ராமசுப்பு தாத்தா படியிறங்கிக் கொண்டிருந்தார். கைப்பிடியைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டு, ஒரு காலால் அடுத்திருந்த படியை கவனமாக தடவிப் பார்த்து, பாதத்தை பதிய வைத்து, ஒரு நொடி தயங்கி, பிறகு அடுத்த காலை சற்று தைரியமாக முன்வைத்து, மூன்று நொடிகள் நிதானித்தார். பின் மறுபாதத்தை தயக்கத்துடன் நீட்டி படியைத் தடவினார்.
எழுபத்தியிரண்டு வயது. சுருக்கங்கள் நிறைந்த தோல், அவரது எலும்புக் கூட்டிலிருந்து தனித்து தெரிந்தது. வயது அதிகமாய் இருந்தாலும் அவருடைய தலைமுடி பெரும்பாலும் நரைக்காதது ஆச்சரியம். அடர்ந்து இல்லாவிட்டாலும் தேவையான அளவு இருந்தது. அதை எண்ணை போட்டுப் படிய சீவியிருந்தார்.
‘இது இல்லன்னு யாரு அழுதா? மூணு மாசத்துக்கொரு முறை முடிவெட்டுறவனுக்கு அஞ்சு வெள்ளி கொடுத்து மாளல! ஆண்டவன், கேக்கறவனுக்கு கொடுக்கக் கூடாதா?’ என்று அலுத்துக் கொள்வார்.
அந்த அலுப்பைக் கேட்க கூட இப்போது ஆளில்லாமல் போய்விட்டது. இரண்டு மாதங்கள் முன்பு வரை, அவரது மனைவி ஜெயலட்சுமி இருந்தாள். பிடிக்கிறதோ இல்லையோ, எல்லாவற்றையும் காது கொடுத்து கேட்பாள். முடிந்தால் பதிலுக்கு இரண்டு வார்த்தை சொல்லி வைப்பாள். கிழவருக்கு அதிலேயே திருப்தி ஏற்பட்டுவிடும். இல்லாவிட்டாலும் புராணத்தை தொடரத் தான் செய்வார்.
வயசாகிவிட்டால் பேசுவதற்கு ஆள் துணை முக்கியமாய் தேவைப்படுகிறது. பொதுவாக இவர் போவோர் வருவோரையெல்லாம் இழுத்து வைத்து பேசக்கூடிய ரகம் இல்லையென்றாலும் கடந்த ஒரு வருடமாக இப்படி ஒரு பழக்கம்.
பக்கத்தில் யாரும் இல்லாவிட்டாலும் கூட
‘என்னம்மா கவிதா, உள்ளே அடுப்புல ஏதோ கொதிக்கறா மாதிரி இருக்கு! என்ன வச்சிருக்க ?’ என்பார். மருமகளுக்கு கோபம் வரும்.
‘இதெல்லாம் இவருக்கு எதுக்கு? எதுவா இருந்தாலும் சாப்பிடத் தானே போறோம்!’ என்று கணவனின் காதைக் கடிப்பாள்.
‘ஏண்டா, முடிய ஒட்ட வெட்டக்கூடாதா? இது என்ன பொம்பள புள்ள மாதிரி நீளமா?’ என்றால், பேரன் முகம் சுளிப்பான்.
‘தாத்தா சுத்த ‘போர்’ம்மா’ என்பான்.
ஜெயம் தான் இடையில் புகுந்து எதையாவது சொல்லி சமாளிப்பாள். இதற்கு பயந்துக் கொண்டே பிள்ளைகள் யாரும் அநாவசியமாய் இவர்களைக் கூப்பிடுவது இல்லை. அவர்களாக இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதும் கிடையாது.
இவருக்கு மூன்று பிள்ளைகள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மூத்தவன் புக்கித் பாத்தோக்கில் இருக்கிறான். அவனுக்கு இரண்டு பெண்கள். அடுத்தவன் ஆஸ்திரேலிய மோகத்தில் அங்கே கிளம்பிவிட்டான். ராமசுப்புவுக்கு இது சுத்தமாய் பிடிக்கவில்லை. ‘அது என்ன? படிக்கிறதெல்லாம் இங்கென. பெறவு அங்கென போயி தங்கிடனும்னா எப்படி? எல்லோரும் இப்படி போயிட்டா, இங்குள்ள வேலைகளுக்கு வெளிநாட்டு ஆளுங்களை நம்பாம வேற என்னத்த செய்யறது?’ என்பார்.
‘மருமகளும் சேர்ந்தல்லவா இதுக்கு தாளம் போட்டாள்! எது அப்படியோ அவனுக்கு இரண்டு பிள்ளைகள். எங்க இருந்தாலும் நல்லாயிருக்கட்டும்.’ என்று எண்ணிக் கொள்வார்.
இளையவனுக்கு ஒரே மகன். இங்கே செம்பவாங்கில் தான் இருக்கிறான். இவனுக்கு ஊரிலிருந்து பார்த்துப் பார்த்து பெண் எடுத்தார்கள். எங்கிருந்து வந்தால் தான் என்ன? இந்த காலத்துப் பெண்களுக்கு கூட்டுக் குடும்பம் பிடிப்பதில்லை. வயதானவர்களை பாரமாய் தான் நினைக்கிறார்கள்.
இதோ ஜெயம் சாவுக்கு எல்லோரும் தான் வந்தார்கள். யாரும் பேச்சுக்குக் கூட ‘வா’ என்று கூப்பிடவில்லை. ‘அப்படியென்ன உறவு வேண்டியிருக்கிறது!’ என்று இவரும் அது பற்றி பேசவில்லை. முதலிலிருந்தே அப்படி தான்! ஜெயம் தான் அப்பாவிற்கும் பிள்ளைகளுக்கும் நடுவில் பேச்சுப் பாலமாய் இருந்தாள். இப்போது அதுவும் அறுந்துவிட்டது.
ஒரு பெண்ணைப் பெற்றிருந்தால் நினைத்துப் பார்த்திருப்பாளோ! மகன்களுக்கு தொலைப்பேசியில் பேசக் கூட நேரம் இருப்பதில்லை. என்னவோ கடவுள் செய்த புண்ணியம் மாதாமாதம் ஆளுக்கு நூறு வெள்ளி அனுப்புகிறார்கள். சாப்பிடுவதற்கு இருக்கிறதோ இல்லையோ மற்ற செலவுகளுக்கு காசு வேண்டியிருக்கிறதே! யாரிடமாவது தன் கஷ்டங்களைச் சொன்னால் பரவாயில்லை என்று அவருக்குத் தோன்றியது.
மின்தூக்கியில் நுழைந்து முதலாம் எண்ணை அமுக்க, அவசர அவசரமாய் ஒரு இளைஞன் உள்ளே நுழைந்தான். நெடிய உருவம், முடி சிவப்பு சாயமேற்றப்பட்டு குச்சி குச்சியாய் நின்றுக் கொண்டிருந்தது. சீன மொழியில் செல்பேசிக் கொண்டிருந்தான். அவனையே இமைக்காமல் பார்த்தார். மார்புக்கூடு மூச்சு விடுவதற்கு ஏற்ப ஏறியிறங்கிக் கொண்டிருந்தது.
“கொஞ்சம் காசு சம்பாதிக்க ஆரம்பித்ததும் இவர்களுக்கெல்லாம் ரெக்கை முளைச்சிடுது. அப்பா, அம்மாவ பத்தி கவலைப் படாம தன்னை மட்டும் பார்த்துக்கறாங்க!” என்று முனகிக் கொண்டார்.
ப்ளாக்கிற்கு கீழேயே கோப்பிக் கடை இருந்தது, அவருக்கு மிகவும் வசதியாய் போய்விட்டது. மனைவி போனதிலிருந்து, எல்லாம் கடை தான். வீட்டுச் சாப்பாட்டிற்காக அவர் நாக்கு ஏங்கியது. அதைவிட பேசுவதற்கு ஆளில்லாதது தான் மிகப்பெரிய குறையாய் தெரிந்தது. இளமையில் பேசுவதற்கெல்லாம் நேரமிருந்ததில்லை.
‘ஊரைவிட்டு பொழைக்க வந்துட்டோம். கையில காசில்லாம திரும்பிப் போனா எவன் மதிப்பான்?’ என்ற பயமே அவரை வேலை செய்ய உந்தியது. இரவு பகலென்று பார்க்காமல், ஓரோர் சமயம் ஒரே நேரத்தில் மூன்று வேலைகளெல்லாம் கூட செய்திருக்கிறார்.
குடும்ப பராமரிப்பில் மனைவி
ஜெயத்தின் பங்கே அதிகம். வீட்டின் எந்த ஒரு பிரச்சனையும் அவர் வரை வர விடாமல் அவளே சமாளித்தாள். காசே இல்லாத நேரத்திலும் முகம் சிணுங்காமல், நிரவி நிரவி செலவுகளை சமாளித்திருக்கிறாள். அவள் அப்படி இருந்தது தவறோ என்று இப்போதெல்லாம் இவருக்கு தோன்றுகிறது. அதனால் தான், தான் எந்த நெளிவு சுளிவுகளையும் தெரிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வார். பசியாறிவிட்டு அருகில் இருந்த செவன்-லெவனில் தமிழ்
முரசு ஒன்றை வாங்கிக் கொண்டார்.
இவர் பொழுது இப்போதெல்லாம் இப்படி தான் கழிகிறது. பக்கத்து ப்ளாக்கின் கீழிருக்கும் இருக்கையில் செருப்பை கழட்டிவிட்டு உட்கார்ந்துக் கொள்வார். கால்களை முன்னுக்குத் தள்ளி சாய்மானத்தில் முதுகை இருத்திக் கொள்வார். கண்ணாடியை ஒரு முறை சட்டையின் நுனியில் துடைத்து மாட்டிக் கொள்வார். பிறகு தமிழ் முரசை விரித்து தலைப்புச் செய்திகளையும் அதைத் தொடர்ந்து முக்கியச் செய்திகளையும் மேலோட்டமாய் பார்ப்பார். பின் விரிவாக ஒவ்வொரு பத்தியையும் படிப்பார். கண்ணாடியை மாற்றி வெகு நாட்களாகி விட்டதால் எழுத்துகள் சற்றே மங்கலாகத் தான் தெரியும். திருப்திக்காக அவ்வப்போது கழற்றி துடைத்துக் கொள்வார்.
ஒரு பத்தியை படித்ததும் தன்னுடைய கருத்தை வாய்விட்டு சொல்வார். அந்த நேரம் பக்கத்தில் யாரேனும் உட்கார்ந்திருந்தால் அவர்களைப் பார்த்து சிரிப்பார். பதிலுக்கு அவர்கள் சிரிக்கிறார்களா என்பதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப் படுவதில்லை. இப்படியே இண்டு இடுக்கு விடாமல் இரண்டு பக்கங்களைப் படித்து முடிக்கும் போது ஒருமணிநேரம் கடந்திருக்கும். அதற்குள் இருக்கையின் சாய்மானம் போதாமல் முதுகு வலிக்க ஆரம்பித்திருக்கும்.
மீதியை வீட்டிற்கு சென்று சிறிது ஓய்விற்கு பிறகு படித்து முடிக்கும் போது, மணி பன்னிரெண்டு ஆகிவிடும். இன்று காலையிலிருந்து ராமசுப்பு தாத்தாவின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் சுழன்றுக் கொண்டேயிருந்தது.
‘கனகரத்தினத்தை போய் பார்த்து பேசிவிட்டு வரலாமா?’ என்று யோசித்தார்.
‘இப்போதெல்லாம் அவன், அவனுடைய பேரனின் லீலைகளைப் பற்றியே தான் அதிகம் பேசுகிறான்.’
இவருக்கு கொஞ்சம் நேரத்தில் பொறுமை போய்விடுகிறது. அதனால் இன்று
வேண்டாம் என்று முடிவு செய்துக் கொண்டார்.
செய்வதற்கு ஏதுமில்லாமல், தன் இளமையான நாட்களை நினைத்தபடி படுத்திருந்தார். அப்போதெல்லாம் அவருடைய அம்மா ஊரில் உயிருடன் தான் இருந்ததார். சிறுவயதில் அப்பாவை இழந்திருந்த இவருக்கு எல்லாம் அம்மா தான்.
கீரையைக் கூடையில் வைத்து, தெருத் தெருவாக விற்று, தன் பசியைப் புறந்தள்ளி, இவருடையதைத் தீர்த்திருக்கிறாள். மழை பெய்தால் குடிசையின் ஒரு பக்கம் முழுவதும் நனைந்துவிடும். இருக்கும் கொஞ்சம் இடத்தில் சாக்குப் பைகளை விரித்து இவரைப் படுக்க வைத்து விட்டு, இரவு முழுதும் கூரையைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பாள்.
இவர் சிங்கப்பூருக்கு முதன்முதலாக வந்த போது ‘புள்ள கடல் தாண்டி போகுதே!’ என்ற பெருங்கவலை அவளுக்கு இருந்தது. வாரம் ஒரு முறை கடிதாசி போட்டும் கூட அவள் மனசு ஆறாது.
‘ஏம்பா! இங்கனயே வந்துடக்கூடாதா? கஞ்சியோ, கூழோ ஒன்னா குடிச்சுக்கிடுவோம்! வயசான காலத்துல பேர புள்ளங்க கூட இருக்கணும்னு தோணுதப்பு!’ என்று பள்ளிக்கூடப் பிள்ளைகளை விட்டு எழுதிப் போடுவாள்.
“அப்போவெல்லாம் இப்ப இருக்கறாப்புல தொலைபேசி யெல்லாமா இருந்தது? எல்லாத்துக்கும் கடுதாசி தான். கடுதாசின்னா என்னன்னு கூட இப்போயிருக்கிற புள்ளைகளுக்கு தெரியாது.” என்று முணுமுணுத்துக் கொண்டார்.
கடிதாசியைப் படிக்கும் போதெல்லாம் ‘கெழவிக்கு வயசாயிடுச்சி. வேற என்ன வேல! ஏதோ மவன் காசு அனுப்பறானே, நிம்மதியா உட்கார்ந்து சாப்பிடுவோம்ன்னு இல்லாம, தொண்தொணங்குது’ என்று சலித்துக் கொள்வார்.
“வயசான காலத்துல தனியா இருக்கற கொடுமை இப்ப தானே தெரியுது!” என்று சத்தமாய் சொல்லிவிட்டு ஹாலில் மாட்டியிருந்த ஜெயத்தின் படத்தைப் பார்த்தார். ஜெயத்திற்கு, மாமியாரை இங்கே அழைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை.
வந்துவிடுமாறு கூப்பிட்டதற்கு, ‘உங்கப்பா பொறந்து, வளந்து, நல்லா வாழ்ந்த ஊரு இது. அவர் மூச்சுக் காத்து இங்கெனெ தான் பிரிஞ்சுது. ஊரு, ஒறவு எல்லாம் இங்கிட்டு தான் இருக்கு. என் கடெசி காலம் இங்கதாம்ப்பு.’ என்று பிடிவாதமாய் மறுத்து விட்டாள்.
‘வீம்புக்கார கெழவி!, கடேசி வரைக்கும் இங்கென எட்டிப் பார்க்காமயே போயிடுச்சி!’ கண்களில் அம்மாவிற்காக நீர் துளிர்த்தது.
இரவு முழுக்க அம்மாவின் நினைவாகவே இருந்தது அவருக்கு. கனவில், கிராமத்து வீட்டில் அம்மாவுக்கு உதவியாய் ஜெயம் சமைத்துப் போட, இவர் சுகமாய் சாப்பிட்டு, அம்மாவின் மடியில் படுத்து தூங்கினார். திடீரென்று அம்மா காணாமல் போய் பிள்ளைகள் வந்து ‘அப்பா, எங்களோட பேசுங்க’ என்று வற்புறுத்தினார்கள். இவர் எவ்வளவு பேசினாலும் மேலும் மேலும் பேசும்படி வற்புறுத்தினார்கள். இவர் தாங்க முடியாமல் எழுந்து வெளியே செல்ல, பேரப் பிள்ளைகள் துரத்திக் கொண்டு வந்தார்கள். திடுக்கிட்டு எழுந்த போது மணி மூன்றைத் தொட்டிருந்தது. கண்களினோரம் வழிந்திருந்த
நீரைத் துடைத்துக் கொண்டார். இனி தூக்கம் அவ்வளவு தான்!
‘வயசாயிட்டா தூங்கறது கூட பெரிய பிரச்சனையாத் தான் இருக்குது!’
‘மனசு முழுக்க வேதனை இருந்தா தூக்கம் எப்படி வரும்?’.
தனக்குள்ளேயே விவாதம் செய்துக் கொண்டு தள்ளாடியபடி வெளியே வந்தார். சில்லென்ற காற்று முகத்தில் மோதி புத்துணர்ச்சியைக் கொடுத்தது.
காலைக் கடன்களை முடித்து விட்டு ஆறு மணிக்கு என்றுமில்லாத வழக்கமாக கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்பினார். தலை பாரமாய் இருந்தது. வீட்டிற்குள்ளேயே தனிமையில் பேசிக் கொண்டிருந்தால் பைத்தியம் பிடித்து விடும் என்று தோன்றியது. மெதுவாக நடந்து பக்கத்திலிருந்த பூங்காவிற்கு வந்தார்.
பலர் அங்கே நடந்துக் கொண்டும், உடற்பயிற்சிகள் செய்துக் கொண்டும் இருந்தார்கள். நடைபயிற்சி முடித்த சிலர் கும்பலாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கே பக்கத்து ப்ளாக்கில் வசிக்கும் ரேணுவின் அப்பா, கருப்பையா உட்கார்ந்திருந்தார். கருவேலம்பட்டிக்காரர். கொஞ்சம் நாட்களுக்கு பெண்ணிற்கு துணையாக ஊரிலிருந்து வந்திருப்பவர்.
இவரைப் பார்த்ததும்
“வாங்கய்யா!” என்று வரவேற்றார்.
இவரின் முகத்தைப் பார்த்ததும் அவருக்கு சங்கடமாய் இருந்திருக்க வேண்டும்.
“என்னய்யா செய்யறது! எல்லோருக்கும் நடக்கறது தானே! அறுவது வயசுக்கு மேலே இருக்கிற ஒவ்வொரு நாளும் ஆண்டவன் கொடுக்கற பரிசு தானே!” என்றார்.
“நம்ம கையில என்ன இருக்கு. வயசாயிட்டா, அதுவும் பேச்சுத் துணைக்கு யாரும்
இல்லைன்னா திண்டாட்டம் தான்!” என்றார் ராமசுப்பு.
“நீங்க ஏன்யா அப்படி நெனக்கிறீங்க! நாங்கல்லாம் இல்லையா? எல்லாருக்கும் ஒவ்வொரு விதத்துல பிரச்சனை. பிரச்சனை இல்லாத மனுஷன் உலகத்துல உண்டாய்யா? ” என்றார் கருப்பையா.
சற்று நேரம் பேசிவிட்டு கிளம்பிய போது, மனதிலிருந்த வார்த்தைகளுக்கு கிடைத்த விடுதலையால் மனம் சற்று தெளிந்திருந்தது. பிரச்சனையில் பாதி குறைந்தது போல இலகுவாயிருந்தது.
“நல்ல மனுஷன்! எங்க பார்த்தாலும் கொஞ்ச நேரம் நின்னு பேசுவாரு. . . அவருக்கு பொண்டாட்டிய பிரிஞ்சியிருக்குற கஷ்டம். ம்ஹீம். . .” என்று தனக்குள் பேசியபடி, தினசரி வழக்கத்தைத் தொடங்க கோப்பிக் கடையை நோக்கி போனார் ராமசுப்பு தாத்தா.
(சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய முத்தமிழ் விழா 2011ல் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
2 கருத்துகள்:
கதை அருமை....
கதை அருமை. கதை முடிவில் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிர்த்து விட்டது.
கருத்துரையிடுக