ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

அவளுக்கென்று ஒரு தினம்



     பெரு விரைவு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது  மகளிர் தின வாழ்த்துகளைச் சொல்லி தொலைபேசிக்கு வந்த அந்த தகவல் தாரிணியின் எண்ணங்களைச் சட்டென பிடித்து நிறுத்தியது. மனதிற்கு திருப்தியாய் ஒரு தினத்தைக் கொண்டாடி எத்தனை வருடங்கள் ஆகிறது! இப்போது வரும் விழாக்களெல்லாம் பலகாரங்கள் செய்வதிலும், அடுத்தவரைத் திருப்தி படுத்துவதிலுமே கழிந்து விடுகின்றன. தனக்கே தனக்கென்று ஒரு வேலையைச் செய்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன!

     இன்றைய தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று அவளது மனம் சொன்னது. எப்படி என்பதையும் அதுவே முடிவு செய்து கொண்டது. இன்று அவளுக்குப் பிடித்த வேலைகளை மட்டுமே செய்வது! அதாவது இந்த ஏழு மணி இருபத்தியாறு நிமிடம் இரண்டு நொடி முதல் மாலை ஆறு மணி வரை அவளுக்கே அவளுக்கான நேரம். ஒரு வினாடியைக் கூட வீணாக்காமல் முழுவதும் தனக்காகவே வாழ்வது என்று முடிவு செய்து கொண்டாள்.
    
     முதலில் தான் அவசர விடுப்பில் செல்வதாக அலுவலகத்திற்கு தெரிவித்தாள். பின்னர் தொலை பேசியை ஏரோப்பிளேன் மோடில் வைத்து,  பையினுள்ளே இருந்த சிறிய தடுப்பிற்குள் போட்டாள். இதோடு இவ்வுலகத்துடனான தொடர்பு அறுந்தது என்று நினைக்கையில் சந்தோஷமாய் இருந்தது அவளுக்கு.
    
     சுற்றியிருந்த  மனிதர்களை நோக்கி தன் கவனத்தைத் திருப்பினாள். அவளுக்குப் பக்கத்தில் உடார்ந்திருந்த மாணவன் புத்தகத்திற்குள் தலையை புதைத்துக் கொண்டிருந்தான். அன்று ஏதேனும் ப்ரீட்சை இருக்கக் கூடும். ரயிலில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் காதில் ஹெட் போன்களை மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டோ அல்லது தொலைபேசியை விரல்களால் தடவியபடியோ இருந்தார்கள். கதவருகே நின்றுக் கொண்டிருந்த ஆடவன் சத்தமாய் சீன மொழியில் பேசியபடி இருந்தான்.   அனைவரின் செயல்பாடுகளிலும் மறைமுகமாய் ஒரு அவசரம் தெரிந்தது. அவர்களிலிருந்து தான் வேறுபட்டவள் என்று தோன்றியது தாரிணிக்கு. அங்கிருந்த அனைவரும் ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவளுக்கு அப்படியொன்று இப்போதைக்கு இல்லை. முக்கியமாய் அவள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியது இல்லை. நேரமாகிவிட்டது என்று விரையத் தேவையில்லை. ஆர்சர்டில் இறக்கிய உடன் பேருந்து வரவேண்டுமே என்று கடவுளிடம் வேண்டத் தேவையில்லை. பேருந்து வாகன நெருக்கடியில் மாட்டாமல் செல்ல வேண்டுமே என்று பயப்படத் தேவையில்லை. தன்னைப் பிணைத்திருந்த தளைகள் அனைத்தையும் அறுத்துவிட்டதாகவும் தான் காற்றில் மிதப்பதாகவும் கற்பனை செய்துக்கொண்டாள்.
    
     இப்படி இருந்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. இலக்கியா தொடக்கப்பள்ளி செல்லும் வரை அவளைப் பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்டிருந்தாள். அப்போது இது போன்ற அவசரங்கள் இல்லாமல் பொறுமையாய் வேலைகளைச் செய்ய முடிந்தது அவளால். வீட்டிலிருந்து பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி இருந்தாலும், அப்போது நிம்மதியாய்  இருந்தோமா என்று யோசித்துப் பார்த்தாள். காலை எழுந்து பிரபு வேலைக்குச் செல்வதற்குள் சமைக்க வேண்டும். செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதால் அவன் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் செல்பவனாய் இருந்தான். அப்போது அவளுக்கு இப்போதிருக்கும் பொருளாதாரச் சுதந்திரம் இருக்கவில்லை. வீட்டுச் செலவிற்கென்று குறிப்பிட்ட தொகையை அவளுக்கு பிரபு கொடுத்து வந்தாலும், அவளுக்கு விருப்பமான சட்டையையோ, செருப்பையோ வாங்க அவள் பல முறை யோசிக்க வேண்டியிருந்தது. அவனிடம் அனுமதி கேட்க வேண்டியிருந்தது.

     இப்போதும் இவள் நினைத்தபடியெல்லாம் சம்பளத்தை செலவு செய்ய முடியாது தான். சென்ற வருடம் தாரிணியின் அப்பாவிற்கு உடம்புக்கு முடியவில்லை. அவளது வீட்டில் பண நெருக்கடி ஏற்பட்டிருந்த நேரம், கொடுத்து உதவலாம் என்று சொன்ன போது, அப்படி கொடுக்கும் பணத்தை திரும்பப் பெறுவது சிரமம் என்று சொல்லிவிட்டான் பிரபு. அந்த மாதம் முஸ்தஃபாவிற்குச் சென்று ஐந்தரை பவுனில் நெக்லஸ் வாங்கிய போது அவளுக்கு ஏற்பட்ட உறுத்தல் இப்போதும் அந்நகையைப் பார்த்தால் எழவே செய்கிறது. அவனது தாய்க்கு செலவு செய்வதில் அவனுக்கு இது போன்ற தடைகள் எதுவும் இருந்ததில்லை! இது நம்மவர்களின் பாரம்பரியம் என்று தோன்றியது தாரிணிக்கு. பிரபுவாவது பரவாயில்லை மாதமொரு முறை பணத்தை தாரிணியின் கையில் கொடுத்து வந்தான். அவளது தாய்க்கு கணவனிடம் ஒவ்வொரு செலவையும் சொல்லி பணம் கேட்டே செலவு செய்ய வேண்டியிருந்தது. அதற்கும் அவளது தாய் சரியான கணக்கைச் சொல்லியாக வேண்டும்!

     ரயில் ஆர்சர்டில் நின்ற போது, அதிலிருந்து இறங்காமல் மற்றவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்குள் கிலேசத்தை ஏற்படுத்தியது. அவளுக்கு பழக்கமான ஒரு ரயில் நிலையத்தை அவள் பின்தள்ளி விட்டுப் போகிறாள். முதன்முறையாக அவளுக்கென்று சமுதாயம் ஏற்படுத்தி வைத்திருந்த விதிகளை மீறுகிறாள். மனம் சட்டென்று குறும்புத் தனம் செய்யப் போகும் ஒரு சிறுமியைப் போல உற்சாகம் கொண்டது. தான் இப்படி வேலைக்கு விடுப்பு எடுத்துவிட்டு ஊர் சுற்றுவது தன் கணவனுக்குத் தெரிந்தால் என்னவாகும்! அவனது அதிர்ச்சியைக் கற்பனை செய்து பார்க்கும் போது சந்தோஷமாய் இருந்தது. அவன் நினைத்தாற் போல தன் நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு வருவதெல்லாம் கணக்கில்லை. ஆனால் பெண்கள் தன் ஓய்வு நேரத்தைக் கூட குடும்பத்திற்காகவே செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் அவன்.
    
     தாரிணி அப்படியெல்லாம் வளர்ந்தவள் இல்லை. அவளது அப்பா, மனைவியின் மீது கட்டுப்பாடுகளைச் சுமத்தினாலும், அவள் மீது அன்பு செலுத்தினார். திருமணம் வரை மகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தரும் தந்தையாகவே இருந்தார். விடுமுறையின் போது தோழிகளோடு வெளியே சென்று வருவதற்கெல்லாம் அனுமதி பெறும் அவசியமே அவளுக்கு இருந்ததில்லை. எங்கே போகிறாள் என்ற தகவலைத் தெரிவிப்பது மட்டுமே போதுமானதாய் இருந்தது. மனைவிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆண்கள் மகளிடம் குழைந்து போய்விடுவதும் வழி வழியாய் வருவது போல என்று நினைத்துப் புன்னகைத்துக் கொண்டாள் தாரிணி. அதே பழக்கத்தில் திருமணமான புதிதில் வேலைக்கு மட்டம் போட்டுவிட்டு தோழியின் பிறந்தநாளைக் கொண்டாட வெளியே சென்று விட்டாள் தாரிணி. மாலை அதைச் சாதாரணமாய் பிரபுவிடம் தெரிவித்த போது திகைத்துப் போய்விட்டான். இரண்டு நாட்களுக்கு அவளுடம் முகம் கொடுத்தே பேசவில்லை. மூன்றாவது நாள் தாயிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்த போது தான் தனது வீட்டிற்கு அழைத்து அதைப் பற்றி பேசியிருக்கிறான் என்று தெரிந்தது அவளுக்கு. அருகிலேயே இருக்கும் அவளோடு பேசியிருந்தால் சுலபமாய் தீர்ந்து போயிருக்கக் கூடிய ஒரு விஷயம், அவனது நடவடிக்கையால், மனதில் ஆழமான கோட்டைக் கிழித்து விட்டது. தான் கற்பனை செய்து வைத்திருந்த வாழ்க்கையிலிருந்து நிஜ வாழ்கை முற்றிலும் வேறுபட்டது என்ற புரிதல் அவளுக்கு ஏற்பட்டது அன்று தான்.

     சிட்டி ஹால் எம்.ஆர்.டி நிலையத்தில் இறங்கி வெளியே வந்தாள் தாரிணி. நன்றாய் உடுத்திக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக விரைந்தபடி இருந்தார்கள். கட்டிடத்திற்கு மேலே தெரிந்த மிகப் பெரிய திரையில் தோன்றிய விளம்பரத்தைச் சற்று நேரம் பார்த்தபடி இருந்தாள். திடீரென்று அவளுக்கு ஒரு பெரிய உணவகத்தில் தனியே அமர்ந்து இதுவரை சாப்பிடாத உணவை உட்கொண்டு தன்னுடைய இந்த  தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று தோன்றியது.
    
     எதிரே தெரிந்த கேப்பிட்டல் ப்ளாஸாவிற்குள் நுழைந்தாள். ஒவ்வொரு கடையையும் மனதிற்குள் ஆராய்ந்து ஒரு ஜப்பானிய உணவகத்தைத் தேர்ந்தெடுத்தாள். மெனுவில் இருந்த அன்னிய உணவு வகைகளை சிரமப்பட்டு எழுத்துக் கூட்டிப் பார்த்து, அன்கோ நாபே என்று அவளால் படிக்கப்பட்ட உணவை கொண்டு வரும் படி  செய்தாள். ஈரல், மீன் மற்றும் காய்கறிகளைக் கொண்டு செய்யப்பட்ட அந்த உணவு நாவிற்குப் பழகப்படாததாய் இருந்தாலும், அப்போதிருந்த மனநிலையில் ருசியாய் இருந்தது. நூற்றி இருபது வெள்ளிகள் கட்டி விட்டு வெளியே வந்த போது மனம் திருப்தியாய் இருந்தது. நிச்சயம் பிரபு உணவிற்கு இவ்வளவு செலவு செய்ய மாட்டான். என்றோவொரு நாள் இது கூட செய்யவில்லை என்றால் எப்படியென்று நினைத்துக் கொண்டாள்.

     இப்போது அவளுக்கு தனியே அமர்ந்து  கடலைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. மறுபடி ரயில் நிலையத்திற்குள் நுழைந்து பாசிர் ரிஸ் நோக்கி பயணத்தைத் தொடர்ந்தாள். இப்படி மனம் போன போக்கில் திரிவதில் கூட  சுகம் இருப்பதை அவளால் உணர முடிந்தது.

     தாரிணி எங்கே செல்வதாக இருந்தாலும் பிரபு அவளுடன் வருவதை விரும்புவான், அது அவளது தாய் வீடாக இருந்தாலும் சரி! இருவரும் சென்றால் கூட, அங்கு செல்ல  தகுந்த காரணம் இருக்க வேண்டும். அவனுக்கு நேரம் ஒழிய வேண்டும். தனியாக தன் தாயுடன் நேரில் சில வார்த்தைகள் பேசலாம் என்றால் கூட தாரிணியால் முடியாது! அவனுடனே சென்று அவனுடனே திரும்பி விட வேண்டும். அதனால் அவள் தன் பயணங்களை வெகுவாக குறைத்துக் கொண்டாள். அவள் தாய் வீட்டிற்குச் சென்றே மாதக் கணக்காகி விட்டது.

     பாசிர் ரிஸில் இறங்கி  பேருந்தைப் பிடித்து கடலை அடைந்த போது மணி ஒன்றை நெருங்கியிருந்தது. கடல் காற்று இதமாய் வீசிக் கொண்டிருந்தது. அந்த நேரத்திலும் கடலை  ரசிக்க வந்திருந்த  சிலரை அவளால் பார்க்க முடிந்தது. அங்கிருந்த மரத்தின் நிழலில் இருந்த இருக்கையில் முகத்தை மூடிக் கொண்டு ஒரு வயதானவர் படுத்திருந்தார். அவருக்கு சற்று தள்ளியிருந்த குப்பைத் தொட்டிக்கு அருகே பாதி உணவை மட்டும் சாப்பிட்டு விட்டு பொட்டலத்தோடு யாரோ எறிந்திருந்தார்கள். அதிலிருந்த சோற்றை புறாக்கள் இறைத்து கொத்திக் கொண்டிருந்தன. பூனையொன்று தன் நிழலுடன் சேர்ந்து, எதைப் பற்றிய கவலையுமின்றி மெல்ல அவளைக் கடந்து சென்றது.
    
     அவள் நிதானமாய் கடலை நோக்கி நடந்தாள். காற்று ஏற்படுத்திய சலனத்தில் கடல் நீர் அசைந்தாடியபடி இருந்தது. அவளுக்கு கடலை மிகவும் பிடிக்கும். தனியே அமர்ந்து கடலை ரசித்து நிறைய நாட்கள் ஆகியிருந்தன. சிறிது நேரம் காற்சட்டை நனைய கடலுக்குள் நின்றாள். தூரத்தில் தெரிந்த கப்பல்களை எண்ணிப் பார்த்தாள். ஆறு கப்பல்கள் மிதந்துக் கொண்டிருந்தன.
கொஞ்சம் நேரம் ஈர மணலில் அமர்ந்தாள். மணல் வீடு கட்டி, சுரங்கப்பாதை அமைத்தாள். அதன் பக்கத்தில் தன் பெயரை விரலால் எழுதினாள். இலக்கியா இதையெல்லாம் ரசிப்பாள் என்று தோன்றியது அவளுக்கு. இன்னொரு நாள் அவளையும் பிரபுவோடு சேர்த்து அழைத்து வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
    
     கிட்டத்தட்ட மூன்று மணியான போது மண்ணை உதறிக் கொண்டு கிளம்பினாள். ஏதாவது ஒரு நூலகத்திற்குச் செல்ல வேண்டும் என்று எண்ணினாள். இப்போது எதிர் எல்லையை நோக்கி பயணிக்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. அதனால் ஜீராங் ஈஸ்ட் நூலகத்திற்கு பயணித்தாள். அவளுக்கு திருமணத்திற்கு முன் ஓரளவு புத்தகங்கள் படிப்பதில் விருப்பம் உண்டு. திருமணத்திற்குப் பின், புத்தகங்கள் புரட்சி எண்ணத்தை புகுத்தி, பெண்களின் மனதைக் கெடுப்பவை என்ற பிரபுவின் நம்பிக்கையை அவளும் பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் பிறகு தான் அவளுக்கு புத்தகங்களின் மீது காதலே பிறந்தது. தன் வாழ்கையை பிரபு நிர்மாணிப்பதாய் தோன்றத் துவங்கிய கணம் வரை நூலகங்களைப் பற்றி அதிகம் கவலைப்பட்டிராத அவள், புத்தகங்களை இரவல் பெற்று அவன் இல்லாத நேரத்திலெல்லாம் படிக்க தலைபட்டாள். நிஜ உலகை விட்டுத் தப்பிச் செல்லும்  புஷ்பக விமானக்களாய் அமைந்தன புத்தகங்கள்.

     தன் மனதிற்குப் பிடித்ததாய் தோன்றிய புத்தகங்களையெல்லாம்  எடுத்து வைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தாள் தாரிணி. அதிலிருந்து ஒரு நாவலை எடுத்து வாசிக்கத் துவங்கினாள். குளிரூட்டப் பட்ட அறையில் ரமணிச்சந்திரனைப் படிப்பது சந்தோஷமாய் இருந்தது. அந்த கதையின் கதாநாயகியாக தன்னை கற்பனை செய்துக் கொண்டாள். அவளைத் தவறாய் நினைத்து நாயகன் துன்புறுத்திய போது அழுதாள். பின்னர் உண்மை தெரிந்து நாயகன் மன்னிப்பு கேட்ட போது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. அப்புத்தகத்தை படித்து முடித்த போது, ஒரு ஜென்மத்து வாழ்கையை வாழ்ந்து முடித்த திருப்தியில் அவள் நெஞ்சு நிறைந்திருந்தது. அந்த நிறைவு முகத்தில், தெரிய தொலைபேசியை உயிரூட்டி ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டாள்.
    

     சரியாய் ஆறு மணிக்கு நூலகத்தை விட்டு வெளியே வந்த போது, இந்த நாளின் இனிய நினைவுகளோடு மற்ற நாட்களைக் கடந்து விட முடியும் என்று நினைத்துக் கொண்டாள் அவள். தன் ரகசிய தினத்தின் நினைவாக, ரயில் நிலையத்திற்கு அருகே டிஷ்யூ விற்றுக் கொண்டிருந்த பாட்டிக்கு ஐம்பது வெள்ளியைப் போட்டாள். பின்னர் ஏரோப்ளேன் மோடிலிருந்து தொலைபேசியை விடுவித்து, அன்று கணவனிடமிருந்தும், தாயிடமிருந்தும், தோழியிடமிருந்தும் வந்திருந்த தகவல்களை ஆராய்ந்த போது அவளுக்கு துக்கமாய் இருந்தது.

(செராங்கூன் டைம்ஸ், ஏப்ரல் 2016)

2 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

ஒருநாளின் இயல்பிலிருந்து மீற, மாற எல்லோருக்குமே ஒரு ரகசிய விருப்பம் இருக்கிறது!

ஹேமா (HVL) சொன்னது…

உண்மை. நன்றி sriram.