கை வெங்காயத்தை வெட்டிக்கொண்டிருந்த போதிலும், மனம் மும்மரமாய் தேடிக் கொண்டிருந்தது.
இன்னும் சற்று நேரத்தில் இந்த பரபரப்பு ஓய்ந்து விடும். பிறகு தான் அலமாரியை தலை கீழாக கவிழ்த்து தேட வேண்டும்.
காலை நேர பள்ளிக்கு மகன் கிளம்பி சென்றவுடன் பாதி சத்தம் குறைந்தது. பசியாறச் செய்து கணவரை வழியனுப்பியதும் வீடு மொத்தமும் அமைதியானது. இப்போது காணாமல் போன அந்த கம்மல் மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது.
அலமாரியிலிருந்து புடவைகளை எல்லாம் அடுக்கு கலையாமல் எடுத்து மேஜையின் மீது வைத்தாள். அடியில் விரித்திருந்த செய்தித்தாள்களைத் தூக்கிப் பார்த்தாள். அவற்றை ஒவ்வொன்றாய் எடுத்து, முழுமையாய் விரித்து உதறினாள். ம்ஹீம். . .
இரண்டு நகைக் கடை ரசீதுகளும், வாசனைக்காக வைக்கப்பட்டிருந்த சோப்பு உறைகளும் சற்று தள்ளிப் போய் விழுந்தன. ஒரு கரப்பான் பூச்சி தரையில் விழுந்து, சமாளித்து, இலக்கில்லாமல் ஓடி அலமாரியின் அடியில் ஒளிந்தது.
‘எப்போ கடைசியா போட்டோம்?’ மனம் அலசிப் பார்த்தது.
‘சென்ற மாதம் பெருமாள் கோயிலுக்கு போனோமே, அப்பவா!’
‘அதுக்கு முன்னால் எங்க போனோம்?’ சரியாக நினைவுக்கு வரவில்லை.
‘ரஞ்சிதா பெண்ணின் பிறந்த நாளுக்கு... இல்லை அப்போ அந்த ‘ரூபி செட்’ போட்டிருந்தோம். கவிதா கூட ‘அழகா இருக்கு, எவ்வளவு?’ ன்னு விசாரிச்சாளே!’
மறுபடி புடவைகளை உள்ளே அடுக்கினாள். நவம்பர் மாதம் ஊருக்கு போகும் போது எடுத்துச் சென்றோமா? அவளுக்கு சரியாய் ஞாபகம் இல்லை. அலமாரியை முற்றுமாய் அடுக்கி விட்டு நிமிர்ந்த போது, மணி பத்தை நெருங்கியிருந்தது. சந்தைக்குப் போக வேண்டும் என்பது நினைவுக்கு வந்தது. மனம் லயிக்காமலே, லேசாக தலையை வாரிவிட்டுக்கொண்டு கிளம்பினாள்.
மின்தூக்கியின் அருகே இரண்டு வீடுகள் தள்ளி குடியிருக்கும் மிஸ் கோ “ஹல்லோ, ஹவ் ஆர் யூ!” என்றாள். நன்றாய் இருப்பதாய் சிறு புன்னகையுடன் சொல்லிவிட்டு, பதிலுக்கு விசாரிக்கவும் மறந்து கம்மலில் மூழ்கினாள்.
மின்தூக்கியை விட்டு வெளியே வந்த போது, ஒரு கறுப்புப் பூனை வலமிருந்து இடம் ஓடியது. பூனை குறுக்கே ஓடினால் நல்லதில்லையே! சற்றே தயங்கி நின்றாள்.
‘சந்தைக்குத் தானே! பூனை என்ன செய்யப்போகுது!’ மேலே நடந்தாள்.
மேகம் சூழ்ந்திருக்க வெயில் சற்றே தணிந்திருந்தது.
‘இந்த ஊரில் இருந்துக் கொண்டு பூனையையும் நாயையும் பார்த்தால் ஆகுமா?’ சிரிப்பு வந்தது அவளுக்கு.
உடனே தொலைந்து போன கம்மல் மனதுக்குள் தோன்றி சிரிப்பை ரத்து செய்ய வைத்தது. கணவரிடம் சொன்னால் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்.
இவளுக்கு தான் மனசு கேட்கவில்லை. எப்படியும் முக்கால் பவுனுக்கு குறையாது. கிராம் அறுபத்தி ஐந்து வெள்ளிக்கு விற்கும் நிலையில். . . குறைந்தது ஐநூறு வெள்ளிகளாவது இருக்கும்! போகட்டும், கணவர் முதன் முதலாய் வாங்கிக் கொடுத்தது.
மனம் சங்கடப்பட்டது. அடிவயிற்றிலிருந்து பெருமூச்சு கிளம்பியது. விளையாட்டுத் திடலில் கம்மல் அணியாத அல்லது கம்மலைத் தொலைக்காத யுவ, யுவதிகள் சத்தமாய் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். இவளுக்கு அது ரசிக்கவில்லை.
பார்வை, என்னமோ கம்மல் அங்கே தான் விழுந்து தொலைந்தது போல, நிலத்தையே அளைந்துக் கொண்டு வந்தது. அறிவு இடித்தாலும், கண்களை மேலெழுப்ப முடியவில்லை.
கடைக்காரர்கள் வெளியே வைக்கப்பட்டிருந்த விற்பனைப் பொருட்களுக்கு அவசர அவசரமாக ப்ளாஸ்டிக் உறைகளை போட்டுக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக வாங்கும் சீனப் பெண்ணிடம் உருளையும், வெங்காயமும் வாங்கிக் கொண்டாள். தோடு அணியாத அந்த பெண்ணின் மஞ்சள் காது இவளைக் கவர்ந்தது. அவளுக்கு தோடு தொலையும் பிரச்சனையே இருக்காது என்று நினைத்துக் கொண்டாள். அவள் தோட்டைத் தவிர வேறு எதையும் தொலைத்திருப்பாளா என்ற அனாவசிய சந்தேகம் ஏற்பட்டது. எதைத் தொலைத்தாலும் தனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு அவளுக்கு ஏற்பட்டிருக்குமோ! இருக்காது என்றே தோன்றியது.
ஈரச் சந்தையில் மீன் வாங்கிக் கொண்டிருந்த போது மழை வலுத்திருந்தது. அருகிலேயே ஏழரை வெள்ளிக்கு கோழியும் வாங்கிக் கொண்டாள்.
மகனுக்கு கோழி என்றால் உயிர். ஆனால் கணவர் மீனை மட்டுமே விரும்பினார். வீட்டில் மூன்று பேராக இருந்தாலும் எப்போதும் விருந்தாளிக்கான சமையல் தான். அதிலும் காலை, மதியம், மாலை, இரவு என்று நான்கு வேளைக்கும் சம்பிரதாயமான சமையல்!
மழை கூரைகளிலும், சாலையிலும் பெரும் சத்தத்தோடு கொட்டிக் கொண்டிருந்தது. எவ்வளவு கவனமாய் நடந்த போதும் உடையின் கீழ்பாதி முழுதுமாய் நனைந்து விட்டிருந்தது.
எப்படியும் வீட்டிற்குப் போய் இன்னொரு முறை குளித்தாக வேண்டும். எதிரில் ஒரு பெரிய பையை சுமந்தபடி ஒரு வயதான பெண்மணி வந்துக் கொண்டிருந்தாள்.
“சுடிதார் பாக்கறியாம்மா!” என்றாள். மறுத்தவளை,
“சரி, இங்க ரயில பிடிக்க எப்படிம்மா போறது?” என்றாள்.
பார்க்கும் போது அம்மாவின் நினைவு வந்தது. ஊரிலிருந்து டூரிஸ்ட் விசாவில் பொருட்களை எடுத்து வந்து இது போல விற்பவர்களை இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிகிறது. அவளுக்கு வழியை காட்டிவிட்டு நடந்த போது மழையின் வேகம் குறைந்திருந்தது.
தன் ப்ளாக்கின் கீழே வந்த போது தான் முட்டை வாங்கவில்லை என்று ஞாபகம் வந்தது. கோழி, மீன் இத்தனை செய்தாலும் முட்டை ஆம்லெட்டும் வேண்டும் கணவருக்கு.
‘இனி எங்கே இன்னொரு முறை சந்தைக்குப் போவது!’ என்ற சலிப்பு தோன்ற அடுத்த ப்ளாக்கின் கீழே இருந்த கடைக்குச் சென்றாள். விலை சற்று அதிகம் தான்! இருந்தாலும் அவசரத்திற்கு அங்கே தான் வாங்குவது.
அந்த கடையில் ஒரு வயதான மூதாட்டி அமர்ந்திருந்தார். பத்து முட்டை இரண்டு வெள்ளி ஐம்பது காசுகள் என்றார். ஈரச் சந்தையில் இன்னும் மலிவாய் கிடைத்திருக்கும். மகனுக்கு பிடித்த இரண்டு பிஸ்கட் பொட்டலங்களையும் எடுத்து வைத்தாள்.
அந்த மூதாட்டி மனதிற்குள் விலையை கணக்கிட முயன்று, முடியாமல் இவளை ஒரு முறை பார்த்து சிரித்துவிட்டு, ஒரு வெற்றுத் தாளை எடுத்தார். கண்களை இடுக்கியபடி பொட்டலத்தின் மேலிருந்த விலையை பார்த்து அதில் எழுதினார். இவளும் அதை எட்டிப் பார்க்க, ஒரு பொட்டலத்தின் விலையைக் குறைவாக எழுதியிருந்தார். 2.80 என்பது 2.30 தாக அவர் கண்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
‘விலைய ஏத்திவச்சு தானே விக்கறாங்க! முட்டையில ஏத்தி வச்சது, பிஸ்கட்டுல குறைஞ்சிடுச்சி!’ என்று சந்தோஷமாக இருந்தது.
‘தாங்க் யூ’ சொல்லிவிட்டு பையை வாங்கிக் கொண்டு வேகமாக நடந்தாள்.
லிப்டில் ஏறும் போது மனம் குறுகுறுத்தது.
‘இந்த அம்பது காசுல அவங்களுக்கு ஒன்னும் பெரிய நஷ்டம் வந்துவிடாது’ என்று சொல்லி சமாதானப் படுத்திக் கொள்ள முயன்றாள்.
‘இது தான் விலைன்னு தெரிஞ்சு தானே அங்கே போனோம்! அப்ப அந்த விலையை கொடுக்கறது தானே நியாயம்!’
மறுபடி மனசாட்சி குறுக்கிட்டது.
‘எத்தனை 4டி சீட்டு வாங்கறோம்! எவ்வளவு செலவு பண்ணறோம்! அம்பது காசுக்கு ஏமாத்தறோமே இது தப்பில்லையா!’
‘ஏமாற்றுக்காரி! ஏமாற்றுக்காரி!’ என்று மனம் இடித்தது.
அந்த பாட்டியும் அவள் கணவனும் மாற்றி மாற்றி பார்த்துக் கொள்ளும் கடை. அவர்களின் அரை கோப்பை தேத்தண்ணிக்கான காசை பறித்துக் கொண்டது போன்ற எண்ணம் ஏற்பட்டது.
வீட்டை திறக்கத் தோன்றாமல் மறுபடி அந்த கடைக்குச் சென்றாள் பாட்டியிடம் நடந்ததை விளக்கி, ஐம்பது செண்ட்டை திருப்பிக் கொடுத்தாள்.
“ஷ்யே ஷ்யே!” என்று திரும்பத் திரும்பச் சொன்ன பாட்டியின் கண்களில் நன்றி தெரிந்தது. இவள் மனபாரம் அகன்று திரும்பினாள்.
வீட்டைத் திறக்கும் போது தான், ஊருக்கு சென்று திரும்பிய உடன் கம்மலை பெட்டியிலிருந்து எடுத்து பூஜை அறையில் சாமி படத்திற்கு பின்னே வைத்தது, சட்டென்று நினைவிற்கு வந்தது. அவளுக்கு நிம்மதியாயிருந்தது.
8 கருத்துகள்:
நான் நானாக . . .மாறியதும் தொலைந்த கம்மல் கிடைத்ததும் நிம்மதியானது..
அப்பாடா.... சுபம்...
நன்றி...
மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி, திண்டுக்கல் தனபாலன்
கல்கியில் உங்கள் கதை வெளிவந்து விட்டதே.... படித்து விட்டேன். அருமை. கதை பற்றிய என்னுடைய கருத்துகளை நீங்கள் பதிவில் வெளியிடும்போது பின்னூட்டமிட ரிசர்வ் செய்து கொள்கிறேன்!
தொலைத்த பொருள் கூட தோழிக்க இருந்த குணத்தைத் திரும்ப மீட்டு எடுத்ததும் கிடைத்து விடுகிறது இல்லை? என்ன மதிப்பானால் என்ன? காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கும் வரை மனதில் இருக்கும் தவிப்பு இருக்கிறதே...அடடா!
மிக்க நன்றி ஸ்ரீராம், உங்கள் கருத்துக்கும் கதை வெளிவந்த தகவலுக்கும். புத்தகம் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
ஒரு சிறிய கருவை மிக நன்றாக வளர்த்து சற்றும் எதிர்பாரா விதத்தில் சொல்லி முடித்திருக்கிறீர்கள். உங்கள் நடையில் ஒரு pattern இருப்பதைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறேன். இன்னும் படிக்க வேண்டும் :)
மிக்க நன்றி அப்பாதுரை, உங்கள் கருத்து என்னை ஊக்கப் படுத்துகிறது.
கருத்துரையிடுக