( கொடுக்கப்பட்ட முதல் வரிக்காக எழுதிய கதை. இக்கதை பிப்ரவரி (2017) கதைக்களத்தில் இரண்டாம் பரிசு பெற்றது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்திற்கு நன்றி)
எனக்கு
இந்த ஊர் புதிதாக இருந்தது.
இதுநாள் வரையில், என் மன வரைபடத்திலிருந்தது, ஓசைகளாலும் தொடுகைகளாலும் வாசத்தாலும் கட்டமைக்கப்பட்ட ஊர். இது
அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத இடம்.
எல்லாவற்றையும் இன்றே
பருகிவிடும் துடிப்போடு கண்களைப் பெரிதாய் விரித்து, சுற்றிலும் பார்த்தவாறு நடந்தேன். பள்ளமும்
மேடுமாக மட்டுமே இத்தனை நாட்கள் அறிமுகமாகியிருந்த சாலை, எல்லையில்லா வழிகளைக் காட்டி மலைப்பைத் தந்தது. சுற்றிலும்
வட்ட, அல்லது வட்டத்திற்கு அருகிலிருக்கும் முகங்கள். மரங்களின் பச்சை மனதைத் தடவுவதாயிருந்தது. இதுவரை வெப்பத்தால் மட்டுமே உணர்ந்திருந்த சூரியன், நேரத்தைப்
பொறுத்து மஞ்சள் அல்லது ஆரஞ்சாய் மாறக்கூடியது என்பதை மனதில் குறித்துக் கொண்டேன். இதையெல்லாம் நான் கற்றுக்கொள்ள படப்புத்தகம் வாங்கி வைத்திருக்கிறாள் அம்மா.
தாழம்பூ
குங்குமம் மணக்கும் குளிர்ச்சியான அம்மா என் நினைவில் இருப்பது போல, அவளது முப்பரிமாண முகம் இன்னும் மனதில் பதியவில்லை. அப்பாவின் அறிவுசார்ந்த வாதத்தை, அவர்
முகத்தில் தெரிந்த உணர்வுகளோடு சேர்த்து உள்வாங்க முடியாமல் தடுமாறினேன். மொத்தத்தில் இருண்ட என் முன்னாள் உலகின் கதகதப்பை, இப்புதிய
ஊர் எனக்குக் கொடுக்கவில்லை.
என்னைப்
பொறுத்தவரை, இவ்வுலகம் வண்ணக் குழம்புகளால் தீட்டப்பட்ட, மிகப்பெரிய புதிர் விளையாட்டு. வழியில் என்னைப் பார்த்து உதடு விரிய சிரித்தவர்கள் புதிர் விளையாட்டின் பகுதிகளாக என் மனதுள் உறைந்தார்கள். பேசினாலொழிய அவர்களை என்னால் அடையாளம் காண முடியாது.
இரைச்சலாய்,
நாற்றமாய், இதுவரை நெஞ்சில் படிந்து போயிருந்த ஈரச்சந்தையின் மூன்றாவது பரிமாணத்துள் நுழைந்து ரோஜா மலர்களை வாங்கிக் கொண்டேன்.
எம்.ஆர்.டி நிலையத்தைக் கண்களால் பார்க்க மகிழ்ச்சியாய் இருந்தது. அப்போது,
“ஹாய், யூ லுக் ஹேண்ட்சம்!” என்ற குரலுக்குத் திரும்பி அதைச் சொன்ன பெண்ணின் குண்டு முகத்தைப் பார்த்தேன். அவளுடைய கண்கள் என் கவனத்தைக் கலைத்தது. பிற
கண்கள் என் விழிகளை நோக்குவதை என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்களை மூடி, மூளையை
நிரடி, அது ரோசலினின் குரல் என்று உணர்ந்து சந்தோஷித்தேன். புதிரின் ஓர் முடிச்சை அவிழ்க்க முடிந்த குதூகலத்துடன் அவளுடைய ஷேமத்தை விசாரித்தேன்.
கால்களைத்
தாங்கிய தரை, தனது அடையாளத்தை உணர்த்தி என்னை விரைவு ரயிலினுள்ளே செலுத்தியது. ரயில் முழுக்க ரோசலின் போன்ற முகங்கள். இன்னுமொருமுறை அவளைப்
பார்த்தால் நிச்சயம் அடையாளம் காணமுடியாது. மார்சிலிங்கில் இறங்கும் போது, ஒரு
முறை கண்களை மூடி, போக வேண்டிய விலாசத்தை நினைவுபடுத்திக் கொண்டேன்.
ஒன்பதாவது
மாடியிலிருந்த அந்த வீட்டினுள்ளே பெரிதாய் மாட்டப்பட்டிருந்த படம்…… அவனாய் தான்
இருக்க வேண்டும். யாரென விசாரித்து, “ப்ளீஸ் கம்!” என்று உள்ளே அழைத்த பணிப்பெண், என்னை அமரச் சொன்னாள்.
“மாம்! நம் ஜோயியின் கண்களைப் பொருத்தியிருக்கிறார்களே! அந்த ஆடவன் வந்திருக்கிறான்!” என்று அவள் ஆங்கிலத்தில் சொல்வது கேட்டது. சற்றே பரபரப்புடன் கூடிய காலடிகள் கூடத்தை நோக்கி வருவதை உணர்ந்தேன். என் மனம் இந்த அழகான உலகைக் காதலிக்கத் தொடங்கியது அந்த நொடியில் தான். எனக்கு
பார்வையைக் கொடுத்த மகனின் தாயைச் சந்திக்க தயாராகத் துவங்கினேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக