வியாழன், 8 மார்ச், 2018

நடித்தல்

பள்ளி காலங்களில் வருகையைப் பதிவு செய்யும் போது மட்டும் அழைக்கப்படும் பெயராக என்னுடையது இருந்திருக்கிறது. வகுப்பறையில் மற்றவர்களைக் கவனித்தபடி பூச்சியாய் அமர்ந்திருப்பேன். அம்மாவிற்கு என் ஆசிரியரிடம் பேசிப் பழகி என் இருப்பை உணர்த்தும் சாமர்த்தியமெல்லாம் இருந்ததில்லை.
அப்போது இரண்டாம் வகுப்பு என்று நினைவு. பள்ளி ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. நடக்கும் கலை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விருப்பப்பட்டேன். அதை ஆசிரியரிடம் வெளிப்படுத்தும் தைரியம் எனக்கு இருக்கவில்லை. கொஞ்சம் சத்தமாய் பேசினால் என் குரல் எனக்கே அன்னியமாய் தோன்றும்.
அன்று வகுப்பு நேரத்தின் பாதியில் திடீரென பள்ளி மணி ஒலித்தது. ஆசிரியர்கள் தங்களுக்குள் பேசியபடி, பரபரப்பாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். கொஞ்சம் நேரத்தில் எல்லோரையும் பையை எடுத்துக் கொண்டு வகுப்பிற்கு வெளியே வரிசையில் நிற்கச் சொன்னார்கள். எதற்கென்று புரியாமல், வரிசையில் நின்றபடி சுவரில் செதுக்கியிருந்த வடிவங்களின் வழி தெரிந்த சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு முன்னால் நின்றிருந்த மாணவிகள், வகுப்பில் சற்று பிரபலமானவர்கள். அவ்வப்போது ஆசிரியர்களால், புத்தகம் தூக்கிச் செல்ல அழைக்கப்படுபவர்கள். வருடத் தொடக்கத்தில் வீட்டிலிருந்து டஸ்டர் தைத்து எடுத்து வருபவர்கள். அவர்கள் பேசிக் கொண்டிருந்த விஷயம் என்னை ஈர்த்தது.
அந்த வருடப் பள்ளி விழாவில் நாடகம் ஒன்றை போடப் போவதாகத் திட்டமிட்டு, நடிப்பதற்கு ஆட்களை அவர்கள் நிர்ணயம் செய்து கொண்டிருந்தார்கள். அது ராஜா ராணி நாடகம். யார் ராணியாக நடிப்பது என்று அவர்களுக்குள் போட்டி. ஓரிரு நிமிட இடைவெளியில், நன்றாய் பேசத் தெரிந்த பெண் வாதாடி தன்னை ராணியாக்கிக் கொண்டாள். இருந்ததில் உயரமான பெண் ராஜாவாக நடிப்பதற்கு ஒப்புக் கொண்டாள். பக்கத்தில் நின்றிருந்த நான் ஆர்வ மிகுதியில், “நானும் நடிக்கிறேன்ப்பா. என்னையும் சேர்த்துக்கோங்க!” என்றேன் பாவமாய்.
எதிர்பாராத திசையிலிருந்து வந்த குரலைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள் அவர்கள்.
நாடகத்தில் ராணியாக நடிக்க இருந்தவள், உதட்டை அலட்சியமாய் சுழித்தாள்.
ராஜாப் பெண் போனால் போகிறதென்று நினைத்தவள் போல,
“உங்க வீட்ல வேட்டி இருக்கா?” என்றாள்.
அப்பாவை வேட்டியில் பார்த்த நினைவு எனக்கு இல்லை. வேலைக்கு எப்போதும் பேண்ட் சட்டை தான் அணிந்து செல்வார். ஆனால் பாச்சை உருண்டை வாசம் படிந்த வேட்டிகளை, டிரங்க்குப் பெட்டியின் அடியில் பார்த்திருக்கிறேன். அதே நேரம் வேட்டி என்றால், ஆண் வேடம் என்றும் புரிந்தது. சமர்த்தியமாக எங்கள் வீட்டில் வேட்டி இல்லை என்று தலையையும் கைகளையும் ஆட்டியபடி சொன்னேன்.
“ஏய் உன் வீட்ல இருக்கா?” என்று ராணிப் பெண்ணைக் கேட்டாள் அவள்.
நல்லவேளை, எனக்கு வேட்டி ஈய ராணிப்பெண்ணுக்கு மனம் வரவில்லை. தப்பித்ததாய் நினைத்தேன்.
“சரி! ராணிக்கு பக்கத்தில நின்னு சாமரம் வீசுவாங்களே! அந்த தோழிப் பெண்ணா இருக்கியா?”
படத்தில் பார்த்திருந்த பளபள உடைப் பெண்கள் நினைவிற்கு வந்தார்கள். நெற்றிச்சுட்டியைக் கூட அவர்கள் நெற்றியில் பார்த்த ஞாபகம் இருந்தது. மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன்.
அந்த நேரம் நின்றிருந்த வரிசை நகர்ந்தது. எங்குச் செல்கிறோம் என்ற சந்தேகம் திடீரென தோன்ற இப்போது தோழமைக் கொண்ட அந்தப் பெண்களிடம் விசாரித்தேன்.
“யாரோ இந்திரா காந்திய ரிக்ஷாவில கடத்திகிட்டு போயிட்டாங்களாம்! அதனால நம்மளை வீட்டுக்கு அனுப்பறாங்க!” என்றாள் ராஜாப் பெண்.
இந்திரா காந்தியைத் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். எந்த பிள்ளை பிடிப்பவன் ரிக்ஷாவில் அவரைக் கடத்தியது என்று யோசித்தபடி பள்ளி வாசலில் முன்பே வந்து காத்திருந்த அம்மாவை நோக்கிச் சென்றேன். அன்றும் அதைத் தொடர்ந்த விடுமுறை நாட்களிலும் வெறும் கைகளால் சாமரம் வீசிப் பார்த்தபடி இருந்தேன்.
தொலைக்காட்சியில் இந்திரா காந்தியின் உடலை எடுத்துச் சென்ற, எரித்த காட்சிகளை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்ததில் நாடகத்தை எல்லோரும் மறந்துவிட்டார்கள் போல. அதன் பிறகு அதைப் பற்றி யாரும் பேசவே இல்லை!

கருத்துகள் இல்லை: