ஞாயிறு, 25 மே, 2014

ஒளி தேடும் விட்டில் பூச்சி


 
      ஒன்று அம்மாவைப் போல கோதுமை நிறத்தில் இருந்திருக்கலாம் இல்லையென்றால் நூடுல்ஸ் போல சுருண்டு கிடக்கும் இந்த முடியாவது, நீளமாய், தொடுவதற்கு தேங்காய் நார் போல இல்லாமல், மெத்தென்று இருந்திருக்கலாம். இதையெல்லாம் தான் மாற்ற முடியாது. சரி! உடம்பையாவது குறைக்கலாமென்றால் அதுவும் முடியவில்லை. பட்டினி கிடந்தாலும் குறைவேனா என்கிறது அது. கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்க்கவே சங்கடமாயிருந்தது ஈஸ்வரிக்கு.

     முக ஜாடையில் தான் நடிகை அருந்ததியை ஒத்திருப்பதாய் இரண்டு வருடங்களுக்கு முன் ஊரிலிருந்து வந்த அத்தை சொல்லியிருந்தார். அப்போதிலிருந்து,  அந்த நடிகையைப் பற்றி கேலியான சித்திரமே மக்கள் மத்தியில் இருந்தாலும், அவர் அழகாய் இருப்பதாய் ஈஸ்வரிக்கு தோன்றியது. அது வரை அந்த நடிகையின் மீது இல்லாத அக்கறையை அதன் பிறகு காட்டத் தொடங்கினாள் அவள். அந்த நடிகையைப் போலவே சிரித்து, அவரைப் போலவே கண்கள் மலர பார்த்து, அவரைப் போலவே தன் நடையுடை பாவனைகளை மாற்றிக் கொள்ளத் துவங்கியிருந்தாள். இவை சற்றே மிகையாகிவிட தோழிகளின் கேலிக்கும் ஆளானாள். அதைப் பற்றியெல்லாம் அவள் பெரிதாய் கவலைப்படவில்லை. தன்னை உள்ளுக்குள் அந்த நடிகையாகவே பாவிக்கத் தொடங்கியிருந்தாள்.

     கண்ணாடியின் முன்பு நிற்கும் போதெல்லாம் அந்த நடிகையோடு தன்னை ஒப்பிட்டு நோக்கத் தொடங்கினாள் ஈஸ்வரி. அப்படி பார்க்கும் போதெல்லாம் அவரைப் போல மெலிதான உடலும், வெண்மையான தோலும் தனக்கு இல்லை என்ற உண்மை இவளது ஆற்றாமையை அதிகரித்தது. அந்த நடிகை குண்டாகிவிட்டாலாவது பரவாயில்லை என்று இப்போதெல்லாம் தோன்றத் தொடங்கிவிட்டது அவளுக்கு.

     மூச்சை பிடித்து வயிற்றை உள்ளிழுத்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாள். இப்போது சற்று பரவாயில்லை என்று தோன்ற தன் பள்ளிப்பையை எடுத்துக் கொண்டு,

அம்மா நான் வரேன் என்றபடி கிளம்பினாள்.

பத்திரம்டி!” என்றாள் அம்மா வேலைக்கு கிளம்பியபடியே.

     கற்பனையில் தனக்குத் தானே மனதிற்குள் பேசியபடி  வகுப்பினுள் நுழைந்தாள் ஈஸ்வரி. அதுவரை உரக்க பேசியபடி இருந்த  மாணவிகள் சட்டென்று அமைதியடைந்ததாய் தோன்றியது அவளுக்கு. அனைவரும் தன்னைத் தான் பார்க்கிறார்களோ! சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்படி யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவரவர் தன் தோழியரோடு பேசிக் கொண்டிருந்தார்கள். தனியே அமர்ந்திருந்த மாணவிகள் கையிலிருந்த புத்தகத்தில் ஒன்றியிருந்தார்கள்.

     ச்சே!’ என்று உதட்டை இறுக்கிக் கொண்டாள். திரும்பிப் பார்க்கக் கூட முடியாத அளவிற்கு தான் கோரமாய் இருக்கிறோமோ!’ இந்த எண்ணம் ஈஸ்வரிக்குள் சுய பச்சாதாபத்தைத் தோற்றுவித்தது. மனதை, கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தில் செலுத்த முயன்றாள்.

 

     இரண்டு வருடங்களுக்கு முன்வரை இது போன்ற எண்ணங்கள் ஈஸ்வரியினுள் எழுந்ததில்லை. தொடக்கநிலை ஆறு வரை வகுப்பில் முதல் ஐந்து மதிப்பெண்களுக்குள் வந்துவிடுவாள் அவள். அதனால் அனைவருக்கும் அவள் மீது மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஆசிரியர்கள் சட்டென்று அழைக்கும் பெயரும் அவளுடையதாகவே இருக்கும். இதன் காரணமாக அனைவரும் தோழமையோடே பழகினர். மற்றவர்களுக்குத் புரியாத பாடத்தைச் சொல்லிக் கொடுத்ததில் சில மாணவர்களின் பெற்றோர்களும் கூட இவளை அறிந்திருந்தனர்.

     பள்ளியிறுதிப் பரீட்சையில் ஈஸ்வரி அதிக மதிப்பெண்கள் பெற்றதிலும், அவளுக்கு நல்ல பெண்கள் பள்ளியில் இடம் கிடைத்ததிலும் இவளுடைய பெற்றோர்களுக்கு மிகப் பெருமை. இந்தப் பரிட்சைக்காகவே சென்ற வருடம் வேலைக்குப் போவதை நிறுத்தியிருந்த அவளுடைய தாயார், அதன் பிறகு மறுபடி வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.

     புதுப் பள்ளிக்கு வந்ததிலிருந்து தான் ஈஸ்வரிக்கு தன்னைப் பற்றி தாழ்வான அபிப்ராயம் ஏற்படத் தொடங்கியிருந்தது. இங்கே அவளால் சராசரி மதிப்பெண்களே எடுக்க முடிந்தது. பத்தோடு பதினொன்றாக ஆனபின் தான் தன் அழகைப் பற்றிய பிரக்ஞை அவளுள் ஏற்படத் தொடங்கியது. சாதாரண மதிப்பெண்கள் எடுக்கும் மாணவிகள் கூட சந்தோஷமாய் இருப்பதற்குக் காரணம் அவர்கள் அழகாய் இருப்பது தான் என்று நினைத்தாள். கண்ணாடியின் முன்பு நிறைய நேரம் செலவு செய்யத் தொடங்கினாள்.

 

     தனக்கு ஆண் நண்பர்கள் இருப்பதாய் மற்றவர்களிடம் ஈஸ்வரி சொல்லத் தொடங்கியது அப்போதிலிருந்து தான். அப்படி சொல்வதன் மூலம் மற்றவர்களின் கவனத்தை சுலபமாய் ஈர்க்க முடிந்தது. தோழனோடு எங்கெங்கெல்லாம் சென்று வந்தாள் என்பதைக் கற்பனையில் விவரிக்க, அதைக் கேட்பதில் மற்ற பெண்கள் ஆர்வம் காட்டினார்கள். அவளைச் சுற்றியும் ஒரு நட்பு வட்டம் உருவானது.

************

      இன்னிக்கி சாயங்காலமா! என்னால கண்டிப்பா முடியாதுல்லா... என்னோட ஃப்ரெண்ட் என்னை கொஸ்வே பொயிண்ட்ல்ல பார்க்கறதா சொல்லியிருக்கான். நாங்க ரெண்டு பேரும் இன்னிக்கு படத்துக்குப் போறோம். போன வாரத்திலிருந்தே போகணும்னு  நெனச்சிகிட்டு இருக்கோம்.  இன்னிக்கு கண்டிப்பா முடியாது! சாரில்லா!” என்ற ஈஸ்வரியின் கண்கள் மேற்கூரையைப் பார்த்தபடி கனவில் மிதந்து கொண்டிருந்தன.

ஹேய்! இதப் பாரேன்! இவன் யாரு? புதுசா?” என்றாள் மீனா.

ஏற்கனவே இவனைப் பற்றி தான் சொல்லியிருக்கேனே! தினகரன்... ஞாபகம் இல்லையா?”

...!”   என்றவாறு செல்வியைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள் மீனா. ஆண் நண்பர்கள் என்று ஈஸ்வரி அவ்வப்போது சொல்லும் ஆட்களின்  எண்ணிக்கை அந்தப் பெண்களின் இதழ்களை கீழ் நோக்கி வளைய வைத்தது.

ஏய்! இவ சொல்றது ஒருவேள உண்மையா இருக்குமோ!”

நீ வேற போன மாசம் குணாவைப் பத்தி சொன்னா! இன்னிக்கு தினகரன் நாளைக்கு இந்த பேரு கூட அவளுக்கு நெனப்பு இருக்காது!

ச்சே! ச்சே! இப்படியெல்லாம் ஒருத்தர கிண்டல் செய்யறது தப்பு!” என்றாள் கவிதா.

உருவத்தப் பார்த்து யாருல்லா கேலி செஞ்சா! இவளவிட கறுப்பானவங்க இல்லையா, இல்லை குண்டானவங்க தான் இல்லையா! சும்மா இருந்தா ஏன் பேசப்போறோம்? அவ சொல்ற கதை தான் நம்ம சிரிக்க வெக்குது!

ஒருவேளை அவ சொல்றது உண்மையா இருந்தா! பாவம் அவ...”

ஹேய்! இவளுக்கு எல்லாத்தையும் நிரூபிச்சுக் காட்டணும். சரி அவ தான் போயிட்டாளே, நாம மெக் டொனால்ட்ஸீக்குப் போவோம் வா.”

     சிக்கன் பர்கரைக் கொரித்துக் கொண்டிருந்த போது சட்டென்று மீனாவிற்கு பொறி தட்டியது. தன் மடிக்கணினியைப் பிரித்தவள் முகநூல் (பேஸ் புக்) வலைப்பக்கத்திற்கு சென்றாள்.

பாருல்லா அவளோட குட்டை ஒரு மாசத்துல உடைக்கிறேன்.” என்ற படி கவின் என்ற பெயரில் புதிதாய் ஒரு பக்கத்தைப் பதிவு செய்து கொண்டு,ஹாய்! உன் நீ உன் சுவற்றில் எழுதியிருக்கும் வாசகங்கள் என்னை கவர்கின்றன. மறுக்காமல் என்னை தோழனாக ஏற்றுக்கொள் என்று தகவல் அனுப்பினாள்.

****************

     ஈஸ்வரிக்கு கற்பனை நண்பர்களை விட கவின் மீது இப்போது அதிக ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. இவ்வளவு நாட்களாக அவள் மனதிலிருந்த சொற்களைக் கொட்டுவதற்கு ஒரு காது மட்டுமே அவளுக்கு தேவையாயிருந்தது. வேலையிலிருந்து இரவு ஏழு மணிக்கு மேல் திரும்பும் அம்மாவாலும், பத்து மணிக்கு வரும் அப்பாவாலும் அதைக் கொடுக்க முடியவில்லை. அதனால் ஆண் நண்பர்களைப் பற்றி மனதில் தோன்றிய கதைகளைச் சொல்லி பிறரின் கவனத்தைக் கவர்ந்து வந்தாள்.  இப்போது முகநூல் அவளுக்கு அடைக்கலம் கொடுத்தது. கவின் அவளுடைய பக்கத்தில் எழுதும் பரிவு மிகுந்த வார்த்தைகள், அவளை மற்ற நிகழ்வுகளிலிருந்து முகநூலை நோக்கி இழுத்தது. அவள் தன் மகிழ்ச்சியையும் வருத்தங்களையும் கவினுடன் பகிர்ந்துக் கொள்ள துவங்கினாள். தோழிகளின் கற்பனைக்கேற்ப கவினும், ஈஸ்வரியின் சுவரில் எழுதப்பட்ட தகவல்களும் மெருகேறியபடியிருந்தன.

     தோழிகளிடம் கவினைப் பற்றி சொல்லாமல் இருக்கமுடியவில்லை ஈஸ்வரியால். அவன் தன் மீது எடுத்துக் கொண்டுள்ள அக்கறையைப் பெருமையாய் பறைசாற்றிய படியிருந்தாள். இவளது தலையைக் கண்டதுமே அவர்கள் சிரிப்பை அடக்கிக் கொள்வது அவள் கண்களுக்குப் படவில்லை. தன்னை ஒருவன் மதித்துப் பேசுவதே அவள் சிந்தையை நிறைத்திருந்தது. இதன் காரணமாக பாடங்களிலிருந்து ஈஸ்வரியின் கவனம் விலகியது. அன்று அவளைத் தமிழாசிரியை தனியே வந்து பார்க்கச் சொல்லியிருந்தார். பயத்துடனே சென்ற ஈஸ்வரியை

ஈஸ்வரி உனக்கு என்ன ஆச்சு. வீட்டுப் பாடம் செய்யறதே இல்லை! நேத்து வெச்ச தேர்வுல ரொம்ப மோசமா செஞ்சிருக்கே? வீட்டில ஏதாவது பிரச்சனையா?” என்றார்.

ஈஸ்வரியால் பதில் பேச முடியவில்லை. பேசாமல் தலை கவிழ்ந்தபடி நின்றாள்.

நல்லா படிக்கிற பிள்ளை நீ! இப்படி குறைவான மதிப்பெண் எடுக்கறது வருத்தமா இருக்கு. நான் வேணும்னா உங்க அம்மாகிட்ட பேசட்டுமா?” என்றார்.

வேணாம் ஆசிரியை, கொஞ்சம் நாளா உடம்பு சரியில்லை. இனி மேல் இப்படி செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க ஆசிரியை!” என்றாள் ஈஸ்வரி அவசரமாக.

     படிப்பிலிருந்து கவனம் சிதறுவது அவளுக்குள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது. இனி கவினுடனான இந்த நட்பு தன் படிப்பை கெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள்.

     ஒரு மாதமாய் தொடர்ந்த நட்பின் முடிவில் அன்று கவின் அவளைப் பார்க்க ஜீராங் ஈஸ்ட் பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு வருமாறு அழைத்திருந்தான்.  ஈஸ்வரிக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

******************

     பெருவிரைவு ரயில் நிலையத்தில் கிட்டத்தட்ட இரண்டுமணிநேரம் காத்திருந்துவிட்டு  ஏமாற்றத்தோடு வீடு திரும்பிய ஈஸ்வரிக்கு கணினியைத் திறந்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. அவளது பக்கம்  அவதூறு செய்திகளால் நிரம்பியிருந்தது.  பலர் அவளுக்கு ஏற்பட்டிருந்த ஏமாற்றத்தை கிண்டல் செய்து, மிகக் கடுமையான சொற்களால் அவளைச் சாடியிருந்தார்கள். அவள் தங்கள் வலையில் சிக்கி ஏமாந்த செய்தியை விலாவரியாக பதிவேற்றியிருந்தார்கள்.

     ஈஸ்வரியால் இதைத் தாங்க முடியவில்லை. இரவெல்லாம் அழுதபடியிருந்த அவளால் அம்மாவின் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. என்னவென்று சொல்வது! இப்படி ஒரு ஈனச் செயலில் சிக்கிக் கொண்டதைச் சொல்வதற்கு பதில் தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. பள்ளிக்கூடத்தில் மற்றவர்களின் முகத்தில் விழிப்பதற்குக் கூட பயமாக இருந்தது அவளுக்கு.

     மறுநாள் வகுப்பில் நுழையும் போது அனைவரும் அவளையே பார்ப்பதை உணர்ந்தாள். அனைவருக்கும் செய்தி தெரிந்திருக்க வேண்டும் வகுப்பு தொடங்குவதற்கு முன்னால் தமிழாசிரியரிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது. அவருக்கும் தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்தாள். தன் மேல் அக்கறைக் கொண்டு ஒரு வாரத்திற்கு முன் அவர் சொன்ன வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.

     தடைகள் உடைந்து அவர் முன் ஓவென்று கதற, ஆசிரியர் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டார். நடந்தது அனைத்தையும் பொறுமையாய் கேட்ட அவருக்கு, ஈஸ்வரிக்கு ஏற்பட்டிருந்த தாழ்வுணர்ச்சியே அனைத்திற்கும் காரணம் என்று புரிந்தது.

செத்திடலாம் போல இருக்கு ஆசிரியை!” என்று அழுத ஈஸ்வரியை

ச்சீ! என்ன வார்த்தை சொல்ற? உனக்காக உங்கம்மா அப்பா எவ்வளவு சிரமப்படறாங்க! யோசிச்சு பாரு! ரெண்டு பேரும் வேலைக்கு போறது உன்னோட தேவைகளை நிறைவு செய்யறதுக்காக! அவங்கள பெருமைப்பட வெக்கறத விட்டுட்டு சாவறேன்னுகிட்டு!”

நீ அழகா இல்லைன்னு யார் சொன்னாங்க! சரி அப்படியே அழகா இல்லைன்னா தான் என்ன? வாழ்கையில சாதிச்ச எவ்வளவு பேர் அழகா இருந்திருக்காங்க?”

எவ்வளவு நல்லா படிக்கிற பிள்ளை நீ! உன்னோட முழு கவனத்தை உனக்கு பலமாய் இருக்கிற படிப்பில காட்டு. படிச்சா உன் தோழிகள் மட்டுமில்லை  உலகமே உன் பின்னால வரப்போகுது. இன்றையிலிருந்து புது ஈஸ்வரியா நீ மாறணும். உனக்கு என்ன உதவி வேணுமோ நான் செய்யறேன். இப்போ தலைமையாசிரியர் உன் கூட பேசுவார். தைரியமா பேசுஎன்றார்.

     ஈஸ்வரிக்கு தன் பலம் எதுவென்று புரிவது போல இருந்தது. இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு படித்தால் அனைவரையும் மிஞ்சிவிட முடியும் என்ற தன்னம்பிக்கை அவளுக்குள் ஏற்பட்டது. இனி தன் பெற்றோர்களையும் இந்த ஆசிரியரையும் பெருமைப்பட வைப்பதே தன் முக்கிய நோக்கம் என்று உறுதியுடன் நினைத்துக் கொண்டே தலைமை ஆசிரியரின் அறையை நோக்கி நடந்தாள்.

(முத்தமிழ் விழா 2014ல் இரண்டாம் பரிசு, 

தமிழ் முரசு (11/05/2014))

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட போங்க அம்மா... நீங்களும் மூட நம்பிக்கையில் மூழ்கி விட்டீர்கள் (doubt)...!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முத்தமிழ் விழா வில் பரிசு பெற்றமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

தாயை தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை

இல்லை...

முகத்தை தேர்ந்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை

இல்லை...

பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை... இல்லை...

எண்ணி பார்க்கும் வேளையிலே.....
உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில் உண்டு - அதை வென்று எடு....!