ஞாயிறு, 25 மே, 2014

ஒளி தேடும் விட்டில் பூச்சி


 
      ஒன்று அம்மாவைப் போல கோதுமை நிறத்தில் இருந்திருக்கலாம் இல்லையென்றால் நூடுல்ஸ் போல சுருண்டு கிடக்கும் இந்த முடியாவது, நீளமாய், தொடுவதற்கு தேங்காய் நார் போல இல்லாமல், மெத்தென்று இருந்திருக்கலாம். இதையெல்லாம் தான் மாற்ற முடியாது. சரி! உடம்பையாவது குறைக்கலாமென்றால் அதுவும் முடியவில்லை. பட்டினி கிடந்தாலும் குறைவேனா என்கிறது அது. கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்க்கவே சங்கடமாயிருந்தது ஈஸ்வரிக்கு.

     முக ஜாடையில் தான் நடிகை அருந்ததியை ஒத்திருப்பதாய் இரண்டு வருடங்களுக்கு முன் ஊரிலிருந்து வந்த அத்தை சொல்லியிருந்தார். அப்போதிலிருந்து,  அந்த நடிகையைப் பற்றி கேலியான சித்திரமே மக்கள் மத்தியில் இருந்தாலும், அவர் அழகாய் இருப்பதாய் ஈஸ்வரிக்கு தோன்றியது. அது வரை அந்த நடிகையின் மீது இல்லாத அக்கறையை அதன் பிறகு காட்டத் தொடங்கினாள் அவள். அந்த நடிகையைப் போலவே சிரித்து, அவரைப் போலவே கண்கள் மலர பார்த்து, அவரைப் போலவே தன் நடையுடை பாவனைகளை மாற்றிக் கொள்ளத் துவங்கியிருந்தாள். இவை சற்றே மிகையாகிவிட தோழிகளின் கேலிக்கும் ஆளானாள். அதைப் பற்றியெல்லாம் அவள் பெரிதாய் கவலைப்படவில்லை. தன்னை உள்ளுக்குள் அந்த நடிகையாகவே பாவிக்கத் தொடங்கியிருந்தாள்.

     கண்ணாடியின் முன்பு நிற்கும் போதெல்லாம் அந்த நடிகையோடு தன்னை ஒப்பிட்டு நோக்கத் தொடங்கினாள் ஈஸ்வரி. அப்படி பார்க்கும் போதெல்லாம் அவரைப் போல மெலிதான உடலும், வெண்மையான தோலும் தனக்கு இல்லை என்ற உண்மை இவளது ஆற்றாமையை அதிகரித்தது. அந்த நடிகை குண்டாகிவிட்டாலாவது பரவாயில்லை என்று இப்போதெல்லாம் தோன்றத் தொடங்கிவிட்டது அவளுக்கு.

     மூச்சை பிடித்து வயிற்றை உள்ளிழுத்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாள். இப்போது சற்று பரவாயில்லை என்று தோன்ற தன் பள்ளிப்பையை எடுத்துக் கொண்டு,

அம்மா நான் வரேன் என்றபடி கிளம்பினாள்.

பத்திரம்டி!” என்றாள் அம்மா வேலைக்கு கிளம்பியபடியே.

     கற்பனையில் தனக்குத் தானே மனதிற்குள் பேசியபடி  வகுப்பினுள் நுழைந்தாள் ஈஸ்வரி. அதுவரை உரக்க பேசியபடி இருந்த  மாணவிகள் சட்டென்று அமைதியடைந்ததாய் தோன்றியது அவளுக்கு. அனைவரும் தன்னைத் தான் பார்க்கிறார்களோ! சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்படி யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவரவர் தன் தோழியரோடு பேசிக் கொண்டிருந்தார்கள். தனியே அமர்ந்திருந்த மாணவிகள் கையிலிருந்த புத்தகத்தில் ஒன்றியிருந்தார்கள்.

     ச்சே!’ என்று உதட்டை இறுக்கிக் கொண்டாள். திரும்பிப் பார்க்கக் கூட முடியாத அளவிற்கு தான் கோரமாய் இருக்கிறோமோ!’ இந்த எண்ணம் ஈஸ்வரிக்குள் சுய பச்சாதாபத்தைத் தோற்றுவித்தது. மனதை, கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தில் செலுத்த முயன்றாள்.

 

     இரண்டு வருடங்களுக்கு முன்வரை இது போன்ற எண்ணங்கள் ஈஸ்வரியினுள் எழுந்ததில்லை. தொடக்கநிலை ஆறு வரை வகுப்பில் முதல் ஐந்து மதிப்பெண்களுக்குள் வந்துவிடுவாள் அவள். அதனால் அனைவருக்கும் அவள் மீது மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஆசிரியர்கள் சட்டென்று அழைக்கும் பெயரும் அவளுடையதாகவே இருக்கும். இதன் காரணமாக அனைவரும் தோழமையோடே பழகினர். மற்றவர்களுக்குத் புரியாத பாடத்தைச் சொல்லிக் கொடுத்ததில் சில மாணவர்களின் பெற்றோர்களும் கூட இவளை அறிந்திருந்தனர்.

     பள்ளியிறுதிப் பரீட்சையில் ஈஸ்வரி அதிக மதிப்பெண்கள் பெற்றதிலும், அவளுக்கு நல்ல பெண்கள் பள்ளியில் இடம் கிடைத்ததிலும் இவளுடைய பெற்றோர்களுக்கு மிகப் பெருமை. இந்தப் பரிட்சைக்காகவே சென்ற வருடம் வேலைக்குப் போவதை நிறுத்தியிருந்த அவளுடைய தாயார், அதன் பிறகு மறுபடி வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.

     புதுப் பள்ளிக்கு வந்ததிலிருந்து தான் ஈஸ்வரிக்கு தன்னைப் பற்றி தாழ்வான அபிப்ராயம் ஏற்படத் தொடங்கியிருந்தது. இங்கே அவளால் சராசரி மதிப்பெண்களே எடுக்க முடிந்தது. பத்தோடு பதினொன்றாக ஆனபின் தான் தன் அழகைப் பற்றிய பிரக்ஞை அவளுள் ஏற்படத் தொடங்கியது. சாதாரண மதிப்பெண்கள் எடுக்கும் மாணவிகள் கூட சந்தோஷமாய் இருப்பதற்குக் காரணம் அவர்கள் அழகாய் இருப்பது தான் என்று நினைத்தாள். கண்ணாடியின் முன்பு நிறைய நேரம் செலவு செய்யத் தொடங்கினாள்.

 

     தனக்கு ஆண் நண்பர்கள் இருப்பதாய் மற்றவர்களிடம் ஈஸ்வரி சொல்லத் தொடங்கியது அப்போதிலிருந்து தான். அப்படி சொல்வதன் மூலம் மற்றவர்களின் கவனத்தை சுலபமாய் ஈர்க்க முடிந்தது. தோழனோடு எங்கெங்கெல்லாம் சென்று வந்தாள் என்பதைக் கற்பனையில் விவரிக்க, அதைக் கேட்பதில் மற்ற பெண்கள் ஆர்வம் காட்டினார்கள். அவளைச் சுற்றியும் ஒரு நட்பு வட்டம் உருவானது.

************

      இன்னிக்கி சாயங்காலமா! என்னால கண்டிப்பா முடியாதுல்லா... என்னோட ஃப்ரெண்ட் என்னை கொஸ்வே பொயிண்ட்ல்ல பார்க்கறதா சொல்லியிருக்கான். நாங்க ரெண்டு பேரும் இன்னிக்கு படத்துக்குப் போறோம். போன வாரத்திலிருந்தே போகணும்னு  நெனச்சிகிட்டு இருக்கோம்.  இன்னிக்கு கண்டிப்பா முடியாது! சாரில்லா!” என்ற ஈஸ்வரியின் கண்கள் மேற்கூரையைப் பார்த்தபடி கனவில் மிதந்து கொண்டிருந்தன.

ஹேய்! இதப் பாரேன்! இவன் யாரு? புதுசா?” என்றாள் மீனா.

ஏற்கனவே இவனைப் பற்றி தான் சொல்லியிருக்கேனே! தினகரன்... ஞாபகம் இல்லையா?”

...!”   என்றவாறு செல்வியைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள் மீனா. ஆண் நண்பர்கள் என்று ஈஸ்வரி அவ்வப்போது சொல்லும் ஆட்களின்  எண்ணிக்கை அந்தப் பெண்களின் இதழ்களை கீழ் நோக்கி வளைய வைத்தது.

ஏய்! இவ சொல்றது ஒருவேள உண்மையா இருக்குமோ!”

நீ வேற போன மாசம் குணாவைப் பத்தி சொன்னா! இன்னிக்கு தினகரன் நாளைக்கு இந்த பேரு கூட அவளுக்கு நெனப்பு இருக்காது!

ச்சே! ச்சே! இப்படியெல்லாம் ஒருத்தர கிண்டல் செய்யறது தப்பு!” என்றாள் கவிதா.

உருவத்தப் பார்த்து யாருல்லா கேலி செஞ்சா! இவளவிட கறுப்பானவங்க இல்லையா, இல்லை குண்டானவங்க தான் இல்லையா! சும்மா இருந்தா ஏன் பேசப்போறோம்? அவ சொல்ற கதை தான் நம்ம சிரிக்க வெக்குது!

ஒருவேளை அவ சொல்றது உண்மையா இருந்தா! பாவம் அவ...”

ஹேய்! இவளுக்கு எல்லாத்தையும் நிரூபிச்சுக் காட்டணும். சரி அவ தான் போயிட்டாளே, நாம மெக் டொனால்ட்ஸீக்குப் போவோம் வா.”

     சிக்கன் பர்கரைக் கொரித்துக் கொண்டிருந்த போது சட்டென்று மீனாவிற்கு பொறி தட்டியது. தன் மடிக்கணினியைப் பிரித்தவள் முகநூல் (பேஸ் புக்) வலைப்பக்கத்திற்கு சென்றாள்.

பாருல்லா அவளோட குட்டை ஒரு மாசத்துல உடைக்கிறேன்.” என்ற படி கவின் என்ற பெயரில் புதிதாய் ஒரு பக்கத்தைப் பதிவு செய்து கொண்டு,ஹாய்! உன் நீ உன் சுவற்றில் எழுதியிருக்கும் வாசகங்கள் என்னை கவர்கின்றன. மறுக்காமல் என்னை தோழனாக ஏற்றுக்கொள் என்று தகவல் அனுப்பினாள்.

****************

     ஈஸ்வரிக்கு கற்பனை நண்பர்களை விட கவின் மீது இப்போது அதிக ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. இவ்வளவு நாட்களாக அவள் மனதிலிருந்த சொற்களைக் கொட்டுவதற்கு ஒரு காது மட்டுமே அவளுக்கு தேவையாயிருந்தது. வேலையிலிருந்து இரவு ஏழு மணிக்கு மேல் திரும்பும் அம்மாவாலும், பத்து மணிக்கு வரும் அப்பாவாலும் அதைக் கொடுக்க முடியவில்லை. அதனால் ஆண் நண்பர்களைப் பற்றி மனதில் தோன்றிய கதைகளைச் சொல்லி பிறரின் கவனத்தைக் கவர்ந்து வந்தாள்.  இப்போது முகநூல் அவளுக்கு அடைக்கலம் கொடுத்தது. கவின் அவளுடைய பக்கத்தில் எழுதும் பரிவு மிகுந்த வார்த்தைகள், அவளை மற்ற நிகழ்வுகளிலிருந்து முகநூலை நோக்கி இழுத்தது. அவள் தன் மகிழ்ச்சியையும் வருத்தங்களையும் கவினுடன் பகிர்ந்துக் கொள்ள துவங்கினாள். தோழிகளின் கற்பனைக்கேற்ப கவினும், ஈஸ்வரியின் சுவரில் எழுதப்பட்ட தகவல்களும் மெருகேறியபடியிருந்தன.

     தோழிகளிடம் கவினைப் பற்றி சொல்லாமல் இருக்கமுடியவில்லை ஈஸ்வரியால். அவன் தன் மீது எடுத்துக் கொண்டுள்ள அக்கறையைப் பெருமையாய் பறைசாற்றிய படியிருந்தாள். இவளது தலையைக் கண்டதுமே அவர்கள் சிரிப்பை அடக்கிக் கொள்வது அவள் கண்களுக்குப் படவில்லை. தன்னை ஒருவன் மதித்துப் பேசுவதே அவள் சிந்தையை நிறைத்திருந்தது. இதன் காரணமாக பாடங்களிலிருந்து ஈஸ்வரியின் கவனம் விலகியது. அன்று அவளைத் தமிழாசிரியை தனியே வந்து பார்க்கச் சொல்லியிருந்தார். பயத்துடனே சென்ற ஈஸ்வரியை

ஈஸ்வரி உனக்கு என்ன ஆச்சு. வீட்டுப் பாடம் செய்யறதே இல்லை! நேத்து வெச்ச தேர்வுல ரொம்ப மோசமா செஞ்சிருக்கே? வீட்டில ஏதாவது பிரச்சனையா?” என்றார்.

ஈஸ்வரியால் பதில் பேச முடியவில்லை. பேசாமல் தலை கவிழ்ந்தபடி நின்றாள்.

நல்லா படிக்கிற பிள்ளை நீ! இப்படி குறைவான மதிப்பெண் எடுக்கறது வருத்தமா இருக்கு. நான் வேணும்னா உங்க அம்மாகிட்ட பேசட்டுமா?” என்றார்.

வேணாம் ஆசிரியை, கொஞ்சம் நாளா உடம்பு சரியில்லை. இனி மேல் இப்படி செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க ஆசிரியை!” என்றாள் ஈஸ்வரி அவசரமாக.

     படிப்பிலிருந்து கவனம் சிதறுவது அவளுக்குள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது. இனி கவினுடனான இந்த நட்பு தன் படிப்பை கெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள்.

     ஒரு மாதமாய் தொடர்ந்த நட்பின் முடிவில் அன்று கவின் அவளைப் பார்க்க ஜீராங் ஈஸ்ட் பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு வருமாறு அழைத்திருந்தான்.  ஈஸ்வரிக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

******************

     பெருவிரைவு ரயில் நிலையத்தில் கிட்டத்தட்ட இரண்டுமணிநேரம் காத்திருந்துவிட்டு  ஏமாற்றத்தோடு வீடு திரும்பிய ஈஸ்வரிக்கு கணினியைத் திறந்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. அவளது பக்கம்  அவதூறு செய்திகளால் நிரம்பியிருந்தது.  பலர் அவளுக்கு ஏற்பட்டிருந்த ஏமாற்றத்தை கிண்டல் செய்து, மிகக் கடுமையான சொற்களால் அவளைச் சாடியிருந்தார்கள். அவள் தங்கள் வலையில் சிக்கி ஏமாந்த செய்தியை விலாவரியாக பதிவேற்றியிருந்தார்கள்.

     ஈஸ்வரியால் இதைத் தாங்க முடியவில்லை. இரவெல்லாம் அழுதபடியிருந்த அவளால் அம்மாவின் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. என்னவென்று சொல்வது! இப்படி ஒரு ஈனச் செயலில் சிக்கிக் கொண்டதைச் சொல்வதற்கு பதில் தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. பள்ளிக்கூடத்தில் மற்றவர்களின் முகத்தில் விழிப்பதற்குக் கூட பயமாக இருந்தது அவளுக்கு.

     மறுநாள் வகுப்பில் நுழையும் போது அனைவரும் அவளையே பார்ப்பதை உணர்ந்தாள். அனைவருக்கும் செய்தி தெரிந்திருக்க வேண்டும் வகுப்பு தொடங்குவதற்கு முன்னால் தமிழாசிரியரிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது. அவருக்கும் தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்தாள். தன் மேல் அக்கறைக் கொண்டு ஒரு வாரத்திற்கு முன் அவர் சொன்ன வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.

     தடைகள் உடைந்து அவர் முன் ஓவென்று கதற, ஆசிரியர் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டார். நடந்தது அனைத்தையும் பொறுமையாய் கேட்ட அவருக்கு, ஈஸ்வரிக்கு ஏற்பட்டிருந்த தாழ்வுணர்ச்சியே அனைத்திற்கும் காரணம் என்று புரிந்தது.

செத்திடலாம் போல இருக்கு ஆசிரியை!” என்று அழுத ஈஸ்வரியை

ச்சீ! என்ன வார்த்தை சொல்ற? உனக்காக உங்கம்மா அப்பா எவ்வளவு சிரமப்படறாங்க! யோசிச்சு பாரு! ரெண்டு பேரும் வேலைக்கு போறது உன்னோட தேவைகளை நிறைவு செய்யறதுக்காக! அவங்கள பெருமைப்பட வெக்கறத விட்டுட்டு சாவறேன்னுகிட்டு!”

நீ அழகா இல்லைன்னு யார் சொன்னாங்க! சரி அப்படியே அழகா இல்லைன்னா தான் என்ன? வாழ்கையில சாதிச்ச எவ்வளவு பேர் அழகா இருந்திருக்காங்க?”

எவ்வளவு நல்லா படிக்கிற பிள்ளை நீ! உன்னோட முழு கவனத்தை உனக்கு பலமாய் இருக்கிற படிப்பில காட்டு. படிச்சா உன் தோழிகள் மட்டுமில்லை  உலகமே உன் பின்னால வரப்போகுது. இன்றையிலிருந்து புது ஈஸ்வரியா நீ மாறணும். உனக்கு என்ன உதவி வேணுமோ நான் செய்யறேன். இப்போ தலைமையாசிரியர் உன் கூட பேசுவார். தைரியமா பேசுஎன்றார்.

     ஈஸ்வரிக்கு தன் பலம் எதுவென்று புரிவது போல இருந்தது. இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு படித்தால் அனைவரையும் மிஞ்சிவிட முடியும் என்ற தன்னம்பிக்கை அவளுக்குள் ஏற்பட்டது. இனி தன் பெற்றோர்களையும் இந்த ஆசிரியரையும் பெருமைப்பட வைப்பதே தன் முக்கிய நோக்கம் என்று உறுதியுடன் நினைத்துக் கொண்டே தலைமை ஆசிரியரின் அறையை நோக்கி நடந்தாள்.

(முத்தமிழ் விழா 2014ல் இரண்டாம் பரிசு, 

தமிழ் முரசு (11/05/2014))

புதன், 7 மே, 2014

கொள்ளெனக் கொடுத்தல்

அந்த பெரியவர் கிட்டத்தட்ட இருபது நிமிடங்களாக எதையோ தேடிக் கொண்டிருந்தார். பாலர் பள்ளிக்கு வெளியே இருந்த இருக்கைகளையும் அதற்கு கீழேயும், சற்று தள்ளி சுவரின் மூலையில் இருந்த பச்சை நிற குப்பைத் தொட்டிக்கு உள்ளேயும் பார்த்த படி இருந்தார். எப்படியும் எழுபது வயதிற்கு மேல் இருக்கும். தலைமுடி கருப்பு நிறத்திலிருந்தாலும் தோல் சுருக்கங்களும், களைப்படைந்த கண்களும் வயதை தெள்ளெனக் காட்டின. காக்கி கால் சட்டையும் ‘அன்பு நிரத்தரமானது’ என்று பொருள்தரும் வார்த்தைகள் கொண்ட வெளிர் நீல டீசர்ட்டையும் அணிந்திருந்தார். சற்றே அழுக்காய் தெரிந்தார்.

அந்த இடத்தில் அவர் தேடியது கிடைக்கவில்லை போல! அவ்விடத்தை விட்டு மெல்ல அகன்று சற்று தள்ளியிருந்த விளையாட்டுத் திடலின் அருகே சென்றார். அவர் நடையில் மெல்லிய நடுக்கம் இருந்தது. திடலில் இருந்த காலி இருக்கைகளை உற்றுப் பார்த்தார். அதன் மேல் விழுந்திருந்த ஒன்றிரண்டு காய்ந்த இலைகளை கைகளால் தள்ளி விட்டு அதில் அமர்ந்தார்.
பிள்ளைகளெல்லாம் பள்ளியினுள்ளே சென்றுவிட்ட அந்த வெயில் கூடிய மதிய பொழுது மிகவும் அமைதியாக இருந்தது. காற்று கூட எதையும் கலைத்துவிடாதபடிக்கு மிக லேசாய் வீசிக் கொண்டிருந்தது. ஏனோ என்னால் அவரை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. சற்று நேரம் எதையோ யோசித்து விட்டு பின் அங்கிருந்து பார்வையால் தரையைத் துழாவியபடியே மறுபடி பள்ளிக்கு அருகே வந்தார். முன்பு பார்த்த இடத்திலேயே திரும்பவும் தேடினார்.

எனக்கு அவரைப் பார்க்கும் போது என் அப்பா ஞாபகம் வந்தது. அப்பாவிற்கும் ஏறக்குறைய இவர் வயது தான் இருக்கும். இவரைப் போலவே இப்போது அவரும் உடல் மெலிந்து, கறுத்துப் போய் லேசாக கூன் போட்டிருந்தார். முதுமையில் அனைவரும் ஒரே சாயலைக் கொண்டு விடுவார்கள் போல!
அப்பாவிற்கு இன்று எப்படியும் தொலைபேசிவிடவேண்டும் என்று நினைத்தபடி மாடிப்படிகள் தொடங்கும் இடத்தில் எழுதப்பட்டிருந்த உடல்நலம் தொடர்பான வாக்கியங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது “அம்மா!” என்ற குரல் கேட்க திடுக்கிட்டுத் திரும்பினேன். அந்த பெரியவர் என்னருகே நின்றுக் கொண்டிருந்தார். கண்களில் பசியும் தயக்கமும் தெரிந்தன. உதடுகள் துடித்தபடி இருந்தன. கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். காசு கேட்கப் போகிறார் என்று தோன்றியது.

இது போன்றவர்களை நான் சில நேரங்களில் எதிர் கொள்வதுண்டு. ஒருமுறை தேக்கா செல்ல பேருந்து எடுக்க போகும் வழியில் திடீரென்று எதிர்பட்ட பதின்ம வயது பெண் ஒருத்தி “ஆன்டி, தயவு செய்து ஐந்து வெள்ளிகள் இருந்தால் கொடுங்கள்! வீட்டிற்கு போவதற்காக வைத்திருந்த காசை தொலைத்துவிட்டேன்!” என்றாள். அவளது குரலுடன் சேர்ந்து கண்களும் கெஞ்சின. பள்ளிப்பையுடன் களைத்துப் போய் நின்றபடியிருந்த அவளது தோற்றம் கையிலிருந்து சில வெள்ளிகளைக் கொடுக்க வைத்தது. அதே போல எங்கள் வீட்டினைக் கடந்து செல்லும், மனநலம் குன்றிய தோற்றம் கொண்ட ஒருவர், எப்போதாவது நின்று “ஒரு வெள்ளி கொடுங்கள்!” என்பார், என்னவோ கொடுத்து வைத்ததைக் கேட்பவர் போல.

ஒரு முறை ஒரு தோழியைப் பார்ப்பதற்காக மார்சிலிங் சென்று திரும்பும் போது காசிற்காக கெஞ்சிக் கொண்டிருந்த மூதாட்டியைப் பார்த்து திடுக்கிட்டுப் போனேன். அவர் என் அடுக்கு மாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் வசிப்பவர். விடியற்காலையில் தகர டப்பாக்களைப் பொறுக்கி, எங்கிருந்தோ கிடைக்கும் அட்டை பெட்டிகளையெல்லாம் சேகரித்து, வாரம் ஒரு முறை அதை காரங்குனியிடன் போட்டு பணம் பெற்றுக் கொள்பவர். பக்கத்தில் இருந்த கோப்பிக் கடையில் மேஜையைத் துடைக்கும் போது பார்த்திருக்கிறேன்.
அவ்வப்போது சேர்ந்துப் போகும் செய்தித்தாள்களை அவருக்குக் கொடுத்தால் அதைக் கூட மிகுந்த தயக்கத்தோடு பெற்றுக் கொள்வார். அதைத் தவிர வேறு எதை கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார். இதற்கு பிரதிபலனாக சீனப் பெருநாளின் போது மறக்காமல் அங்க் பாவில் இரண்டு வெள்ளிகள் வைத்துக் கொடுப்பார். அன்று அவருக்கு உதவ வேண்டும் என்று தோன்றினாலும் என்னை அங்கே பார்த்தால் அவர் சங்கடப் படக்கூடும் என்று தோன்ற வேகமாய் அந்த இடத்தை விட்டு அகன்றேன். அதன் பிறகு பார்த்த போது கொடுத்த காசைக் கூட அவர் என்னிடமிருந்து வாங்கிக் கொள்ளவில்லை.

பெருவிரைவு ரயில் நிலையம் செல்லும் வழியில் டிஷ்யூ தாள்கள் வைத்தபடி அமர்ந்திருக்கும் வயதானவர்களுக்கும் நான் அவ்வப்போது ஏதாவது செய்வதுண்டு. எங்கள் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வரும் போது அவர்களுக்கு ஐந்து வெள்ளிகளோ, பத்து வெள்ளிகளோ கொடுப்போம். கோவில் உண்டியலில் போடுவதை விட இதில் போடுவது மேல் என்பது என் கருத்து. கடவுளுக்குச் செய்ய, நான் இல்லாவிட்டாலும் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த முதியவர்களுக்கு நான் கொடுக்கும் சில வெள்ளிகள் அவர்களது அன்றைய தினத்தில் ஒரு சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.

“ஏம்மா, என் கண்ணாடியை எங்கனயோ வச்சுட்டேன்! நீ பார்த்தியாம்மா!” என்றார் அந்த பெரியவர். கண்ணாடியைத் தான் இவ்வளவு நேரம் தேடிக் கொண்டிருந்தாரோ! அவர் இதுவரை தேடிய இடங்களை என் கண்களால் துழாவிய படியே “இல்லையே!” என்றேன். அவர் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை வெளியேற்றினார்.
“காலையில இங்கன தாம்மா தமிழ் முரசு படிச்சுகிட்டு இருந்தேன். எப்பவும் படிச்சுட்டு பத்திரமா பையில வெச்சிடுவேன். இன்னிக்கு என்னவோ ஞாபகம். எங்கேயோ வச்சுட்டேன். வயசாயிடுச்சுன்னா இது ஒரு பிரச்சனை! எல்லாம் மறந்திடுது!”

“ம்ஹீம்…! எம்மவன் கிட்ட மறுபடி கேட்கோணும்! இதை வாங்கிக் கொடுக்கும் போதே படிச்சு படிச்சு சொன்னான். அவனை விட அவென் கட்டிகிட்டு வந்தது தான் அதிகம் பேசும்… ம்ஹீம்! அவங்களும் பாவம்! எவ்வளவு தான் மத்தவங்களுக்கு செய்யமுடியும். ஒரு வயசுக்கு மேல எதுவும் முடியறது இல்லை. யாரையாவது எதிர்பார்க்கத் தொடங்கினோம்னாலே பிரச்சனை தான். அவங்கள என்ன சொல்றது? எம் மறதிய சொல்லோணும்!” நான் அங்கே இல்லையென்றாலும் இதையெல்லாம் தனியாகவே சொல்லிக் கொண்டிருந்திருப்பார். அவரது அப்போதைய தேவை கேட்பதற்கு இரு காதுகள் மட்டும் தான் என்று தோன்றியது. “எங்கனயாவது பார்த்தா சொல்லும்மா!” என்றார் தயக்கத்துடன்.

அவர் இன்னும் என் முகத்தைப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தது வித்தியாசமாய் இருந்தது. அவர் உண்மையாக கண்ணாடியைத் தொலைத்தார் என்று எனக்கு தோன்றவில்லை. காசு கேட்க கூச்சப்படுவது போல தெரிந்தது.
“ஏதாவது சாப்பிட்டிங்களாப்பா!” என்றேன்.
“இன்னும் இல்லைம்மா! மருமவளும் மவனும் வேலைக்குப் போனதும் பசியாறிட்டு கீழே இறங்கினேன். கூட்டாள்களோட பேசிட்டு, பேப்பர படிச்சுட்டு அதோ அந்த விளையாட்டுத் திடல் பக்கமா கொஞ்ச நேரம் லாத்திட்டு வந்தேன். நடுவுல எங்க வச்சேன்னு தெரியலை!”
உலகெங்கும் பெற்றோர்களின் நிலை இது தான் போல. அனைவரும் எதையும் பேச யோசித்தபடி இருக்கிறார்கள். என் பெற்றோர் கூட எங்களின் படிப்பிற்காக இருந்த அனைத்தையும் செலவு செய்துவிட்டு இப்போது விழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொந்த வீட்டிலிருக்கிறார்கள் என்பது மட்டும் தான் ஒரே நிம்மதி. அவர்களுக்கு எனது அண்ணன் செலவு செய்யத் தயாராக இருந்தாலும் அண்ணிக்கு விருப்பம் இல்லை. அவர்களும் மற்றவர்களிடம் கேட்க கூச்சப்பட்டுக் கொண்டு ஒரே பெண்ணான என்னிடமும் வாங்க முடியாமல் தயக்கத்துடன் காலம் தள்ளுகிறார்கள்.
           
     இவர் வீட்டிலும் இதே நிலை தான் இருக்க வேண்டும். என் அப்பாவே “ஏதாவது இருந்தா கொடும்மா! ரொம்ப பசிக்குது..!” என்று கையேந்தி நிற்பதாய் தோன்றியது எனக்கு.
“இதை வச்சிக்கோங்க! முதல்ல போயி எங்கேயாவது சாப்பிடுங்க! பிறகு தேடிக்கலாம்!” என்றபடி ஐந்து வெள்ளிகளை அவர் கையில் கொடுத்தேன். “இல்லைம்மா காசெல்லாம் வேண்டாம்!” என்றார் பதறியபடி. கையேந்துவது கண்டுபிடிக்கப் பட்டதில் ஏற்பட்ட பதட்டம் அவர் உடல் மொழியில் தெரிந்தது.
என் கணவராயிருந்தால் இப்படி கொடுப்பதைத் தடுத்திருப்பார். “எல்லாம் காசுக்காக சொல்ற பொய். காசு கொடுத்து கொஞ்ச நேரம் கழிச்சுப் பாரு, எங்கேயாவது தண்ணி குடிச்சுட்டு சாய்ஞ்சு கிடப்பார்” என்பார். இவர் அப்படி செய்தாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டேன். உண்மையிலேயே பசியாயிருந்து நான் அதை கடந்து போவதை விட, ஏமாந்து போவது பரவாயில்லை என்று தோன்றியது.

அதற்கு மேலும் அவர் தர்மசங்கடத்துடன் மறுப்பதைக் கேட்கும் தெம்பு எனக்கிருக்கவில்லை. “பரவாயில்லை! வச்சிக்கோங்க!” என்று அவரை மேலே பேச விடாமல், பலவந்தமாய் அவர் கைகளில் அந்த வெள்ளிகளைத் திணித்துவிட்டு, மேலும் பேச்சைத் தவிர்க்க, பள்ளியின் வாயிலை நோக்கி நகர்ந்தேன். அவர் முகம் உணர்ச்சிக் குழப்பத்தில் இருந்தது. வயதான என் பெற்றோரின் அருகில் இருந்து கவனித்துக் கொள்ளாத மன குறுகுறுப்பை இப்படி தீர்த்துக் கொள்கிறேனோ!

அவர் தனக்குள்ளே ஏதோ பேசியபடி தளர்ந்த நடையோடு, அடுக்குமாடி குடியிருப்புகளினூடாக நுழைந்து என் பார்வையிலிருந்து மறைந்தார். என் அப்பாவிற்கே உணவு பரிமாறியது போல எனக்கு நிம்மதியாய் இருந்தது.
பள்ளியின் கேட் திறக்கும் ஒலி கேட்டு நடப்பிற்கு வந்தேன். பிள்ளைகளை விடத் தொடங்கினார்கள். அம்மாவைப் பார்த்ததும் இந்தக் குழந்தைகளின் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி! இப்படித் தானே ஒருகாலத்தில் என் தாயும் என்னை எதிர்பார்த்து பள்ளியின் வாயிலில் காத்து கிடந்தார். அப்படி இருந்தவருக்கு என்னால் செய்ய முடிந்தது தான் என்ன? இப்போது பார்த்த பெரியவரும் இப்படித் தான் தன் பிள்ளையைப் படிக்க வைத்திருப்பார். இதை அவருடைய பிள்ளை யோசிப்பானா?

என்னைப் பார்த்ததும் என் மகள் வேகமாய் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். மூன்று மணி நேரம் கழித்துப் பார்த்த மகிழ்ச்சி. பள்ளியை விட்டு வெளியே வந்த குழந்தைகளும் அவர்களை அழைக்க வந்தவர்களுமாக அந்த இடம் கலகலத்துப் போனது. என் பெண் பள்ளிப் பையை என்னிடம் கொடுத்து விட்டு தன் நண்பர்களுடன் விளையாடத் தொடங்கினாள். நான் அந்த விளையாட்டை ரசித்தபடி நின்றேன். என் பெண்ணிற்கு பிற்காலத்தில் தன் பெற்றோரைப் பற்றிய அக்கறை நிச்சயம் இருக்கும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
அனைத்து பிள்ளைகளையும் அனுப்பி முடித்த ஆசிரியர்கள், பள்ளியின் கேட்டை மூடிக் கொண்டிருந்தார்கள். “யாரோ வெளியே இதை மறந்து வைத்துவிட்டார்கள் போல! காலையில் இஸபெல்லின் அம்மா என்னிடம் கொடுத்தார்.” என்று அவர்களில் ஒருவர் சொல்வது கேட்க, அவசரமாய் உள்ளே எட்டிப் பார்த்தேன். அவர்களின் கையில் பழுப்பு நிறச் சட்டமிட்ட மூக்குக் கண்ணாடி.

‘அடடா! இது தான் அந்த பெரியவர் விட்டுச் சென்ற மூக்குக் கண்ணாடியா? அப்படித் தான் இருக்க வேண்டும்!”
“நான் பார்க்கவில்லையென்று சொல்லி அதோடு நிறுத்தியிருந்தால் இந்தப் பள்ளிக்கு வந்து விசாரித்திருப்பாரே!”
நான் அவரை வலிய திசைத் திருப்பி விட்டேனோ என்ற குற்றவுணர்ச்சி அழுத்தத் தொடங்கியது. “எங்கனயாவது பார்த்தா சொல்லும்மா!” என்ற அவரது குரல் காதில் ஒலிக்க, அவசரமாய் அவர் சென்று மறைந்த திசையை கண்களால் தடவினேன். எப்படியாவது அவரைப் பார்த்து இந்த கண்ணாடி இங்கே இருப்பதைச் சொல்ல வேண்டும் என்று என் மனம் பரபரக்கத் தொடங்கியது.

april 27th 2014 திண்ணையில் வெளியானது