சாம்பல் நிறத்தில்
கறுப்பு கரை வைத்த பட்டுப் பாவாடையைக் கட்டிக் கொண்டு சுற்றினால் குடையாய் விரியுமே, அது போல பென்சிலின் சீவல் ஷார்ப்னரிலிருந்து வெளி வந்துக்கொண்டிருந்தது. சிறுமியாய் இருந்த போது இதை சாதம் வடித்த கஞ்சியில் ஊறவைத்து, காய வைத்தால் ரப்பர் கிடைக்கும் என்று செய்து பார்த்தது நினைவுக்கு வந்தது. குண்டூசியில் வண்ண மணியைச் செருகி, ரப்பர்த் துண்டை திருகாணியாய் பொருத்தி, ஒரு ஜோடி பத்து காசுக்கு விற்ற பத்மா தான் அதைச் சொன்னாள். அப்போது மூன்றாவது படித்துக் கொண்டிருந்ததாய் நினைவு. அந்த கம்மலைக் காசு கொடுத்து வாங்கி, பெருமையாய் போட்டுக் கொண்டிருந்தது நினைவிருந்தது சித்ராவுக்கு. அம்மா கூட ‘இதென்னடி பைத்தியக்காரி மாதிரி’ என்றாள்.
பத்மாவிற்கு இருந்த
கற்பனைத்திறனுக்கு இன்று வடிவமைப்புத்துறையில் கலக்கிக் கொண்டிருக்க வேண்டும். அவள் இது போல ஏகப்பட்ட முயற்சிகளைச் செய்திருக்கிறாள். ஒருமுறை மாறுவேடப்போட்டியில் இருவரும் வளையல் விற்பவர்களாய் வேடம் போட்டனர். மேடையேறி கூட்டத்தைப் பார்த்ததும் இவளுக்கு கால்கள் ‘வெலவெல’வென்று நடுங்க, கைகளை மட்டும் அசைத்தாள். பத்மா தைரியமாய் பாடினாலும் இவர்களுக்கு பரிசு எதுவும் கிடைக்கவில்லை. அதுவே இவளுக்கு மேடையேறிய கடைசி அனுபவமாகவும் ஆனது.
பள்ளியில் அடிக்கடி
புத்தகத்தை மறந்தோ, வீட்டுப் பாடம் செய்யாமலோ, மதிப்பெண் குறைவாக எடுத்தோ ஆசிரியாரின் கோபத்திற்கு அடிக்கடி ஆளாகும் ஒருத்தியாகவே இருந்திருக்கிறாள், சித்ரா. ஒருமுறை, யு. கே. ஜி என்று நினைவு, விவேகானந்தன் என்ற மாணவன் பாக்சைத் திறந்து உள்ளே இருந்த பிஸ்கட் வேண்டுமா என்று கேட்டான். உள்ளேயிருந்த சாக்லேட் வைத்த மஞ்சள் பிஸ்கட்டிற்கு ஆசைப்பட்டு, தலையசைத்தபடி எடுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில், டாய்லெட் சென்று திரும்பிய மாதவன் வகுப்பு ஆசிரியையிடம் திருட்டு போன தன் பிஸ்கட்டைப் பற்றி புகார் கொடுத்தபோது தான், அந்த பிஸ்கட் மாதவனுடையது என்று தெரிந்தது. விவேகனந்தன் இவளைக் காட்டிக் கொடுக்க, பிஸ்கட் துணுக்குகள் ஒட்டிய வாயுடன் மாட்டிக் கொண்டாள். காதில் பெரிய வளையம் அணிந்திருந்த அந்த ஆசிரியை இவளின் இரட்டைப் பின்னலில் ஒன்றைப் பிடித்து இழுத்து, அனைவரின் முன்னும் உதாரணமாய் நிற்க வைத்து திருடுவது தவறு என்று உபதேசம் செய்த போது இவளுக்கு அவமானமாய் இருந்தது.
அப்போதெல்லாம் எவ்வளவு
முயன்றும் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்க முடிந்ததே இல்லை. கனத்த மழையில் இவள் பள்ளித்திடல் முழுக்க நீரால் நிரம்பிவிட்டதாகவும், அதில் ஆசிரியையின் குழந்தை மூழ்கி விடுவதாகவும், இவள் நீரில் குதித்து, நீந்தி அதன் குடுமியைப் பிடித்து இழுத்து காப்பாற்றுவதாகவும், ஆசிரியை அவளை கட்டி அணைத்து, அவளுக்கு பட்டுப் பாவாடையெல்லாம் அணிவித்து,
சாக்லெட் வாங்கிக் கொடுப்பதாகவும் கற்பனை செய்துக் கொள்வாள். சந்தோஷமாய் இருக்கும். பத்மா வகுப்பில் முதல் மாணவி இல்லையென்றாலும், இவளைவிட கெட்டிக் காரி என்று நினைப்பதற்கு அவள் ஆசிரியரிடம் திட்டு
வாங்கியதில்லை என்ற நிலையே போதுமானதாய் இருந்தது. பத்மா இவளைத் தோழியாய் வரித்ததற்கான காரணம் அவளுக்கு இன்று வரைப் புரியவில்லை.
பாப்கட்டிங்கோடு பினோஃபார்ம் போட்ட
பத்மா நினைவில் நின்றாள். ஏனோ இவளுக்கு இப்போதே பத்மாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அவளைத் தேடி பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அவளுடைய விலாசம் சித்ராவிடம் இல்லை. விலாசத்தை வாங்கி வைக்க வேண்டிய அவசியம் இருந்ததாய் அப்போதைய சித்ராவுக்கு தோன்றவில்லை.
கூகிளில்
தேட முயற்சித்தாள். அது பத்மா சுப்ரமணியத்தைப் பற்றி நிறைய காட்டியது. பெண் ஃபேஸ்புக்கில் தேட உதவி செய்தாள். நிறைய பெயர்கள், புகைப்படங்கள்……. இதில் தோழியை எப்படி
சலித்தெடுப்பது!
இவளுக்கு
கணவனை நினைத்து பொறாமையாய் இருந்தது. அவனுக்கு நிறைய நண்பர்கள். அவன் பிறந்ததிலிருந்து அதே வீட்டில் இருப்பதால் பள்ளி காலத்து நண்பர்கள் கூட அவனோடு தொடர்பிலிருந்தார்கள். அவளுக்கோ திருமணத்தோடு அனைத்து தொடர்புகளும் விட்டுப் போயிருந்தன. அம்மா வீடு போகும் போது தோழிகளைப் பார்க்கச் சென்றால், அவர்கள் திருமணமாகி வேறு இடத்திற்கு சென்றிருந்தார்கள். ஆண்களின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாய் அதிக சலனமற்று செல்ல, பெண்களுடையது திருமணத்திற்கு பின் காட்டாறு போல பாதை திரும்புவதாய் அவளுக்குத் தோன்றியது.
பெண்ணின் உதவியால் சில தோழிகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. முதுகிற்கு பின்னாலிருந்து கணவன் எட்டி பார்ப்பது போன்ற ஒரு பிரம்மை இருந்தால், தன்னுடன் படித்த ஆண்களை நண்பர்களாக்கிக் கொள்வதில் அவளுக்கு தயக்கமிருந்தது. ரேகா சந்திரசேகர், ரம்யா வேணுகோபால், ப்ரியா பாலன், புனிதா கேசவன் என்று கணவரின் பெயரோடு கிடைத்த சில முதிர்ந்த தோழிகளைப் பார்க்கும் போது சந்தோஷமாய் இருந்தது. பத்மா மட்டும் கிடைக்கவில்லை. ரம்யா சென்னையிலேயே இருந்தது மகிழ்ச்சியளித்தது. ரம்யாவை அந்த வார இறுதியில் பார்ப்பதாக அவளுடன் பேசி முடிவு செய்து கொண்டாள், சித்ரா. வெள்ளிக் கிழமை இரவு முழுவதும் தூக்கமின்றி புரண்டு, காலை சீக்கிரம் எழுந்து, உணவு சமைத்தாள்.
பெண்ணுடன் வண்டியில்
பயணித்த போது எதிர்பார்ப்போடு ஆவலும் கலந்திருந்தது. ரம்யா இவளோடு ஆறாவது முதல் ப்ளஸ் டூ வரை படித்தவள். பேச்சுக்கு பேச்சு நகைச்சுவையாய் வெட்டிப் பேசுவாள். ஒருமுறை இவள் ரம்யாவின் வீட்டிற்கு போயிருந்த போது, அவளின் அம்மா மிக நன்றாய் கவனித்துக் கொண்டார். போதும் போதும் என்று மறுத்தும் தட்டில் சாதம் பரிமாறியது மட்டும் கஷ்டமாய் இருந்தது. அன்று சாப்பிட்டதில் கிட்டதட்ட மூச்சுமுட்டி போயிற்று.
ரம்யாவிற்கென்று தனி அறையெல்லாம்
இருந்தது. அன்று கார்த்திக்கைப் பற்றியும் கமலஹாசனைப் பற்றியும் நிறைய பேசினார்கள். ரம்யாவின் குரல் ஸ்வர்ணலதாவின் குரலோடு இணைந்து போகக்கூடியதாய் இருந்தது. ‘போவோமா ஊர்கோலம்’ என்ற பாடலை உருக்கமாய் பாடுவாள். இவள் அவளுக்கு மிக நெருங்கிய தோழியாய் இல்லாவிட்டாலும், நிறைய நாள் கழித்து பார்க்கப் போவது மகிழ்ச்சியாய் இருந்தது. அவள் வீட்டின் முன் இறங்கிய போது நடுவில் முப்பது வருடங்களை நழுவ விட்டிருந்தாள் சித்ரா. மகள் பிறகு வருவதாக சொல்லிவிட்டு சென்றாள்.
வீடு பெரிதாக
இருந்தது. வராண்டாவில் கூடை ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருந்தது. சற்றே முதிர்ந்த தோற்றமும் சில நரைமுடிகளையும் தவிர ரம்யாவிடம் பெரிய மாற்றம்
எதுவும் இல்லை. ரம்யா மிகவும் உரிமையோடு கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள். பிரம்மாண்ட கூடத்தில் உட்கார்ந்தபடி துபாயில் இருக்கும் கணவனைப் பற்றியும், பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து பிறந்த மகனைப் பற்றியும் சொன்னாள். மகன் கூப்பிட்டதற்கு எட்டிப் பார்த்து ஹலோ சொல்லிச் சென்றான்.
சித்ராவுக்கு ரம்யாவுடன் பேச நிறைய இருந்தது.
“நம்மோட படிச்ச கவிதா ஞாபகம் இருக்கா உனக்கு?” என்றாள் சித்ரா.
“டி. கவிதா தானே! அவளை ஒரு அஞ்சு வருஷத்திற்கு முன்ன டி. நகர்ல பார்த்தேன். அவ விருதுநகர்ல இருக்காளாம். அவளுக்கு அப்போ ஒரு பையன் இருந்தான். ‘துரு துரு’ன்னு ஒரு இடத்தில நிக்கல!”
“கிருஷ்ணா கூட அப்படி தான்! ஒரு நிமிஷம் ஓய மாட்டான். . . குழந்தையா இருந்தப்ப இவன் பின்னாடி ஓடி ஓடியே இளைச்சுட்டேன்! ஒன்றை பிடிச்சா பிடிச்சது தான்! நினைச்சத சாதிச்சிடுவான்! ட்ரம்ஸ், கீ போர்ட் இதுக்கெல்லாம் க்ளாஸ் போட்டிருக்கேன். . . ”
சாலையில் ஆம்புலன்ஸ்
ஒன்று கூக்குரலிட்டபடி சென்றது. தொலைகாட்சி நாடகத்தில் ஒரு நடிகை எதற்காகவோ மாய்ந்து மாய்ந்து அழுது கொண்டிருந்தாள். கணவன் சாப்பிட்ட பிறகு சாம்பாரை ஃப்ரிட்ஜில் வைப்பானா என்று சித்ராவுக்கு சந்தேகமாய் இருந்தது.
“நாமெல்லாம் சங்கீதாவோட கல்யாணத்திற்கு போனோமே ஞாபகம் இருக்கா? அப்போ தான் நாம கடைசியா பார்த்தோம்ல்ல!” என்றாள் சித்ரா.
“ஆமாம்! என்ன செய்யறது? கிருஷ்ணாவைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கு!”
“காலையில சிக்ஸ் தர்ட்டிக்கு பூஸ்ட் குடிச்சுட்டு ட்யூஷன் கிளம்பினா, நைட் ஏழரைக்கு தான் வரான். நடுவில ப்ரேக் ஃபாஸ்ட் கொடுத்து ஸ்கூல்ல விட்டுட்டு . . . லஞ்ச்
ரெடி பண்ணி அங்க கொண்டு கொடுத்து, சாயந்திரம் டிபன் போர்ன்விட்டா கொடுத்து மறுபடி மேத்ஸ் ட்யூஷன்ல விட்டு . . . ஒரு நாள் சாப்பிட்ட சாப்பாட்ட இவன் அடுத்த ஒரு வாரத்துக்கு சாப்பிட மாட்டான். அதுக்கேத்தா மாதிரி மெனு வேற ரெடி பண்ணனும்!”
சித்ராவுக்கு கொட்டாவி
வந்தது. மதிய உணவின் போதும் கிருஷ்ண புராணம் தொடர்ந்தது. அதன் பின் அவன் புகைப்படங்களும், வீடியோக்களும். பார்த்து முடித்த போது பெண் வந்தாள்.
வண்டியில் செல்லும் போது
“
அம்மா! டிட் யூ எஞ்சாய் யுவர் செல்ஃப்?” என்று கேட்டாள்.
“ம் . . .” என்றாள் ஹீனமாய்.
எதிலோ ஏமாந்தது போல தோன்றியபடியே இருந்தது இவளுக்கு.
“கவலைப்படாதே அம்மா! பத்மா ஆண்டியைக் கூட சீக்கிரம் கண்டுபிடித்து விடலாம்!”
“சீக்கிரம் போடி! அப்பா வீட்ல தனியா இருப்பார்!”
“அவர் என்னிக்கும்மா தனியா இருந்திருக்கார்? இன்னேரத்திற்கு சுந்தரம் அங்கிள் வீட்டிற்கோ, பூபதி அங்கிள் வீட்டிற்கோ போயிருப்பார்!”
சொன்னது போல கணவன் வீட்டில் இல்லை! இவளுக்கு மொத்த ஆண்வர்கத்தின் மீதும் பொறாமை ஏற்பட்டது.
பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த போது
“வாம்மா! பத்மா ஆண்டியைத் தேடலாம்” என்றாள் பெண்.
பத்மா கிடைத்தாலும் பதினோரு வயதில் தொலைந்த பத்மா கிடைக்க மாட்டாள் என்று தோன்றியது இவளுக்கு.
“இல்லடி! நான் ராத்திரிக்கு சமைக்கணும்! நிறைய வேலை இருக்கு! அப்புறமா பார்க்கலாம்!” என்றாள் சித்ரா.
(கல்கி சிறுகதைப் போட்டி 2012ல் பிரசுரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதை)
(கல்கி சிறுகதைப் போட்டி 2012ல் பிரசுரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதை)
7 கருத்துகள்:
ம்...
அருமை...
நிச்சயமாக அந்த பத்மா கிடைக்கமாட்டாள்
மனம் கவர்ந்த அருமையான கதை
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
"பினோஃபார்ம்" என்றால் என்ன?
"பதினோரு வயதில் தொலைந்த பத்மா கிடைக்க மாட்டாள்" - சின்ன கருவை வளர்த்திருக்கிறீர்கள். இன்னொரு கதையில் சொன்னது போல் உங்கள் strength இது தான்.
மிகவும் ரசித்தேன். அத்தனை பில்டப்புக்குப் பின் அந்த ஒரு வரி ஹெவி வெயிட்.
கல்கி வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சௌந்தர், ரமணி.
@ அப்பாதுரை
கதையில் உள்ள நிறைகளைச் சொன்னதற்கு மிக்க நன்றி! என் எழுத்தை உங்களின் வார்த்தைகளின் மூலம் சற்றே புரிந்துக்கொள்ள முடிகிறது.
குறைகள் இருந்தாலும் சொல்லுங்கள். உதவியாக இருக்கும். மிக்க நன்றி!
பிடிக்காதவர்களிடம் மற்றும் வேறு சில சந்தர்ப்பங்களுக்கும் ஹீரோ ஆகும் கற்பனைகள் எல்லோரையும் போலவே எனக்கும் உண்டு என்பதால் அந்த வரிகளை ரசிக்க முடிந்தது. பழைய நட்புகளை இப்போதும் நினைப்பது கஷ்டம் என்னும் கருத்தில் கதை அருமை. அந்த அனுபவமும் எலோருக்குமே இருக்கிறதுதான் போலும்! வாழ்த்துகள். சந்திக்கச் சென்ற அந்தத் தோழி மூலம் பத்மாவைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டு, அது இளவயதுக்கு மிக நேர்மாறான வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்த்தேன்! 'சட்'டென அந்த கல்கியை எடுக்காமல் கேட்கிறேன். அவர்கள் எடிட் செய்த கடைசி வரி இதுதானா? இதுவும் படித்த மாதிரிதானே இருக்கிறது?
@அப்பாதுரை
pinafore என்ற உடையை தமிழில் பினோஃபார்ம் என்று செல்லமாய் கூப்பிட்டு பழகிவிட்டது!
@ ஸ்ரீராம்
ஆம்! இது தான் அந்த கடைசி வரி! இது புத்தகத்தில் இல்லை. இடப்பற்றாக் குறையோ என்னவோ!
ஆண்களில் எப்படியோ, பெண்களைப் பொறுத்தவரை பழைய நட்பு திரும்புவதில்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.
நீங்கள் கொடுத்திருக்கும் முடிவு கூட நன்றாய் தான் இருக்கிறது!உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!
கருத்துரையிடுக