செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

ஒரு வழக்கமான திங்கள்


 
    பவிக்கு ஏழு வயசு. அவளுக்கு பட்டாம் பூச்சிகள் என்றால் ஆசை. ஒரு பாடல் காட்சியில் தொலைக்காட்சிக்குள் பறந்த வண்ண வண்ண பட்டாம் பூச்சிகள் அவளுக்குள் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன. கறுப்பில் மஞ்சள் பொட்டுக்கள் வைத்த பட்டாம் பூச்சி, சிவப்பில் கறுப்பு கோடுகள் போட்ட பட்டாம் பூச்சி என அவளைக் கவர்ந்தவற்றை மனதிற்குள் பட்டியலிட்டு வைத்திருந்தாள்.

    அதே போல மழைக் காலத்தில் தரையில் ஊர்ந்து போகும் நத்தைகளின் மீதும் அவளுக்கு அலாதி பிரியம். தான் புத்தக மூட்டையைச் சுமப்பது போல தன் ஓட்டை முதுகில் சுமந்துச் செல்லும் நத்தைகள் அவளுக்குள் பிரமிப்பை ஏற்படுத்தியபடியே இருந்தன. நேர் கோட்டில் மெதுவாய் நகரும் அவற்றுடன் பேச முயற்சித்திருக்கிறாள். ஒருமுறை வரிவரியாய் கோலமிடப்பட்டிருந்த அவற்றின் ஓட்டைப் பார்த்தபடி,

உன் வீடு எங்க இருக்கு?’

நீ என்ன சாப்பிடுவ?’

நீ பள்ளிக்கு போவியா’,

உன் ஆசிரியர் உன்னை திட்டுவாங்களா?’

என்று அவள் கேட்ட கேள்விகளை அவை தம் மௌனத்தால் கடந்து சென்றுவிட்டன. அவை தரையில் இழுத்துச் செல்லும் ஈரக்கோட்டை வெறித்தபடி நின்றிருந்தாள். கேள்விக்கான விடைகளை அவை தன் ஓட்டிற்குள் மறைத்து வைத்திருப்பதாய் நினைத்தாள் அவள். பதிலைத் தேடி, மனிதர்களின் காலடி பட்டு நசுங்கிக் கிடக்கும் நத்தை ஓடுகளை கூர்ந்து கவனித்திருக்கிறாள். அவள் தேடிய விடைகள் காற்றில் கரைந்து போய் உள்ளே வெறுமையாய் இருந்தது. என்றேனும் ஒரு நாள் நத்தைகளை நாய்களைப் போல பழக்கி தன்னுடன் வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லிக் கொள்வாள்.

நத்தையைப் போல அவளைக் கவர்ந்த மற்றொன்று தொலைக்காட்சி. அவளுக்கு நினைவு தெரிந்த நாளாய் வீட்டில் இருக்கும் ஒரு பொருள் அது. அதனுள் இருக்கும் மனிதர்கள் அவளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துபவர்களாய் இருந்தனர். ஒரு முறை வசந்தம் தொலைக்காட்சியில் பிரசவக் காட்சி ஒன்றை ஆர்வத்தோடு பார்த்தபடி இருந்தாள். திடீரென்று காட்சி மாறிப்போனது. ஆவல் உந்தித் தள்ள, அம்மாவிடம்சீக்கிரம் ரிமோட்டை எடுத்து மாத்தும்மா! அறைக்கு உள்ளே போ! நான் பாப்பாவை பார்க்கணும்!” என்றாள். அம்மா  சிரித்தபடி அதெல்லாம் முடியாது என்று விளக்கியதை பவியால் கடைசி வரை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை.

இந்த கொண்டாட்டமெல்லாம் சனி ஞாயிறுகளில் மட்டுமே!

அவள் மிகவும் வெறுப்பது திங்கட்கிழமை காலைகளை. . . 

அன்று திங்கட்கிழமை. அவளுக்கு கண்ணைத் திறக்கவே சிரமமாய் இருந்தது. எழுந்து பள்ளிக்கு கிளம்புமாறு அம்மா குரல் கொடுத்துவிட்டு போனாள். சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. குக்கர் சத்தமாய் விசில் கொடுத்து அடங்கியது. கொஞ்சமாய் கண்ணைத் திறந்து பார்த்தாள் பவி. அறைக்குள் இருந்த லேசான இருளில் பொருட்கள் கோட்டு வடிவமாக தெரிந்தன. இன்னும் ராத்திரி முடியவில்லையோ என்று தோன்றியது அவளுக்கு.

கடிகாரத்தை உற்று பார்த்தாள். ஒரு முள் ஆறிலும் இன்னொரு முள் இரண்டின் பக்கத்திலும் இருந்தது. இப்போது மணி ஆறா? இரண்டா? இருட்டைப் பார்த்தால் இரண்டாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அம்மாவின் அழுத்தமான காலடி ஓசை அறையை நோக்கி விரைந்து வந்தது. சட்டென்று போர்வையை முகம் வரை இழுத்துப் போர்த்தி  கண்களை மூடிக் கொண்டாள் பவி. குக்கர் இன்னொரு முறை விசிலடித்து விட்டு ஓய்ந்தது.

பவி! எழுந்திரு. ஸ்கூலுக்கு நேரமாயிடுச்சி!”

கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் அவள்.

இப்ப எழுந்துக்கறியா இல்லையா?”

“ ......... ”

சரி இன்னும் பத்து எண்ணுவேன். அதுக்குள்ள எழுந்திருக்கலைன்னா உங்க டீச்சருக்கு போன் அடிச்சிடுவேன்.”

போகும் போது மின்விசிறியை நிறுத்திவிட்டு, மின்விளக்கை போட்டுவிட்டு போனாள் அம்மா.

இனி  படுத்திருக்க முடியாது. ச்சே, இந்த திங்கட்கிழமை ஏன் தான் வருகிறதோ என்று இருந்தது பவிக்கு. அவளுக்கு மிகவும் பிடித்தது ஞாயிற்றுகிழமை. காலை நேரம் கழித்து எழுந்திரிக்கலாம், டி.வி பார்க்கலாம், கோழி சாப்பிடலாம். ஆனால் ஞாயிறு சாயந்திரங்களை அவளுக்கு பிடிப்பது இல்லை. வீட்டுப் பாடங்கள் எழுதி முடிப்பதற்குள் போது போதும் என்று ஆகிவிடும். அதிலும் அம்மா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டால் அவ்வளவு தான்.

கையெழுத்து ஏன் இப்படி போகுது?’

என்று  அழித்து மறுபடி எழுத வைப்பாள். இல்லையென்றால், இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா என்று எதையாவது கேட்பாள். பவிக்கு சில ஆங்கில வார்த்தைகளுக்கான  அர்த்தத்தை ஒரு முறை சொல்லிக் கொடுத்தால் நினைவில் நிற்பதே இல்லை. வார்த்தைகளை ஏன் இவ்வளவு சிரமப்பட்டு அமைத்திருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்திருக்கிறாள். முதலில் இவ்வளவு வார்த்தைகள் எதற்கு என்றே அவளுக்கு புரியவில்லை. வார்த்தைகளை இன்னும் எளிதாக வடிவமைத்திருக்கலாம் என்று அவளுக்கு தோன்றியது. மோட்டார் காடி என்று சிரமப்பட்டு சொல்வதற்கு பதில்டுர்ர்ர்என்று வைத்திருக்கலாம். விலங்குகளுக்கும் அவற்றின் சத்தத்தை  ஒட்டியே பெயரை வைத்திருக்கலாம். அதாவதுபூனைக்கு பதில்மியாவ்’, நாய்க்கு பதில்லொள் லொள்’. இப்படி நிறைய யோசித்து வைத்திருக்கிறாள் அவள்.

இந்த விஷயத்தில் அவளுக்கு கணினியின் மீது சற்று பொறாமை உண்டு. எவ்வளவு விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்கிறது, அது! எலியைப் பற்றிக் கேட்டாலும் சொல்கிறது, சாங்கியிலிருக்கும் ஏரோப்ளேனைப் பற்றி கேட்டாலும் சொல்கிறது! உலகிலேயே சிறந்த அறிவாளி யாரென்று கேட்டால், கம்ப்யூட்டரே என்று கண்ணை மூடிக் கொண்டு தைரியமாய் சொல்வாள் பவி. ஆனால் வழக்கம் போல அப்பா இதை ஒத்துக் கொள்வதில்லை. அதற்கு செயற்கை மூளை என்று சொல்வது அவளுக்கு புரியவில்லை! எந்த மூளையாய் இருந்தால் தான் என்ன? ஞாபகம் வைத்துக் கொள்வது பெரிய விஷயம் இல்லையா?  நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தால் அம்மாவிடம் திட்டு வாங்க வேண்டியது இல்லையே!

அவளுக்கு மிகவும் பிடித்த நாள் வெள்ளிக்கிழமை. ஒவ்வொரு வெள்ளிக் கிழமை மதியமும் மொட்டு விடும் மகிழ்ச்சி மாலையில் மலர்ந்து, சனி தொடர்ந்து, ஞாயிறு மதியம் வரை நீடித்து பின் திங்கட் கிழமைக்கான ஆயத்தங்களில் தொலைந்து போகும்.

இன்னும் எவ்வளவு நேரம் அப்படியே நிக்கப்போற? சீக்கிரமா வந்து பல்லை தேய்க்கறியா இல்லையா?”

கதவைத் திறந்தவுடன் குப்பென்று வெந்த பருப்பின் வாடை முகத்தில் மோதியது.

மணிடூ ஓ க்ளாக்தானேம்மா ஆகுது! ஏம்மா இவ்வளவு சீக்கிரம் எழுப்பற!”

உனக்கு இன்னும் ட்டூவிலேயே உட்கார்ந்திருக்கு. மணி சிக்ஸ் தர்ட்டி ஆகப்போகுது! சீக்கிரம் போய் வேலையைப் பாரு.”

பவி பல்லைத் தேய்த்து குளித்து முடிப்பதற்குள் நிறைய முறை ஏச்சு வாங்க வேண்டி இருந்தது.

எருமை மாடு மாதிரி அப்படியே நிக்காதே சீக்கிரம் தேயி. வயசு  எட்டு ஆகுது! இன்னும் ஒழுங்கா பல்லைத் தேய்க்க தெரியல!”

எருமை மாடு என்ற வார்த்தை மட்டும் ஏனோ பவிக்கு அப்படியொரு கோபத்தை  ஏற்படுத்தியது.

அம்மா! என்னை எருமை மாடுன்னு சொல்லாத!”

பின்ன! சீக்கிரம் வேலைய முடிகாம அங்க என்ன வேடிக்கை!”

சோப்பை வச்சிகிட்டு விளையாடாதே! நேரமாகுது!”

குளித்து, சீருடையெல்லாம் போட்டுக் கொண்ட பின் தான் ஆசிரியர் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லி, வெள்ளியன்று கொடுத்த தாளின் நினைவு வந்தது. அந்த தாள் எங்கே? பையில் வேகமாய் தேடினாள். இல்லை! அவளுக்கு பக்கென்றானது. அவள் புத்தகங்கள் வைக்கும் அடுக்கில் தேடினாள். அங்கும் இல்லை.  மறுபடி பையைக் குடைந்தாள்.

இன்னும் என்ன பவி பண்ணற! சீக்கிரம் வந்து இந்த பாலைக் குடி!” 

அம்மா! அன்னிக்கு உங்கிட்ட ஒரு பேப்பர் காட்டினேனே! அதைப் பார்த்தியா?”

இல்லையே! ஒழுங்கா ஒரு இடத்தில வச்சா தானே இருக்கும்! உனக்கு எதை வச்சி விளையாடுறதுன்னே இல்லை! காலையில தான் உனக்கு அந்த நினைப்பெல்லாம் வரும். நாளைக்கு கொடுத்துக்கலாம் கிளம்பு!”

இல்லம்மா! ஆசிரியர் திட்டுவார்! நான் ஸ்கூலுக்கு போகலை!” என்று அழ ஆரம்பித்தாள். இன்று கண்டிப்பாய் பள்ளிக்கு செல்லக் கூடாது  என்று முடிவு செய்துக் கொண்டு அடம் பிடிக்கத் தொடங்கிய நேரம், அந்தத் தாள் புத்தகங்களைக் கலைத்துப் போட்டு தேடிய அம்மாவின் கையில் கிடைத்தது.

அம்மாவைப் பார்க்க ஆத்திரமாய் வந்தது பவிக்கு.

அம்மாவுக்கு படிக்க பாடங்கள் இல்லை! எழுத வீட்டுப்பாடம் இல்லை! பள்ளிக் கூடம் போக வேண்டியதில்லை! ச்சே எல்லாம் எனக்கு தான்.’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டாள்.

தான் சீக்கிரம் பெரியவளாகிவிட வேண்டும் என்றும் அப்போது பள்ளிக்கூடம் பக்கமே செல்லக்கூடாது என்றும் நினைத்துக் கொண்டாள்.

 

நான் எப்பம்மா பெரிசாவேன்!”

நல்லா படி! நல்லா சாப்பிடு! சீக்கிரம் பெரிசாயிடுவ!”

ஏம்மா படிக்கணும்?”

அப்ப தான் நல்ல வேலைக்கு போக முடியும்!”

ஏம்மா வேலைக்கு போகணும்?”

அப்ப தான் நல்லா சம்பாதிக்கலாம்!”

ஏம்மா சம்பாதிக்கணும்!”

நீ நினைக்கறதையெல்லாம் வாங்கணும்ன்னா, நிறைய பணம் வேணும்! நல்லா சம்பாதிச்சா தானே பணம் கிடைக்கும்!”

பணம் வேணும்ன்னா ஏ.டி.எம் ல எடுத்துக்கலாமே! அதுக்கு ஏம்மா கஷ்டப்பட்டு படிக்கணும்?”

அம்மாவின் பொறுமை கழன்றுக் கொண்டது.

இப்போ உன்கூட பேசிகிட்டு இருக்க நேரமில்லை! முதல்ல சாக்ஸைப் போடு!”

அம்மா! சனிக்கிழமை எப்போம்மா வரும்

ம்ம்ம் . . . வரும் வெள்ளிக் கிழமைக்கு அப்புறம்! முதல்ல கிளம்பு

ச்சே! இந்த அம்மா இப்படி தான்!’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே காலணியை அணியத் தொடங்கினாள்.

தொலைக்காட்சிக்கு இருப்பதைப் போல தினசரி வாழ்க்கைக்கும் ஒரு ரிமோட் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். திங்கட்கிழமைகளை, பரீட்சைகளை எல்லாம் ஓட்டிவிடலாம். விடுமுறை நாட்களையெல்லாம்ப்பாஸ்செய்து நிறுத்தி விடலாம்.

என்ன கனவு கண்டுகிட்டே நிக்கற!’ என்றபடி

உடுப்பை மாற்றிக் கொண்ட அம்மா, திவ்யாவின் பையை எடுத்துக் கொண்டாள். அவளது கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, இந்த வாரம் சீக்கிரம் சனிக்கிழமை வரவேண்டும் என்று மனதிற்குள் வேண்டியபடி நடக்கத் தொடங்கினாள் பவி. இப்படியாக அந்த வாரயிறுதியை நோக்கி பவித்ராவின் நாட்பயணம் தொடங்கியது.

 

 

7 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

குழந்தையின் உலகம்
அலாதியானது ..!

ஜீவன் சுப்பு சொன்னது…

Excellent narration ...!

ஜீவன் சுப்பு சொன்னது…

//முதலில் இவ்வளவு வார்த்தைகள் எதற்கு என்றே அவளுக்கு புரியவில்லை. வார்த்தைகளை இன்னும் எளிதாக வடிவமைத்திருக்கலாம் என்று அவளுக்கு தோன்றியது. மோட்டார் காடி என்று சிரமப்பட்டு சொல்வதற்கு பதில் ‘டுர்ர்ர்’ என்று வைத்திருக்கலாம். விலங்குகளுக்கும் அவற்றின் சத்தத்தை ஒட்டியே பெயரை வைத்திருக்கலாம். அதாவது ‘பூனை’க்கு பதில் ‘மியாவ்’, நாய்க்கு பதில் ‘லொள் லொள்’. இப்படி நிறைய யோசித்து வைத்திருக்கிறாள் அவள்.//

Haa haa ...! Superb....!

ஹேமா (HVL) சொன்னது…

மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி, ஜீவன்சுப்பு

ஜீவி சொன்னது…

குழந்தை பவியோடையே பயணித்த மனப்பயணம் வெகு அழகு. குழந்தை பார்வையில் குழந்தைகளின் பிரச்னைகளைப் பார்ப்பது தனிக்கலை. சிறப்பாக கதையை நடத்திச் சென்றிருக்கிறீர்கள்.

//ஞாயிற்றுகிழமை. காலை நேரம் கழித்து எழுந்திரிக்கலாம், டி.வி பார்க்கலாம், கோழி சாப்பிடலாம்.//

நத்தையின் மேல் கொண்ட பரிவும் ப்ரியமும் கோழிக்கும் extend ஆகக் கூடாதா என்கிற நினைப்பு மேலோங்கியது.

கோமதி அரசு சொன்னது…

//வார்த்தைகளை ஏன் இவ்வளவு சிரமப்பட்டு அமைத்திருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்திருக்கிறாள். முதலில் இவ்வளவு வார்த்தைகள் எதற்கு என்றே அவளுக்கு புரியவில்லை. வார்த்தைகளை இன்னும் எளிதாக வடிவமைத்திருக்கலாம் என்று அவளுக்கு தோன்றியது. மோட்டார் காடி என்று சிரமப்பட்டு சொல்வதற்கு பதில் ‘டுர்ர்ர்’ என்று வைத்திருக்கலாம். விலங்குகளுக்கும் அவற்றின் சத்தத்தை ஒட்டியே பெயரை வைத்திருக்கலாம். அதாவது ‘பூனை’க்கு பதில் ‘மியாவ்’, நாய்க்கு பதில் ‘லொள் லொள்’. இப்படி நிறைய யோசித்து வைத்திருக்கிறாள் அவள்.//
அதுதானே நான் சிறு வயதில் நினைத்த மாதிரி குழந்தை நினைத்து இருக்கிறாள்.
குழந்தைகள் உலகம் எப்போதும் மிக சிறப்பானது என்று நினைக்கிறோம்,ஆனால் குழந்தைக்கும் எவ்வளவு தடை, அதை செய்யாதே! இதை செய்யாதே விளையடியது போதும் படி என்று.
குழந்தையாக இருக்கும் போது பெரியவள் ஆகனும், பெரியவள் ஆனால் சிறியவளாகவே இருந்து இருக்கலாம். என்று நினைக்க தோன்றுகிறது.
எல்லோருக்கும் திங்கள் ஏன் வருகிறது என்று தான் இருக்கிறது.
அருமையான பதிவு. ஜீவன் சுப்புக்கு நன்றி.

ஹேமா (HVL) சொன்னது…

மிக்க நன்றி ஜீவி, கோமதி அரசு.