வெள்ளி, 8 மே, 2015

ஒருவேளை கோப்பி

சல்லடைக் கண்களாய் பூச்சியரித்த
முருங்கைக் கீரையை
ஒரு வெள்ளி இருபது காசுக்கு
வாங்கியிருக்கும் என்னைப் பார்த்து
நீங்கள் சிரிக்கக் கூடும். . . . . .

அதை விற்ற பல்லுதிர்ந்த கிழவன் தன்
பதறும் சரீரத்தை நிலை நிறுத்தி
துரட்டி வைத்து பறித்திருக்கக் கூடிய சாத்தியத்தையும்,
விழப்போகிற இலைகளைப் பொறுக்கும் ஆவலோடு
கண் இடுங்க மேல் நோக்கி பார்த்தபடியிருக்கும்
கோலூன்றிய கிழவி யொருத்தியின் உருவத்தையும்
சித்திரமாய் வரைந்தது,
அவனது மிச்சமிருந்த பற்களின்
இடைவெளி வழி செவியடைந்த.
‘இந்த பணம் என் ஒரு வேளை கோப்பிக்கானது’ என்ற
மொழி கடந்த மலாய் வார்த்தைகள்.

காத்திருந்த கிழவியின் பங்கு கோப்பிக்காய்
இன்னொரு கட்டு கீரை வாங்கிய என்னை
நீங்கள் முட்டாள் என்றும் நினைக்கக் கூடும். . .
பரவாயில்லை!
அவர்கள் இந்நேரம் கோப்பி குடித்திருப்பார்கள்.

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சுவையே...

Jayakumar Chandrasekaran சொன்னது…

different stroke?

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கீரை பூச்சி அரித்தாலும் உங்கள் எண்ணம் பூச்சி அரிக்கவில்லை! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

மோ.சி. பாலன் சொன்னது…

arumai

vcl சொன்னது…

Super