ஞாயிறு, 13 மார்ச், 2022

தென்பாண்டி சீமையிலே . . .

 லக்ஷ்மியின் வீடு மாமா வீட்டிற்கு நேர் பின்னால் இருந்தது. நான் அப்போது மாமா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு நெருக்கமாயிருந்த தோழிகளில் ஒருத்தி லக்ஷ்மி.


இருவரும் ஒரே வகுப்பு, வெவ்வேறு பள்ளி, நான் செயின்ட் மேரிஸ், அவள் அரசாங்கப் பள்ளி. செயின்ட் மேரிசில் படித்தற்காக உயர்வாய் நினைத்துக் கொள்ளும் மனநிலையெல்லாம் எனக்கு இல்லை. சாரதா வித்யாலயாவில் டென்த்தில் கணக்கில் நூறும் அறிவியலில் தொண்ணூரும் எடுத்துவிட்டு, அப்போது புதிதாய் சேர்ந்த செயின்ட் மேரிசின் புத்திசாலிகளுக்கு மத்தியில் பாடம் புரியாமல் தொலைந்து போயிருந்தேன்.

ஒருமுறை ஜெயலலிதா கலந்து கொண்ட பெரிய விழாவில் நடனமாட லக்ஷ்மிக்கு சமிக்கி வைத்து தைத்த கறுப்புப் பாவாடை, பெரிய ஜிமிக்கியுடன் கூடிய நகை செட் எல்லாம் அவளது பள்ளியில் கொடுத்திருந்தார்கள். ‘அம்மா ஜெயலலிதா . . .’ என்ற வார்த்தைகளைக் கொண்ட பாடல். அவ்வளவு பெரிய ஜிமிக்கி, மாட்டலுடன், ஓசியில் தருகிறார்களே என்று அவள் பள்ளியின் மீது பொறாமையாக இருந்தது. தடவித் தடவி பார்த்துக் கொண்டிருந்தேன். போட்டுப் பாரேன் என்று பெருந்தன்மையாய் சொன்னாள்.

இருவரும் ஒரே ட்யூஷன் போனோம். திடீரென ஒருநாள் காரணம் சொல்லாமல் ட்யூஷனிலிருந்து நின்றுவிட்டாள். சார் என்னை விசாரித்தார். அழைத்து வரச் சொன்னார். மறுத்துவிட்டாள். அதற்கான காரணத்தை அவள் சொன்ன நாளில் நான் ப்ளஸ் டூ படித்து முடித்திருந்தேன்.

அவளுடைய அப்பாவும் அம்மாவும் அண்ணனும் எக்ஸ்போட்டிற்காக பீஸ் எடுத்து வந்து வீட்டில் தைத்துக் கொடுப்பார்கள். சிறிய அறைகள் கொண்ட ஓட்டு வீடு அவர்களுடையது. அவளுடைய அப்பா இருந்தால் தையல் மிஷினின் மோட்டர் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். கோபக்காரர். நான் நன்றாக படிப்பவள் என்று ஏனோ நம்பி என்னிடம் மதிப்பாக பேசுவார்.

லக்ஷ்மி பெரும்பாலும் பாவாடை தாவணி அணிவாள். அவளது அண்ணன் யுவராஜ், அவனும் நல்ல நண்பன். தம்பி அவ்வளவாய் எங்களுடன் சேர்ந்ததில்லை. அப்போது கேபிள் டி.வி வந்த புதிது, கேசட் வாடகைக்கு எடுத்து வந்து படம் போட்டுப் பார்ப்போம். பள்ளி நேரம் போக, வீட்டில் வேலையில்லாத நேரமெல்லாம் லஷ்மியும் யுவராஜூம் எங்கள் வீட்டில் தான் இருப்பார்கள்.

ப்ளஸ் டூ ப்ளிக் எக்ஸாமில் பேப்பர் அவுட் ஆகிவிட்டது என்று சொல்லி தினமும் ஒரு கேள்வித்தாளைக் கொண்டு வந்து கொடுப்பான் யுவராஜ். நாங்கள் படித்துவிட்டு போவோம் ஆனால் அந்தப் பேப்பராக இருக்காது. அப்படி நினைத்து அலட்சியாமாய் பார்த்துவிட்டு போன இயற்பியல் பேப்பர் அப்படியே வந்தது. நல்ல வேளை அலட்சியமாய் என்றாலும் விடைகளை ஒரு முறை பார்த்து விட்டு வந்திருந்தேன்.

நானும் லஷ்மியும் சேர்ந்து லீவில் ஹிந்தி கிளாஸ் போனோம். ப்ராத்மிக் படித்தோம். ஹிந்தி சாருக்கும் உடன் படித்த இன்னொரு தோழிக்கும் விருப்பம் உண்டாகிவிட பிரச்சனை பெரிதாகிவிட்டது. என்னை மிண்ட் ஸ்ட்ரீட்டில் ஆள் வைத்து அடித்தார்கள் என்று வீங்கியிருந்த கட்டை விரலைக் காட்டினார் ஹிந்தி சார்.

நாங்கள் இருவரும் அந்தப் பெண்ணை வீட்டில் பார்க்கப் போனால் அவளுடன் தனியே பேசும் வாய்ப்பே கிட்டவில்லை. சீக்கிரமே அவளை அவளது மாமாவிற்கோ மாமா பையனுக்கோ கட்டி வைத்துவிட்டார்கள்.

மத்யமாவை புதிதாய் சேர்ந்த லஷ்மண் சாரிடம் நான் மட்டும் படித்தேன். அவள் சேரவில்லை.

லக்ஷ்மிக்கு இளையராஜா குரலை ஏனோ பிடிக்காது. எருமைமாடு குரல் என்பாள். எனக்கு இந்த வகை இனப்பிரிப்பெல்லாம் அப்போது தெரியாது. எஸ்.பி.பி குரலையே அடையாளம் காணத் தெரியாத அபலையாய் இருந்தேன். நிறைய நடிகர்களை, பாடகர்களை விமர்சிக்கும் ஒற்றைச் சொல்லைச் சட்டென உதிர்ப்பாள்.

அவளுக்கு கல்லூரி படித்து முடித்ததும் உறவிலேயே திருமணம் நிச்சயமாகிவிட்டது. சின்ன மாம்பலத்தில் ஓட்டல் கடை வைத்திருப்பவர்களின் வீடு.
திருமணத்திற்குப் பின்னர் தோழிகள் சேர்ந்து ஒருமுறை பார்க்கப் போனோம். மிகவும் யோசித்துப் பேசினாள். எதார்த்தமாய் ஏதோவொன்றைச் சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டு, முறைத்த மாமியார் பக்கம் திரும்பிப் பார்த்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

அங்கிருந்து கிளம்பும் போது வருத்தமாய் இருந்தது. அது தான் அவளைப் பார்த்த கடைசி தினம். பின்னர் ஒருமுறை அவளுக்கு பையன் பிறந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டேன்.

அவளுடைய புகுந்த வீட்டிற்கான வழி இப்போது மறந்துவிட்டது. அவள் அம்மா வீட்டினரும் வீடு மாறி போய்விட்டார்கள்.

என்றேனும் ஒருமுறை தொலைந்து போய்விட்ட அவளைத் தேடிப் பிடித்து பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். திருமணத்தின் ஆரம்பத் தயக்கமெல்லாம் மறைந்து இப்போது பழைய லஷ்மியாகியிருப்பாள் என்று நம்புகிறேன்.

‘தென்பாண்டி சீமையிலே , தேரோடும் வீதியிலே…’
இளையராஜாவின் குரலில் கேட்கும் போதெல்லாம் அவளை நினைத்துக் கொள்கிறேன்.

அப்போது தனக்கென்று சொந்தக் கருத்தைக் கொண்டிருக்காத இந்தத் தோழியின் நினைவை எந்தப் பாடலாவது அவளுக்கு இப்போது கொண்டு வருமா என்று தெரியவில்லை!

2 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

தோழியைத் தேடும் உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அனுபவம் - நல்லதொரு பகிர்வு. சிலரைத் தேடி இருக்கிறேன் நானும். இதுவரை அவர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. உங்கள் தேடல் பயனுள்ளதாக அமையட்டும்.