன். பின்னர் நாக்கைத் துருத்தியபடி குனிந்து,
12 X 44= 528,
520 X 6= 3120
செய்த Transfer Errorஐக் கவனிக்காமல் மேலும் தொடர்ந்தேன்.
3120 X 0 = ம்ம்ம் . . .
இவ்வளவு பெரிய நம்பரை ஜீரோவால் பெருக்கினால் ஜீரோ என்பதை நம்ப மனமின்றி, எண்காருணிய அடிப்படையில் 3120வையே விடையாகப் போட்டு, அந்தக் கணக்கிற்கு, பூஜ்ஜியம் மதிப்பெண்களைப் பெற்றேன். அந்த அளவிற்கான பொது அறிவே அன்றைக்கு எனக்கு இருந்தது.

இப்படியாகத் தட்டுத் தடுமாறி ஒன்பதாம் வகுப்பில் நுழைந்த போது, செந்தூரத்தால் நீளமாய் ஒற்றை நாமமிட்டு, தளர்வான பின்னலுடன்  வஸந்தா மிஸ் வகுப்பாசிரியராய் வந்தார். கணக்கே வராத எனக்கு,  ஏனோ முதல் பார்வையிலேயே அவரைப் பிடித்துவிட்டது. அந்த பிடித்தல் அதிகமாகி பின்நாட்களில், ‘த’வின் வாலைக் கூடுதலான ஒரு வளைவுடன் இழுத்து விடும் அவரின் ஸ்டைலை நானும் முயற்சித்து தமிழாசிரியரிடம் திட்டு வாங்கினேன்.

கணக்குப் பாடத்தின் முதல் நாள் . . .
கணக்கைச் சொல்லிக் கொடுத்து விட்டு, யாராவது ஒரு மாணவர், கணக்கை போர்டில் செய்து காட்டுங்கள் என்று அவர் சொல்ல, ஏதோ ஒரு உந்துதலில் சட்டென கையைத் தூக்கி, கரும்பலகைக்கு அருகில் சென்றேன். அங்கு சென்று நின்ற போது தான் தன்நிலையை அடைந்தேன். அங்கிருந்து பார்க்கையில் வகுப்பே வித்தியாசமாகத் தெரிந்தது. அதுவரை புரிந்தது போலத் தோன்றிய கணக்கு அந்நியமாகியிருந்தது. எதையோ எழுதிவிட்டு, ‘உனக்கு எதுக்கு இந்த வேலை?’ என்று கேட்ட பெண்ணின் பக்கத்திலிருந்த என் இடத்தில் அமர்ந்தேன். உலகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. தவறாகிப் போன கணக்கையும் மீறி, ஆசிரியரிடம் என்னை அடையாளப்படுத்திக் கொண்டது மகிழ்ச்சியாய் இருந்தது.
எல்லோரிடமும் சகஜமாய் பழகிய வசந்தா மிஸ்ஸின் வீட்டு விலாசத்தை வாங்கி, அந்தத் தீபாவளிக்கு, ரோஜாப்பூக்கள் கொண்ட ஒரு வாழ்த்து அட்டை கூட அனுப்பி வைத்தேன்.
தீபாவளி முடிந்து வகுப்பிற்கு வந்த அவர், அந்த அட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தார். புன்னகைத்தபடி அவர் நீட்டிய வாழ்த்து அட்டையை எட்டிப் பார்த்தால், அதில் என் தோழியின் பெயரை எழுதி வைத்திருந்தேன். அவருக்கும் என் தோழிக்கும் ஒரே நேரத்தில் வாழ்த்தை எழுதி, விலாசம் மாற்றி அனுப்பி வைத்திருக்கிறேன்! அதைச் சொல்ல மீண்டும் அவரிடம் புன்னகை.

டியூஷன் எடுப்பதற்காக எங்கள் விடுதிக்கு அவர் வந்த போது, எங்க மிஸ் என்று எனக்குப் பெருமையாக இருந்தது. வெள்ளைத் தாட்கள் வைத்து அப்பா தைத்துத் தந்த லாங் சைஸ் ரஃப் நோட்டில் மார்ஜின் வரைந்து வைத்து, அவர் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். மார்ஜின் வரைந்து வைத்திருந்ததற்காகவே, என் நோட்டை வாங்கி அதில் தான் கணக்கைப் போட்டு சொல்லித் தருவார் அவர். இது மற்ற மாணவிகளுக்குத் அதிருப்தியைக் கொடுத்தாலும், எனக்கு அவருடனான நெருக்கத்தை அதிகப்படுத்தியது. அவர் கொடுக்கும் சவாலான கேள்விகளுக்கு என்னைத் தயார் படுத்திக் கொள்ள அதிக நேரம் பயிற்சி செய்தேன். மூலையில் யாரோ கசக்கிப் போட்டத் தாளில் கணக்குக் கேள்வி இருக்க, எடுத்து அதை சால்வ் செய்து அவரிடம் காட்டி சரியா என்று கேட்டேன். இப்படியாக, மெல்ல மெல்ல அவருக்கு விருப்பமான மாணவியானேன். பத்தாவது பொதுப் பரீட்சையின் போது, கணக்குப் பரீட்சைக்கு முன்தினம், எனக்கு நல்ல ஜூரம்.
‘அதெல்லாம் கவலைப்படாதே! இத்தனை நாள் செய்த பயிற்சி வீணாகப் போகாது, நீ நன்றாகச் செய்வாய்!’ என்று சொல்லி அனுப்பினார்.

‘நீ கணக்கில 100 மார்க் எடுத்திட்ட தெரியுமா?’ என்று சொல்லி, மதிப்பெண் தாளை வாங்க நுழைந்த என்னை வரவேற்றவரும் அவர் தான். அன்று தான் அவரைக் கடைசியாகப் பார்த்தது.

பின்னர் பள்ளி மாறிவிட்டேன். அவ்வப்போது அவரை நினைத்துக் கொள்வேன். சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றும். பள்ளி இருந்தது தி.நகர் என்பதால் சென்னைப் போகும் போதெல்லாம் அந்தப் பக்கம் போகவும் செய்வேன். ஆனாலும் ஏதோவொரு தயக்கத்தில் பள்ளியை வெளியிலிருந்து பார்த்துவிட்டு திரும்பிவிடுவேன். இரண்டு வருடங்களுக்கு முன், சென்னை சென்றிருந்த நேரம், பள்ளி, பழைய மாணவிகளுக்கு பொதுவாய் ஒரு informal அழைப்பு விடுக்க, நானும் சென்றேன். உள்ளே நுழைந்தவுடன் எனது முன்னாள் ஆங்கில ஆசிரியரான பாகீரதி மிஸ் கண்ணில் பட்டார். வசந்தா மிஸ் திருச்சி பக்கம் சென்றுவிட்டதாகவும், தற்போது அவருடன் தொடர்பில் இல்லை என்றும் சொன்னார். ஏமாற்றத்துடன் திரும்பினேன்.

‘எனக்குக் கணக்கு வராது!’ என்று சொல்லிக் கொண்டு வரும் மாணவர்களைப் பார்க்கும் போது எனக்குள் வசந்தா மிஸ் வந்து அமர்ந்துவிடுகிறார். உடனே நான் கணக்கு மருத்துவராய் மாறி விடுகிறேன். அந்த மாணவருக்கு கணக்குப் பாடத்தில் எங்குப்  பிரச்சனை துவங்குகிறது என்பதை முதல் வகுப்பில் ஆராய்ந்து, அதைப் போக்கும் வழிகளை அவருக்கேற்ப உருவாக்குகிறேன். மீண்டும் மீண்டும் பயிற்சி கொடுத்து, கணக்கைப் பார்க்கும் போதெல்லாம் துப்பறியும் நிபுணர்களாய் மாறக் கற்று கொடுக்கிறேன். சிதறிக் கிடக்கும் தடயங்களை வைத்து விடை கண்டுபிடிக்கும் வேலையை ரசனையுடன் அவர்கள் செய்வதைப் பார்த்து திருப்தி கொள்கிறேன். என்றேனும் ஒரு நாள் வசந்தா மிஸ்ஸை சந்தித்து, அவர் தான் இதற்குக் காரணம் என்று சொல்லியே ஆகவேண்டும். முடியுமா என்று தான் தெரியவில்லை!

வியாழன், 8 மார்ச், 2018

அஃறிணைக் கடவுள்


‘இன்றாவது என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு மன உளைச்சலினால் யாரிடமும் கத்தக்கூடாது’ என்று அவன் நினைத்துக் கொண்டிருந்த போதே, ‘வள்’ என்றது நிக்கி. அதன் ‘வள்’ளலில் எள்ளல் பாவம் தொக்கி நின்றதாய்த் தோன்றியது. ரத்தம், நாளங்களுள் வேகமாய் பரவி, நிக்கியைக் காலால் எத்திவிடும் ஆவலைத் தூண்டியது.
‘ஓம் சாந்தி ஹி!’
‘உன்னால் என் திடத்தை உடைக்க முடியாது, போ நாயே!’
தன் உடலின் கடைப் பகுதியை அவனுக்குக் காட்டியபடி அறைக்குள் சென்றது நிக்கி.
பொதுவாய் எரிச்சலை ஏற்படுத்தக் கூடிய காரணிகள் அனைத்தும் நேற்றைய பிரம்ம முகூர்த்தத்தில் விமானமேறி பத்திரமாய் சென்னையை அடைந்துவிட்டன.
‘நானாவது… கத்துவதாவது?'
மேசையிலிருந்த காயாவை எடுத்து, அதன் மீது ஒட்டியிருந்த ஒன்றிரண்டு எறும்புகளை நசுக்காமல் தட்டிவிட்டான். எறும்புகளே! நான் உங்கள் கடவுள். உங்களைக் கொல்லாமல் ரட்சித்தேன். இதை ஒரு கவிதையாக்கி முகநூலில் போட்டால் இருபது லைக்குகளாவது பெரும் என்று தோன்றியது.
‘கணவா! உனக்கு எவ்வளவு பவர் வேணுமானாலும் இருக்கட்டுமே! அதெல்லாம் வேலையிடத்துல மட்டும் தான்! ஒரு நாள், ஒரே ஒரு நாள் நீ கத்தாம இருந்துட்டா, என் பேரை கட்டெறும்புன்னு மாத்திக்கறேன்!’
அவள் பெயரை சிற்றெறும்பு என்று மாற்றுவதில் கூட அவனுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் என்ன திமிர்!
காயாவை மீண்டும் அங்கே வைத்த போது, இன்னும் சில எறும்புகள்…. துணியை எடுத்து அவற்றை லாவகமாகத் தள்ளிவிட்டு மீண்டும் கடவுளானான்.
கணினியில் ஆங்கிலப் படம் ஒன்றைச் சத்தமாய் ஓடவிட்டான்.
‘காலையில எழுந்து இதில உட்கார்ந்துகிட்டா, மத்த வேலையெல்லாம் எப்படி நடக்கும்!’
சுவாரஸ்யமான படத்தின் நடுவில், கட்டெறும்பின் குரல் காலைக் கடிக்க, சினம் சர்ரென நரம்புகளுள் ஊடுருவியது. கடித்தது மனைவியின் குரல் அல்ல, நிஜ எறும்பு.
அதை அழுத்தமாய் அதே சமயம் உயிர் போய்விடாதபடிக்குப் பற்றித் தூர வீசினான். பிடித்த பிடியில் தன் கோபத்தை உணர்த்தி விட்டதாய் நினைத்தான். ஆனால் இன்று அவனுக்குச் சுரணையற்று போய்விட்டதாக எண்ணிய அவ்வெறும்பு, காதில், பின் கழுத்தில், முதுகின் கைக்கெட்டாத பகுதியில் என்று மாறி மாறி ஊரத் துவங்கியது. ஆத்திரத்தில் தெய்வ குணத்தைத் துறந்து, அதைப் பிடித்து நசுக்கினான். இருந்தும் பிரச்சனை தீரவில்லை. எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு பார்த்த போது, எறும்புப் படையே தன்னைக் குறி வைத்திருப்பதை உணர்ந்தான்.
எறும்புகள் வந்த திசையை ஆராய்ந்ததில், மானசி புதைத்து வைத்திருந்த சாக்லேட் துண்டு கிடைத்தது. அதைத் தூக்கி வீசி, எறும்புகளைப் பெருக்கி, நாற்காலியைத் துடைத்த போது, மலையைத் தூக்கி மறுபக்கம் வைத்த அயற்சி ஏற்பட்டிருந்தது. கணினியை அணைத்துவிட்டு அப்படியே சோஃபாவில் சாய்ந்தான். அவனுக்குச் சுகமாய் உறக்கம் வந்த நேரம் எறும்புகள் விழித்துக் கொண்டன. தலையில் கிரீடம் அணிந்து கடவுளாகி, பன்னிரண்டாவது மாடியிலிருந்து வீசுவதற்காக அவனைத் தூக்கிச் செல்லத் துவங்கின. “விட்டா, நீங்க பாட்டுக்குப் போயிட்டே இருக்கீங்க! என்னோட பவர் உங்களுக்குத் தெரியாது! உங்களை…..!” என்று கத்தியவாறு எழுந்தவனை, மூலையில் படுத்திருந்த நிக்கி அலட்சியமாய்ப் பார்த்துவிட்டு மறுபுறம் திரும்பிக் கொண்டது.

இரண்டாவது ஆண்

“நாம போன மாசம் படத்துக்குப் போனது எப்படியோ ஐரினுக்குத் தெரிஞ்சிருக்கு. வீட்டில ஒரே பிரச்சனை”
சரயுவின் மனதில் என்றோ விழுந்திருந்த அச்சப் புள்ளி, மடமடவென அசுரத்தனமாய் வளர்ந்து குரல்வளையைப் பிடிக்கத் துவங்கியது. மார்ட்டினின் வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்த வார்த்தைகள் தம் அர்த்தத்தை இழந்து, அவளின் மேல் பட்டு நாற்திசைகளிலும் தெறித்தபடியிருந்தன. அவற்றின் சாரம் மட்டும் அவளது மூளைக்குள் மெல்ல சொட்டிச் சென்று, உறைந்து போயிருந்த அதை உசுப்ப முயற்சித்தது.
“அன்றையிலிருந்து நம்ம என்ன செய்யறோம்ன்னு கவனிக்க ஆரம்பிச்சிருக்கா!”
இனி வார நாட்களின் மாலையில் மார்ட்டினின் ஷூக்கள் அவளது வீட்டு வாசலில் இருக்காது.
“நேத்து அவங்க அம்மாவும் ஊரிலிருந்து வந்துட்டாங்க. ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு. . .”
எதிர்வரும் முன்னிரவுப் பொழுதுகளில் கிரண் பேசுவதற்கு ஆளின்றி தனித்து அமர்ந்திருப்பான்.
“நைட்டும் வீட்டில சாப்பிடல. காலையில கூட . . .”
இனி மேல் வரப்போகும் சனிக்கிழமைகளில் கிரணும் அவளும் மட்டுமே ஸ்னோ பௌலிங்கிற்கோ, கருடா மாலுக்கோ செல்வார்கள்.
அப்படி தாங்கள் வாழ்ந்த, மார்ட்டினின் வருகைக்கு முந்தைய காலங்கள், அர்த்தம் பொதிந்திருந்தும் சுவாரஸ்யமற்றுப் போன ஈஸ்ட்மென் கலர் படமாய் அவளது மனதின் பின்னணியில். . .
காலம் விடுவிடுவென இருபத்தாறு மாதங்கள் பின்நழுவ, இவளது குழுவில் வேலை செய்யப் போகிறவன் என்று மேலாளர் நீல சட்டை அணிந்திருந்த மார்ட்டினை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சரயுவின் பிரத்தியேக உணர்வுகளைத் தீண்டக் கூடிய எந்த அடையாளமும் இன்றி கைகுலுக்கி புன்னகைத்தான் அவன்.
“ஐ நீட் யுவர் ஹெல்ப் இன் திஸ் ப்ராஜக்ட். கவலைப் படாதீங்க, இந்த வேலை பழகற வரைக்கும் தான், ரொம்ப படுத்த மாட்டேன்!”
சரயுவைச் சட்டென இரண்டு விஷயங்களில் அவன் கவர்ந்தான். ஐ.டியில் வேலை செய்பவர்கள், பிற தமிழர்களிடம் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று அவன் வைத்திராத கொள்கையில், வெளிப்படையாக உதவிக் கேட்டதில். அவளுக்கு அவன் மீது முதல் ஈர்ப்பு விழுந்த புள்ளியும் அதுவாய் தான் இருக்க வேண்டும்.
முதல் மாத சம்பள தினத்தன்று இருவரும் காப்பி டேவிற்குச் சென்றார்கள். அவனுடைய அமெரிக்க கனவு, இருவரின் கல்லூரி நாட்கள், நம்பிக்கைகள் என்று பயணித்த பேச்சினூடாக, அலுவல் நிமித்தமாகவன்றி கடைசியாக ஒரு ஆணுடன் இப்படி தனியாக அமர்ந்து, பிறரைப் பற்றிய கவலையின்றி பேசி, ரசித்துச் சாப்பிட்டது எப்பொழுது என்று யோசித்தாள் சரயு.
“ஆறரைக்கே வேலை முடிஞ்சுடிச்சி இல்லை! வீட்டுக்கு வர ஏன் இவ்வளவு நேரம்?”
“நைட் எட்டரை மணிக்கு அவன் ஏன் உனக்கு போன் பண்ணறான்?”
அன்று, மார்ட்டின் இரண்டு வயது ரேச்சலுக்கு தகப்பன் என்பதை அறிந்தாள் சரயு. தன்னைச் சுற்றிப் போட்டுக் கொண்டிருந்த சம்பிரதாய வேலியைத் தளர்த்தி, தனக்கு ஏழு வயது கிரண் இருப்பதைச் சொன்னவள், விவாகரத்து ஆகிவிட்டதைச் சொல்லாமல் தவிர்த்தாள். அதன் பின்னர் வந்த தினங்களின் உணவு இடைவேளைகளை இருவரும் அவர்களுடையதாக்கிக் கொண்டார்கள். மார்ட்டினுடனான பேச்சினூடாக வளர்ந்த தோழமையின் மூலம், தன் மனதின் பதின்ம வயது சாளரங்கள் திறந்து கொள்வதை சரயு உணர்ந்தாள்.
அன்று மதியம் சாப்பிட்டு முடித்ததன் எச்சமாய், சரயுவின் கேபினில் நின்றபடி, அன்று நடந்து கொண்டிருந்த கிரிக்கெட்டைப் பற்றிய தன் வருத்தங்களை மார்ட்டின் பகிர்ந்து கொண்டிருந்தான். அவனை இடைவெட்டியது சரயுவுக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு.
“மேடம், வீ ஆர் காலிங் ஃப்ரம் கிட்ஸ் க்ளோபல் ஸ்கூல், ஐ ஏம் கிரண்ஸ் மேக்த்ஸ் டீச்சர் ஹியர்”
“ஓக்கே. . .”
“லஞ்ச் ப்ரேக் முடிஞ்சு முதல் பீரியட், திடீர்ன்னு கிரண் வாந்தி எடுத்தான். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி ஸிக் ரூமுக்கு அழைச்சுகிட்டு போகும் போதே மயங்கி விழுந்திட்டான்”
“இப்ப எப்படி இருக்கான், ஸார், ப்ளீஸ் யாராவது டாக்டரைக் கூப்பிட்டு ஏதாவது பண்ணுங்க. நான் உடனே கிளம்பி வரேன்!”
“இப்ப ஹாஸ்பிடலுக்கு தான் மேடம் போயிட்டிருக்கோம். நீங்க நேரா மராத்தாஹள்ளியில இருக்க ரெயின்போ ஹாஸ்பிடலுக்கு வந்திடுங்க! வந்து இதே நம்பருக்குக் கூப்பிடுங்க! நான் அவன் கூட தான் இருப்பேன்”
பீறிட்டெழுந்த கண்ணீரை அடக்க பிரயச்சித்தம் செய்தபடி திரையில் தெரிந்த சிவப்பு பொத்தானை அழுத்த முயன்றாள் சரயு. கைநடுக்கத்தில் இரண்டு முறை தவறி பின்னர் அழைப்பே தன்னைத் துண்டித்துக் கொண்டது. மீண்டும் மீண்டும் கீழே நழுவிய கைப்பையை எடுக்க முயற்சித்தபடி, மார்ட்டினிடம் சுருக்கமாக நடந்ததைச் சொன்னாள்.
சட்டெனச் சூழலைத் தன் கையில் எடுத்துக் கொண்டான் மார்ட்டின். சரயுவைச் சற்று நேரம் அமரச் சொன்ன அவன், ஏஸியின் தகடுகளை அவளை நோக்கித் திருப்பினான். பின்னர் வெளியே சென்று மேலாளரிடம் சரயுவுடன் தனக்கும் சேர்த்து விடுமுறை சொல்லி விட்டு, ஸ்கூட்டி பக்கமாய் சென்ற அவளைத் தடுத்து தன் பைக்கை எடுத்தான். முக்கியப் பணியை பிறர் தோள்களில் சுமத்திவிட்டு தன் கவலைக்குள் மட்டுமே அமிழ்ந்து கிடப்பது கூட வரம் தான் என்பதை மருத்துவமனையை நோக்கிய அப்பயணத்தில் உணர்ந்தாள் சரயு.
பச்சைப் போர்வைக்குள் கண்களை மூடித் துவண்டிருந்த கிரணைப் பார்த்த நொடியில் சுற்றிலுமிருந்த பொருட்கள் மொத்தமும் சரயுவின் பார்வையிலிருந்து மறைந்து போயின. அவளது கால்கள் தம் கனத்தை இழந்து துவளத் துவங்கியது.
“ஏம்மா, நீ சின்ன பிள்ளையைத் தனியா வச்சி எப்படி பார்த்துப்ப? திடீர்ன்னு உடம்பு சரியில்லைன்னா என்ன பண்ணுவ? நாங்க கிளம்பி வர ஆறு மணிநேரமாவது ஆகும்! குழந்தை நாள் முழுக்க டே கேர்ல இருந்தா ஏங்கிப் போயிடுவான்”
ஏதோவொரு குற்றவுணர்வு அவளைப் பற்றிக் கொள்ள, கிரணின் படுக்கைக்கு அருகில் மண்டியிட்டு, அவனது கன்னத்தில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
மார்ட்டின் மொத்த மருத்துவச் சம்பிரதாயங்களையும் கவனித்துக் கொண்டான். கிளம்பும் போது, பிஸ்கட்டுகளையும் பழச்சாறையும் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவளது ஸ்கூட்டியின் சாவியையும், வீட்டு விலாசத்தையும் வாங்கிச் சென்றான்.
இனி பயப்படவேண்டியது இல்லை என்று மருத்துவமனையில் கூறியதும், அன்றிரவே மகனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினாள் சரயு.
இரவு கிரண் படுக்கையில் சலனமின்றி படுத்திருக்கும் நேரமெல்லாம், அவன் மயங்கியிருக்கக் கூடும் என்று அவளுக்குப் பயமாக இருந்தது. தன் வாழ்வின் ஒரே பிடிப்பாக இருக்கும் அவனை இழந்துவிடுவோமென்ற அச்சம் அவளைக் கண்ணயர விடவில்லை.
“சம்பளம் அவ்வளவு இல்லாட்டியும் பரவாயில்லை! இங்கேயே பக்கத்தில எங்காவது வேலையைப் பார்த்துக்கக் கூடாதா! ரங்கநாதன் பையன் விப்ரோவில் டீம் லீடரா இருக்கான். அவன்ட்ட பேசி பார்க்கட்டுமா?”
“கூட வந்து இருக்கலாம்ன்னா, உடம்பு முன்ன மாதிரி இல்லை! இங்க பழகின இடம். சட்டுன்னு டாக்டரப் பார்க்க வசதியா இருக்கும்! அம்மாவை வேணும்னா கூப்பிட்டுட்டு போறியா!”
“நான் போயிட்டா அப்புறம் நீங்க? ஏற்கனவே சுகர் தொண்டை வரைக்கும் நிற்குது!”
வார்த்தைகள் இரவு முழுவதும் அவளைத் துரத்தியபடி இருந்தன.
மறுநாள் மார்ட்டின் காமிக்ஸ் புத்தகமும் ஆப்பிளும் வாங்கிக் கொண்டு அவர்களின் வீட்டுக்கு வந்தான். அவனைப் பார்த்ததும் சரயுவிற்கு, தான் சாதாரணமாய் அணிந்திருந்த நைட்டியைப் பற்றிய பிரஞ்ஜை எழுந்தது. அதைப் புறந்தள்ளி புன்னகையுடன் ஸ்கூட்டி சாவியை வாங்கி ஆணியில் மாட்டிவிட்டு, சமையலறைக்குள் சென்றாள் சரயு.
“உங்களுக்கும் காமிக்ஸ் பிடிக்குமா, அங்கிள்?”
“உன் வயசில இதைத் தான் படிப்பேன்!”
“இப்ப அம்மா மாதிரி பெரிய புக்ஸ் படிப்பீங்களா? அதோ, அதெல்லாம் அம்மா புக்ஸ் தான். நானும் பெரிய புக்ஸ் படிப்பேன், ஆனா இங்லீஷ் புக்ஸ் மட்டும் தான்.”
சரயுவின் வைத்திருந்த டான் ப்ரௌன், சில்வியா வுல்ஃப், பொன்னியின் செல்வன், புதுமைப்பித்தன்களை வியப்புடன் அளைந்த படி,
“சரயு, கொஞ்ச நாள் போனா நீங்க வேலையை விட்டுட்டு ஒரு நூலகம் வச்சிடலாம்!” என்றான் மார்ட்டின்.
“விட்டா, சந்தோஷமா அந்த வேலையைச் செய்வேன்! ஆனா பணம் தேவைப் படுதே!”
வெங்காயம் வதங்கும் வாசனைக்கு நடுவிலிருந்து குரல் வந்தது.
ஒவ்வொரு புத்தகத்திலும், அதை வாங்கி வந்த தேதியையும், இடத்தையும் குறித்து வைத்திருந்தாள் சரயு. ஹிப்னாடிஸம் பற்றிய புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, காமிக்ஸை ஆர்வத்தோடு புரட்டிக் கொண்டிருந்த கிரணுக்கு அருகில் அமர்ந்தான் மார்ட்டின்.
“கிரண், புக்கை இவ்வளவு கிட்ட வச்சி படிச்சா சீக்கிரம் கண்ணாடி போட வேண்டி வரும்”
“நீங்களும் அதனால தான் கண்ணாடி போட்டிருக்கீங்களா, அங்கிள்”
“அந்த படத்தில இருக்கறது நீயா?”
தொலைக்காட்சியின் மீது வைக்கப்பட்டிருந்த அதன் அருகில் சென்று பார்த்த போது அதிலிருந்த சரயு ஒல்லியாக, இன்னும் இளமையாக இருந்தாள்.
“ஆமாம், அது என்னோட தேர்ட் பர்த்டேல எடுத்தது. பக்கத்துல இருக்கறது என்னோட மெட்ராஸ் தாத்தா, கேக்கை ஊட்டி விடுறது எங்க பாட்டி”
சரயுவின் கணவன் அந்தப் புகைப்படத்தில் இல்லை, அந்தக் கூடத்திலிருந்த மற்ற புகைப்படங்களிலும் கூட.
சரயு சூடான கிச்சடியைத் தட்டுகளில் கொண்டு வந்து சாப்பாட்டு மேசையில் வைத்தாள். பொதுவாய் ரவைப் பண்டங்கள் அவனுக்கு உவப்பாய் இருந்ததில்லை. ஆனால் அன்று ருசித்துச் சாப்பிட்டான். அதன் பிறகு நேரம் கிடைக்கும் அவர்கள் வீட்டுக்கு வந்து செல்லத் துவங்கினான் மார்ட்டின்.
கிரணுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவன் நெருக்கமாய்ப் பழகிய ஆண்கள் என்று யாருமில்லை. தனது தந்தையைக் கூடப் புகைப்படம் மூலமாக மட்டுமே அறிந்திருந்தான்.
எல்.கே.ஜி சேர்ந்த புதிதில், உடன் படிக்கும் மாணவர்களின் தந்தையர் எப்போதாவது பள்ளிக்கு வரும் போது, தங்கள் மகனை வாரி அணைத்துக் கொள்வதைக் கண்டிருக்கிறான். தன்னையும் ஒரு ஆண் அதே போல தூக்கிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அந்த மாணவனின் இடத்தில் தான் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வான்.
அம்மாவுடன், நண்பர்களின் பிறந்த நாள் விழாக்களுக்குச் செல்லும் சமயம் அங்கிருக்கும் ஆண்களுடன் நேரம் செலவிடுவதை அவன் மிகவும் விரும்பினான். முரட்டுத் துணியால் ஆன அவர்களது காற்சட்டையைக் கைகளால் தடவிப்பார்க்க அவனுக்கு மிகவும் பிடிக்கும். தங்கள் அருகில் வந்து கால்களை உரசியபடி நிற்கும் அவனது ஸ்பரிசத்தை உணர்ந்து, பெரும்பாலானவர்கள் அவனை மடியில் அமர வைத்துக் கொள்வார்கள். மடியில் உட்காரவைத்த ஆணின் மணத்தை ஆழ்ந்து உள்ளிழுத்து, தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பான் கிரண். அங்கு அமர்ந்திருக்கும் வரைத் தன்னை மிகவும் கம்பீரமானவனாய் உணர்வான்.
எல்லா நேரமும் இப்படி அமைந்து விடுவதில்லை. சிலர் அருகில் நிற்கும் அவனை அலட்சியப் படுத்தி கைத்தொலைப்பேசியில் இருப்பார்கள். அது வரை தன் அப்பாவைப் பற்றிய நினைவே இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு, இவன் அவர்களின் மடி மீது உட்கார்ந்திருக்கும் போது தான், தந்தையைப் பற்றி நினைத்துக் கொள்ளும்.
பாசம் புரண்டோட வந்து கால்களைக் கட்டிக் கொண்டு, இவனை இறக்கி விட்டே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கும். பெரும்பாலான ஆண்கள் இதற்கு மசிந்து, அவனை இறக்கி விட்டுவிடுவார்கள். தான் இறக்கப் பட்டதை விடச் சற்று முன்னர் தானிருந்த இடத்தைப் பிடித்திருக்கும் குழந்தைகளைப் பார்க்கும் போது அவனுக்குக் கோபமாய் வரும். அதை வெளிப்படுத்த வழியின்றி, கண்கள் கலங்க நிற்கும் அவனைச் சரயு இழுத்து அணைத்துக் கொள்வாள். கொஞ்சம் கொஞ்சமாய் இப்படிப்பட்ட நிகழ்வுகள் பழகிப் போய், ஆண்களுடன் பழகும் விருப்பத்தைக் குறைத்துக் கொண்டிருந்தான் கிரண்.
இப்போது தன்னுடன் அமர்ந்து கிரிக்கெட் பற்றியும், ஸ்டார் வார்ஸ் பற்றியும் பேசும் மார்ட்டினைப் பார்க்கும் போது ஆழப் புதைந்து கிடந்த ஆசைகள் மேலெழும்பத் தொடங்கின. சனிக்கிழமைகளில் தனக்கு இணையாக கிரிகெட் விளையாடும் மார்ட்டினை கிரணுக்கு மிகவும் பிடித்துப் போனது. பைக்கில் அவனுக்குப் பின்னால் அமர்ந்து காற்றில் தலைமுடி பறக்க ஐஸ்க்ரீம் கார்னர் செல்லும் நேரங்களை அவன் மிகவும் விரும்பினான். அந்தச் சமயத்தில் தான், ஆறு வருடங்களுக்கு முன்னர் நடந்த தனது விவாகரத்தைப் பற்றியும், முன்னாள் கணவன் வேறு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வசிப்பதைப் பற்றியும் மார்ட்டினிடம் சொன்னாள் சரயு.
இரண்டாம் பிரசவத்திற்காக ஐரின் நாகர்கோவிலுக்குச் சென்றிருந்த நாட்களில், யாருமற்ற வீட்டிற்குப் போகப் பிடிக்காமல் கிரணைப் பார்க்கத் தினமும் வரத் துவங்கினான் மார்ட்டின். வேலையிலிருந்து திரும்பியதும் சரயு, சமையலறைக்குள் உணவு தயாரிக்கச் செல்வாள். மார்ட்டின் கிரணுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவன் செய்யும் வீட்டுப் பாடத்தை மேற்பார்வையிடுவான்.
சமையல் முடிந்ததும் மூன்று பேரும், அன்றைய நிகழ்வுகளை அலசியபடி ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவார்கள். பின்னர் மொட்டை மாடியில், கிரணை விளையாட விட்டு, சற்று நேரம் சரயுவும் மார்ட்டினும் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒன்பது மணி வாக்கில் தன் வீட்டிற்கு மார்ட்டின் கிளம்பும் போது, கிரணுக்கு அவனை வழியனுப்பவே மனம் வராது.
எப்பொழுதாவது கிரண் சீக்கிரம் உறங்கிவிடும் நாட்களில், சரயுவுடன் மொட்டை மாடி நிலவொளியில் அமர்ந்து பேசும் நேரங்களை மார்ட்டின் மிகவும் விரும்பினான். சரயுவிற்கும் தன் தனிமையை விரட்ட, அந்தத் தோழமை தேவையாக இருந்தது. தனக்கும் கூட இப்படி மனம் விட்டு பேசக் கூடிய நட்பு அமையுமென்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. சில நாட்களில் கிரண் உறங்குவதற்காகக் காத்திருக்கத் தொடங்கினார்கள் இருவரும். இப்படியான ஒரு நாளின் தனிமையில் மார்ட்டினின் மனம் தன்னுள் இருந்த ஏக்கத்தைக் காதலாக சரயுவிடம் வெளிப்படுத்திக் கொண்டது.
அந்தக் கணம், சர்ரென சரயுவின் வயிற்றிலிருந்து முட்டியெழும்பிய வார்த்தைகள் அவளது தொண்டையிலேயே தடுக்கி விழுந்தன. மெல்ல நகர்ந்து எதிரே இருந்த கைப்பிடிச் சுவருக்கு அருகே சென்று தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முயன்றாள் அவள். சில்லென்று இறங்கிய பனியை அப்பொழுதுதான் உணர்ந்தது போல அவளது உடல் சிலிர்த்தது. தெருவிளக்கொளியில், இரண்டு மாடிகளுக்குக் கீழே, வாகனங்கள் அவளின் கவனத்தில் பதியாமல் நகர்ந்தன. அவளது மௌனத்தின் நீட்சியில் சங்கடமுற்ற மார்ட்டின்,
“சரயு, மனசில தோன்றியதை வச்சிருக்க முடியலை! பட்டுன்னு சொல்லிட்டேன். உங்களுக்குப் பிடிக்கலைன்னா நாம இதே போல நண்பர்களாகவே இருக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினான். தெரு முனையில் அப்பியிருந்த இருளுக்குள் அவனது வாகனம் மறைந்த பின்னரும் சரயுவின் உடலுள் ஏற்பட்டிருந்த மெல்லிய நடுக்கம் மறையவில்லை.
அன்றிரவு முழுவதும் மீண்டும் மீண்டும் அந்நிகழ்வு சரயுவின் மனதில் விரிந்து அவளைத் தொந்தரவு செய்தது. வீட்டில் மனைவி, குழந்தை என்று அழகாய் ஒரு குடும்பம், நல்ல வேலை, இப்போது தன்னுடைய மன உணர்வுகளுக்குத் தீனி போட மற்றொரு கைநிறைய சம்பாதிக்கும் பெண். அதாவது அவன் செலவு செய்ய வேண்டியிராத, தேவைப்பட்டால் பணத்தைக் கடனாகவோ அன்பளிப்பாகவோ தந்து உதவக் கூடிய பெண். மார்ட்டின் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான் என்று சரயுவிற்குத் தோன்றியது தான் ஒப்புக் கொண்டால் பயன்படுத்திவிட்டு, வேண்டாம் என்னும் போது தூக்கி எறிந்துவிடலாம். எவ்வளவு சுலபமாய் சொல்லிவிட்டான்! அவளுள் சினம் மூண்டெழுந்தபடி இருந்தது.
மறுநாள் வேலையிடத்தில் அவளுக்கு மார்ட்டினைப் பார்க்கவேப் பிடிக்கவில்லை. மனதில் ஒட்டியிருந்த முந்தைய தினத்தின் துணுக்குகளுடன், உறக்கமின்மை தந்த எரிச்சலும் அவன் மீதே குவிந்தது. மார்ட்டினும் அவளை வெறுப்பேற்றுவது போல, அவளிடம் பேசவோ மன்னிப்பு கேட்கவோ முயற்சிக்காமல், தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான். அந்த வாரம் முடிக்கப்பட வேண்டி அவசியத்துடன் கணினிக்குள் காத்திருந்த பணியில் அவளால் கவனம் செலுத்த முடியவில்லை. மொத்தமும் சேர்ந்து தலையில் இடிக்க, மதியத்திற்கு மேல் அவளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
மேலாளரைச் சந்தித்து விடுப்பெடுத்துக் கொண்டு, அப்படியே தன்னை வேறு குழுவிற்கு மாற்றிவிடும் படி விண்ணப்பித்தாள்.
“இன்னிக்கு மார்ட்டின் அங்கிள் வரலையாம்மா”
“இல்லை, கிரண். அவங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகுதில்ல, அதனால் இனிமே வரமாட்டாங்க!”
கிரண் அதற்கு மேல் அவளை எதுவும் கேட்கவில்லை.
அன்றைய முன்னிரவு மிகவும் மோசமானதாய் இருந்தது. தன் வேலைக்குள் புதைந்து கிடந்த இரண்டு பேரைச் சட்டை செய்யாமல், தொலைக்காட்சியின் குரல் அமானுஷ்யமாய் வீட்டைச் சுற்றி வந்தபடியிருந்தது. மார்ட்டின் வருகைக்கு முன்னால் அவர்களுக்குள் இருந்த சகஜ தன்மை எங்கோ போய் ஒளிந்து கொண்டது. அச்சமூட்டும் படியாய் இருந்த அந்தச் சூழல் சிலநாட்களில் சரியாகிப் போகும் என்று சமாதானப் படுத்திக் கொண்டாள் சரயு.
நினைத்தது போல இரண்டு நாட்களில் அவ்வீடு மார்ட்டினின் இல்லாமைக்குப் பழகிக் கொண்டது. கிரண் எதுவுமே கேட்காமல் தன்னைப் பள்ளி வேலைகளுக்குளோ, புத்தகங்களுக்குள்ளோ மூழ்கடித்துக் கொண்டான். சரயுவும் வீட்டின் ஒவ்வொரு மூலையையும் இழுத்துப் போட்டுச் சுத்தப் படுத்துவதில் முனைந்தாள், மார்ட்டின் எந்தவொரு மாற்றத்தையும் தன் வாழ்வில் கொண்டுவரவில்லை என்பதைத் தனக்குத் தானே நிரூபித்துக் கொள்வதைப் போல.
தொடர்ந்து வந்த மாலைகளில் மனச்சோர்வு அவளைப் பற்றத் துவங்கியது. விவாகரத்து செய்த கணவன் மொத்த கறைகளையும் இவள் பக்கம் தள்ளி, முதல் திருமண சம்பவத்தைச் சுத்தமாய் துடைத்தெறிந்து விட்டு, வேறுமணம் செய்து கொண்டு நிம்மதியாய் இருக்கிறான். என்றோ ஒரு நாள் திரும்பி வந்து மகனே என்றால் கிரணும் அவனைக் கட்டிக் கொள்ளக்கூடும்.
இவளால் அப்படியொன்றை நினைத்துப் பார்க்கவே முடியாது. இன்னொரு மணம் செய்து கொண்டாலும், முதல் திருமணம் அருவருக்கத்தக்கத் தழும்பாய் அவளது வாழ்வில் பின் தொடரவே செய்யும். இரண்டாம் கணவன் என்ற பதத்திற்குள் நுழையும் பக்குவம் இந்திய ஆண்களுக்கு வரவே வராது என்று அவளுக்குத் தோன்றியது. இத்தகைய எண்ணங்கள் வெளிப்படுவதற்கு வழியின்றி மண்டைக்குள்ளேயே சுற்றி குடைச்சலைக் கொடுத்தன. தன்னிரக்கத்திற்குள் விழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. இடையிடையே மார்ட்டினின் நினைவுகள் வேறு.
எந்த பிடிப்புமற்று நாட்கள் நகர்வதைக் காண அவளுக்குப் பயமாய் இருந்தது. அப்படியொரு கணத்தில் தான், சரயுவிற்குத் தானும் அவனைக் காதலிக்கிறோமோ என்ற சந்தேகம் ஏற்பட்டத் துவங்கியது. அடுத்த நொடி, சரசரவென குற்றவுணர்ச்சி உடலெங்கும் பாம்பாய் ஊரத் துவங்கியது.
தன் எண்ணங்கள் செல்லும் திசையைப் பார்த்து, திகைத்துப் போனாள் சரயு. திருமணமாகி இரண்டாம் குழந்தைக்கு தகப்பனாகப் போகும் ஒருவனைத் தான் எப்படி விரும்ப முடியும்? அப்படி விரும்புவதாகவே வைத்துக் கொண்டாலும் இதற்கு எதிர்காலம்? இது சூழலின் காரணமாய் ஏற்பட்ட ஈர்ப்பாய் தான் இருக்க முடியும் என்று தனக்குள் சத்தமாய்ச் சொல்லிக் கொண்டாள் சரயு.
கல்லூரி காலங்களில் பேருந்து நிலையம் வரை தொடர்ந்து வந்த பிரபு மீது, இயற்பியல் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் மீது இது போன்ற ஈர்ப்புகள் அவளுக்குத் தோன்றியிருக்கின்றன. சில வருடங்கள் கழித்து அவற்றை நினைத்துப் பார்த்து அவளால் புன்னகைக்கவும் முடிந்திருக்கிறது. மார்ட்டினின் மீது தற்போது ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியும் அப்படி சீக்கிரம் வடிந்து போய்விடும் என்று நினைத்தாள் அவள். அதைத் தாண்டி யோசிக்க அவளுக்குத் தைரியம் இருக்கவில்லை. ஆனால் மார்ட்டினை நினைவுகளில் இருந்து நீக்குவது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.
வாரயிறுதியில் மகனை அழைத்துக் கொண்டு சினிமாவிற்கோ, கோவிலுக்கோ சென்றாள். ஆனாலும் இழப்பு அவளைப் பின் தொடர்ந்தபடி இருந்தது. கிரண் எதையும் பெரிதாய் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை, இருந்தும், அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த ஒரு சலுகையைத் தான் வெட்டிவிட்டோமோ என்ற குற்றவுணர்வு அவளுள் தோன்றத் துவங்கியது. அப்படித் தோன்றிய கணமே, தன் மனம் மார்ட்டினுடன் மறுபடியும் பேசுவதற்கு வழி தேடுவதை உணர்ந்து அதிர்ந்தாள். தார்மீகமாய் யோசிக்கும் மூளைக்கு எதிராகத் தன் மனம் செயல்படத் துவங்கிவிட்டதை அறிந்து தன் மீதே அவளுக்குப் பயம் வரத் துவங்கியது. அவளது மனம் மூளையிடமிருந்து பிரிந்து விவாதம் செய்யத் துவங்கியது.
‘மார்ட்டினை விரும்புகிறாய் அதை ஒப்புக்கொள்’
‘அவன் திருமணமானவன், இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன்…’
‘அதனால் என்ன, அவனிடம் காசை எதிர்பார்த்தா பழகுகிறாய்? அவனுடைய துணையை மட்டும் தானே!’
‘அது எப்படி நிரந்தரமான துணையாகும்? என்று இருந்தாலும் அவன் தன் குடும்பத்திற்குத் தானே முதலில் சொந்தமாகிறான்?’
‘இருக்கட்டுமே, மீதமிருக்கும் நேரத்தை
உன்னுடனும் கிரணுடனும் செலவு செய்கிறான், அதற்கு மேல் நீயும் எதிர்பார்க்காதே!’
‘சரி, நான் இதற்கு ஒப்புக் கொள்கிறேன் என்றே வைத்துக் கொள்ளலாம், இது அவனது மனைவிக்குத் தெரிந்தால்…’
‘அது அளவிற்கு மீறிச் செல்லும் போது தான். நீங்கள் ஏன் அப்படி செய்யப் போகிறீர்கள்.’
‘சரி, என்றோ ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டால்?’
‘அப்போது வெட்டிக் கொள்!’
‘பழகிய பின் வலி அதிகம் இருக்குமே’
‘இப்பொழுது மட்டும் என்ன? இந்த வலியைக் கொஞ்ச நாட்களுக்குத் தள்ளிப் போடுகிறாய், அவ்வளவு தான்!’
‘சரி இது அவன் மனைவிக்குச் செய்யும் துரோகம் இல்லையா?’
‘நீ காசு பணத்தை அவனிடமிருந்து எடுத்துக் கொண்டால், அல்லது அவனை அழைத்துக் கொண்டு ஓடிப் போனால் அது துரோகம்’
அன்றிரவு படுத்த போது, அவளது மனம் தெளிந்திருந்தது. மார்ட்டினைத் தான் காதலிக்கிறோம் என்பதைத் தயக்கமின்றி முழுதாய் ஒப்புக் கொண்டாள். ஆனால் அதில் தன்னுடைய நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள, அவள் தனக்குள் சில வரையறைகளை அமைத்துக் கொண்டாள்.
மார்ட்டினின் காதலை ஏற்றுக் கொள்ளும் போது அவனுடன் சேர்த்து ஐரினையும் மனதில் ஏற்றுக் கொள்ள வெண்டும். மார்ட்டினின் பணத்தை எந்த நேரத்திலும் தொடக்கூடாது, அவனுடைய விடுமுறை நாட்களை அநாவசியமாக பறித்துக் கொள்ளக்கூடாது. அவனுடனான பழக்கத்தால் ஐரினுக்கு எந்த பாதிப்புமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அவளிடமிருந்து மூளை தனியே பிரிந்து கேள்விகள் கேட்கத் துவங்கியது
‘சரி! என்றாவது ஒரு நாள் ஐரினுக்குத் தெரிந்தால், உன்னால் சமாளிக்க முடியுமா? அப்போது பிரியத் தானே வேண்டும்?’
‘என்ன இப்போது இருப்பது போல இருப்பேன், அவ்வளவு தானே?’
எப்போதோ நடக்கக் கூடிய ஒன்றுக்காகப் பயந்து, கிடைக்கும் கொஞ்சம் வாய்ப்பைத் தவறவிட அவள் மனம் தயாராய் இல்லை.
அதன் பிறகும் மார்ட்டினுடன் கிரண் செஸ் விளையாடும் போது, அவர்கள் சேர்ந்து அமர்ந்து படம் பார்க்கும் போது, இந்தப் பயம் தோன்றியபடி இருந்தது. அது தோன்றும் நொடியே கிள்ளி தூக்கி எறிந்துவிடத் தானாகவே அவளது மனம் பழகிக் கொண்டது.
மார்ட்டினுடன் பேசிக் கொண்டிருக்கும் போது நடுவில் ஐரினையும் குழந்தையையும் பற்றி வலிந்து பேசினாள் சரயு. அப்படிப் பேசுவதன் மூலம், தன் வரையறைகளை நினைவுபடுத்திக் கொள்வதாகவும், தன்னை அவன் குடும்பத்துடன் இணைத்துக் கொள்வதாகவும் அவள் நினைத்தாள். ஆனால் இரவின் தனிமையில் தனக்குக் கிடைக்காத ஒரு வாழ்க்கை, இதுவரை நேரில் பார்த்தறியா ஐரினுக்குக் கிடைத்ததை எண்ணிப் புழுங்கிய மனதை எதுவும் செய்ய முடியவில்லை.
ஐரின் குழந்தையுடன் வீட்டிற்கு வந்த பின்னர் அவளுடன் நட்பாகிவிட முயற்சி செய்தாள் சரயு. குழந்தையைப் பார்க்க, பொம்மைகளையும், கேக்குகளையும் வாங்கிக் கொண்டு மார்ட்டினின் வீட்டிற்கு மாதம் இருமுறையாவது செல்லத் தொடங்கினாள். ஆனால் இவள் நினைத்தது போல, எதையும் எடுத்தெறிந்து பேசும் ஐரினுடன் நட்பாவது சுலபமான காரியமாக இருக்கவில்லை. இவளது வரவைக் கூட அவள் விரும்பவில்லை என்பதைச் சீக்கிரமே உணர்ந்து போவதை நிறுத்துக் கொண்டாள்.
இன்று அவளுடன் பேச வேண்டும் என்று மார்ட்டின் தகவல் அனுப்பிய போது கூட அவனைவிட்டுப் பிரிய நேரும் என்று சரயு யோசித்திருக்கவில்லை.
“சத்தியம் செஞ்சா கூட அவ நம்ப மாட்டேங்கறா”
இந்நிகழ்விற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல, சரயுவிற்குப் பின்னால் இருந்த சுவரைப் பார்த்தபடி சொல்லிக் கொண்டிருந்தான் மார்ட்டின். இனி தன்னுடைய உணர்வுகள் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல என்று சரயுவுக்கு தோன்றியது.
“இன்னிக்கு வேலைக்கு வரதில கூட அவளுக்கு விருப்பமில்லை!”
அவளின் வாழ்வில் நுழைந்த இரண்டாவது ஆண், இலகுவாய் நழுவி தன் வளைக்குள் சென்று ஒளிந்து கொள்ள முயல்வதை அவளால் உணர முடிந்தது.
“நான் வேலையை மாத்திகிட்டு சென்னைக்குப் போயிடலாம்னு பார்க்கறேன். வேற என்ன செய்ய!”
‘என்னைப் பத்தி, கிரணைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா?’ என்று அவன் கால்களைப் பிடிக்கத் தயாரான மனதை, வலுக்கட்டாயமாய் இழுத்து நிறுத்தி,
“ஆல் தி பெஸ்ட்!” என்றாள் சரயு.
மார்ட்டினின் உருவம், சரயுவின் நெற்றியில் அனுபவச் சுருக்கத்தை ஏற்றிவிட்டு விலகிச் செல்லத் துவங்கியது.

நன்றி
மலைகள்.காம் இணைய இதழ் ( ஜனவரி 2)

ஊனம்

இப்பொழுதெல்லாம் நடக்கச் செல்லும் முன், வெயில் உச்சியை நோக்கி கிளம்பிவிட்டதா என்று பார்த்துக் கொள்கிறேன். சென்ற வாரம் செம்பாவாங் சாலையைச் சோங் பாங்கில் பிடித்து அது அப்பர் தாம்ஸன் சாலையைச் சந்திக்கும் இடம் வரை நடந்து, வலது புறமிருந்த மண்டாய் சாலைக்குள் திரும்பி, நீ சூன் கேம்ப் வரை நடந்து, பேருந்து பிடித்து வீடு திரும்பினேன்.
அது போல நேற்றைக்கு முன் தினம்் யீஷூன் இன்டஸ்ட்ரியல் பார்க்கின் பக்கம்.
நடக்கத் தொடங்கிய இருபதாவது நிமிடம் சாலையைக் கடந்து இந்தப் பக்கமாய் வந்து கொண்டிருந்த நண்பரைப் பார்த்தேன். எனக்கு ஒரு ஊனம் உண்டு. புதிதாய் ஒருவரைப் பார்த்துப் பேசுவேன். அடுத்த முறை அவரை வெளியில் பார்த்தால், அவராக மீண்டும் அறிமுகப்படுத்திக் கொண்டாலே தவிர எனக்கு அடையாளம் தெரியாது. ஒரு ஐந்து முறையாவது பார்த்துப் பேசினால் தான் முகம் கொஞ்சம் பழகும். சாலையைக் கடந்த நண்பரைப் முகநூலில் புகைப்படம் பார்த்துப் பழகியிருந்தாலும் ஒரு சந்தேகம், கடப்பதா, நிற்பதா என்று யோசித்துத் தயங்க, நல்லவேளை அவரே கையசைத்தார். சற்று நேரம் பேசிக் கொண்டே நடந்தோம்.
அப்படியே அந்த சாலையைத் தொடர்ந்து கடைசி வரைச் சென்று, அவென்யூ எட்டில் திரும்பி, அவென்யூ ஒன்பதில் மறுபடி திரும்பி ஜங்ஷன் ஒன்பது கடைத்தொகுதிக்குள் சென்றேன். அங்கே மற்றொரு நண்பர். அல்லது நண்பரைப் போன்ற ஜாடை கொண்ட ஒருவர். மறுபடியும் ஹாய் சொல்வதா, கடப்பதா என்று குழப்பம். அவர் முகத்தில் என்னைத் தெரிந்து கொண்டதற்கான அடையாளம் காணப்படவில்லை. ஒருவேளை அவர் என்னை கவனிக்காமல் கூட இருந்திருக்கலாம் அல்லது வேறொருவராக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. நானாக அறிமுகப்படுத்திக் கொள்ள முயன்று வேறு யாரோவாக இருந்து விட்டால். சட்டென கடந்து தப்பித்தேன்.
ஆதலால் நண்பர்களே! தெருவில் சுற்றித் திரியும் என்னை யாரேனும் கண்டால், என் முகத்தில் அடையாளம் கண்டு கொண்டதற்கான அடையாளத்தைத் தேடாமல் சட்டென ஹாய் சொல்லிவிடுங்கள். இல்லையென்றால் அடையாள ஊனம் கொண்ட ஒருவரைத் திமிர் பிடித்தவர் என்று நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் நேரும்.

நடித்தல்

பள்ளி காலங்களில் வருகையைப் பதிவு செய்யும் போது மட்டும் அழைக்கப்படும் பெயராக என்னுடையது இருந்திருக்கிறது. வகுப்பறையில் மற்றவர்களைக் கவனித்தபடி பூச்சியாய் அமர்ந்திருப்பேன். அம்மாவிற்கு என் ஆசிரியரிடம் பேசிப் பழகி என் இருப்பை உணர்த்தும் சாமர்த்தியமெல்லாம் இருந்ததில்லை.
அப்போது இரண்டாம் வகுப்பு என்று நினைவு. பள்ளி ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. நடக்கும் கலை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விருப்பப்பட்டேன். அதை ஆசிரியரிடம் வெளிப்படுத்தும் தைரியம் எனக்கு இருக்கவில்லை. கொஞ்சம் சத்தமாய் பேசினால் என் குரல் எனக்கே அன்னியமாய் தோன்றும்.
அன்று வகுப்பு நேரத்தின் பாதியில் திடீரென பள்ளி மணி ஒலித்தது. ஆசிரியர்கள் தங்களுக்குள் பேசியபடி, பரபரப்பாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். கொஞ்சம் நேரத்தில் எல்லோரையும் பையை எடுத்துக் கொண்டு வகுப்பிற்கு வெளியே வரிசையில் நிற்கச் சொன்னார்கள். எதற்கென்று புரியாமல், வரிசையில் நின்றபடி சுவரில் செதுக்கியிருந்த வடிவங்களின் வழி தெரிந்த சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு முன்னால் நின்றிருந்த மாணவிகள், வகுப்பில் சற்று பிரபலமானவர்கள். அவ்வப்போது ஆசிரியர்களால், புத்தகம் தூக்கிச் செல்ல அழைக்கப்படுபவர்கள். வருடத் தொடக்கத்தில் வீட்டிலிருந்து டஸ்டர் தைத்து எடுத்து வருபவர்கள். அவர்கள் பேசிக் கொண்டிருந்த விஷயம் என்னை ஈர்த்தது.
அந்த வருடப் பள்ளி விழாவில் நாடகம் ஒன்றை போடப் போவதாகத் திட்டமிட்டு, நடிப்பதற்கு ஆட்களை அவர்கள் நிர்ணயம் செய்து கொண்டிருந்தார்கள். அது ராஜா ராணி நாடகம். யார் ராணியாக நடிப்பது என்று அவர்களுக்குள் போட்டி. ஓரிரு நிமிட இடைவெளியில், நன்றாய் பேசத் தெரிந்த பெண் வாதாடி தன்னை ராணியாக்கிக் கொண்டாள். இருந்ததில் உயரமான பெண் ராஜாவாக நடிப்பதற்கு ஒப்புக் கொண்டாள். பக்கத்தில் நின்றிருந்த நான் ஆர்வ மிகுதியில், “நானும் நடிக்கிறேன்ப்பா. என்னையும் சேர்த்துக்கோங்க!” என்றேன் பாவமாய்.
எதிர்பாராத திசையிலிருந்து வந்த குரலைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள் அவர்கள்.
நாடகத்தில் ராணியாக நடிக்க இருந்தவள், உதட்டை அலட்சியமாய் சுழித்தாள்.
ராஜாப் பெண் போனால் போகிறதென்று நினைத்தவள் போல,
“உங்க வீட்ல வேட்டி இருக்கா?” என்றாள்.
அப்பாவை வேட்டியில் பார்த்த நினைவு எனக்கு இல்லை. வேலைக்கு எப்போதும் பேண்ட் சட்டை தான் அணிந்து செல்வார். ஆனால் பாச்சை உருண்டை வாசம் படிந்த வேட்டிகளை, டிரங்க்குப் பெட்டியின் அடியில் பார்த்திருக்கிறேன். அதே நேரம் வேட்டி என்றால், ஆண் வேடம் என்றும் புரிந்தது. சமர்த்தியமாக எங்கள் வீட்டில் வேட்டி இல்லை என்று தலையையும் கைகளையும் ஆட்டியபடி சொன்னேன்.
“ஏய் உன் வீட்ல இருக்கா?” என்று ராணிப் பெண்ணைக் கேட்டாள் அவள்.
நல்லவேளை, எனக்கு வேட்டி ஈய ராணிப்பெண்ணுக்கு மனம் வரவில்லை. தப்பித்ததாய் நினைத்தேன்.
“சரி! ராணிக்கு பக்கத்தில நின்னு சாமரம் வீசுவாங்களே! அந்த தோழிப் பெண்ணா இருக்கியா?”
படத்தில் பார்த்திருந்த பளபள உடைப் பெண்கள் நினைவிற்கு வந்தார்கள். நெற்றிச்சுட்டியைக் கூட அவர்கள் நெற்றியில் பார்த்த ஞாபகம் இருந்தது. மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன்.
அந்த நேரம் நின்றிருந்த வரிசை நகர்ந்தது. எங்குச் செல்கிறோம் என்ற சந்தேகம் திடீரென தோன்ற இப்போது தோழமைக் கொண்ட அந்தப் பெண்களிடம் விசாரித்தேன்.
“யாரோ இந்திரா காந்திய ரிக்ஷாவில கடத்திகிட்டு போயிட்டாங்களாம்! அதனால நம்மளை வீட்டுக்கு அனுப்பறாங்க!” என்றாள் ராஜாப் பெண்.
இந்திரா காந்தியைத் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். எந்த பிள்ளை பிடிப்பவன் ரிக்ஷாவில் அவரைக் கடத்தியது என்று யோசித்தபடி பள்ளி வாசலில் முன்பே வந்து காத்திருந்த அம்மாவை நோக்கிச் சென்றேன். அன்றும் அதைத் தொடர்ந்த விடுமுறை நாட்களிலும் வெறும் கைகளால் சாமரம் வீசிப் பார்த்தபடி இருந்தேன்.
தொலைக்காட்சியில் இந்திரா காந்தியின் உடலை எடுத்துச் சென்ற, எரித்த காட்சிகளை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்ததில் நாடகத்தை எல்லோரும் மறந்துவிட்டார்கள் போல. அதன் பிறகு அதைப் பற்றி யாரும் பேசவே இல்லை!

பேச்சு வாக்கில் . . .

எனக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கு, சற்றும் சம்பந்தமில்லாத இடங்களில் நுழைந்து அங்கிருப்பவர்களைக் கவனிப்பது. இதன் காரணமாக சில முகநூல் மற்றும் வாட்ஸாப் குழுக்களிள் அவ்வப்போது இணைந்து கொள்வேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, சிங்கப்பூர் இந்தியப் பெண்கள் தொடங்கியிருந்த வாட்ஸாப் குழு ஒன்றில் இணைந்தேன். எதிர் வரும் அவர்களின் சந்திப்பிற்கான தயாரிப்புகளைப் பற்றிய தட்டச்சு உரையாடல்கள் என்னுளிருந்த வெறுமையை நிரப்பியபடி இருந்தன. ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அவர்களைப் படித்துக் கொண்டிருந்தேன்.
அந்த நேரம், அவர்கள் பெரும்பாலும் ஹிந்தியில் பேசிக் கொள்வது தனக்குப் புரியவில்லை என்று ஒரு பெண் வெளியேற, உரையாடல் திசை திரும்பியது. அக்குழுப் பெண்களால் ஒரு இந்தியப் பெண்ணிற்கு ஹிந்தி தெரியவில்லை என்பதை நம்பவே முடியவில்லை!
ஒரு இந்தியனாக இருந்து கொண்டு தேசிய மொழியான ஹிந்தியைப் படிக்காமல் அதையும் பெருமையாகச் சொல்லிக் கொண்டு வெளியேறிய அந்தப் பெண்ணின் அறியாமையைச் சொல்லி ஸ்மைலிகளால் கண் மூடி சிரித்தார்கள்.
ஆங்கிலம் தெரியவில்லை என்பதை விட ஹிந்தி தெரியாதது எவ்வளவு பெரிய அவமானம் என்று வியந்து, இப்படி இருப்பதால் தான் உலக மேடையில் இந்தியர்களை யாரும் மதிப்பதில்லை என்றார்கள்.
ஆங்கிலம் என்பது புத்திசாலித்தனத்தின் அளவுகோல் அல்ல ஆனாலும் அம்மொழி இந்தியர்களின் ஸ்டேடசாகி விட்டதை எண்ணி வருத்தப்பட்டு, தங்கள் இயலாமையை மறந்தார்கள்.
நடுநடுவே, ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொண்டிராதவர்கள், தாங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து கற்றுக் கொண்டதை இடைச் செருக, அவர்களுக்குப் பாராட்டு கிடைத்தது.
பின்னர் அந்த பெண்ணிற்கு பிறருடன் பழகுவதில் பிரச்சனை இருந்து, அதனால் ஹிந்தி தெரியாத்தைக் காரணமாகச் சொல்லி வெளியேறியிருக்கக் கூடும் என்று சமாதானப் படுத்திக் கொண்டார்கள்.
‘பெண்கள் பொட்டுகளால் முழுமையடைகிறார்கள்
மொழி ஹிந்தியால் முழுமையடைகிறது’ போன்ற கவிதைகளெல்லாம் துள்ளி விழுந்தன. (இது ஏதேனும் பாடலா என நான் அறியேன்)
இதற்கிடையே இன்னும் சிலர் வெளியேறியிருக்க, அவர்களை இந்தியர்கள் அல்லாதவர்கள் என்றார்கள்.
இதெல்லாம் நான் வெளியே சென்றிருந்த நேரத்தில் நடந்திருந்ததால் வீட்டிற்குள் நுழைந்ததும் கிட்டத்தட்ட 200 தகவல்கள் என் கைப்பேசியில் வந்து விழுந்தன.
இதெல்லாம் பெண்கள் பேச்சு என்று சாதாரணமாய் இருந்துவிட முடியவில்லை. இவர்களின் எண்ணங்களே உண்மை என்று இவர்களின் பிள்ளைகள் நம்புகிறார்கள். இத்தகைய நம்பிக்கைகளின் நீட்சியே பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு இட்டுச் செல்கிறது. தான் தவறென நினைக்கும் செயலை ஒரு பெண் செய்தால், தானே இறங்கி அவளுக்குப் பாடம் புகட்டலாம் என்று அவர்கள் வீட்டு பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறது.
இருந்த வேலையெல்லாம் விட்டுவிட்டு, என் முதல் தகவலை அந்த குழுவிற்காக தட்டச்சத் தொடங்கினேன்.
ஹிந்தியிலேயே பெரும்பாலான உரையாடல்கள் நடைபெறுகின்றன என்று அறியாமல் அக்குழுவினுள் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு வெளியேறும் சுதந்திரம் இருக்கிறது. அதற்காக அவளுக்குப் பின்னால் புறம் பேசுவது சரியில்லை. ஹிந்தி தேசிய மொழியா இல்லையா என்பது விவாதற்குரியது, அது தேசிய மொழி என்பது உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அதைப் படித்தாக வேண்டும் என்று நினைப்பது உங்கள் நம்பிக்கை. உங்கள் நம்பிக்கையை பிறர் மீது திணிப்பது தவறு. தோழமை என்பது மொழிகளுக்கு அப்பாற்பட்டது. எந்த ஒரு மொழிக்குள்ளும் சிறைபட விரும்பாத்தால் வெளியேறுகிறேன் என்ற பொருள் படும் தகவலை ஆங்கிலத்தில் தட்டி விட்டு வெளியேறினேன்.
நிம்மதியாக இருந்தது.