சனி, 28 ஜனவரி, 2012

கி ௪௧௪௨ பி

ரவி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது, வீட்டு வாசலுக்கு எதிராக அது பளபள வென்று நின்றுக் கொண்டிருந்தது. கம்பித் தடுப்புகளுடன் , சுமார் ஐந்தடி உயரத்தில், ஒரு பெட்டி போல, சுருக்கமாக சொல்வதென்றால் சற்றே பெரிய வெள்ளிக் கூண்டு போல இருந்தது. உள்ளே உட்காருவதற்கு வாகாய் ஒரு இருக்கை. அதற்கு மேலே கி ௪௧௪௨ பி என்று புரிபடாத எழுத்துகள் சிவப்பாக ஒளிர்ந்துக் கொண்டிருந்தன.. அதன் பக்கத்தில் ஒரு பச்சை விளக்கு கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தது.

     ரவியின் வீடு அந்த மாடியின் கடைசி வீடு. அதனால் அது யாருடைய கவனத்தையும் பெரிதாய் கவராமல் நின்றுக் கொண்டிருந்தது. எங்கிருந்து வந்தது என்று அவனுக்குப் புரியவில்லை. துப்புரவாளர்கள் யாரேனும் விட்டுச் சென்றிருப்பார்களோ! ஆனால் துப்புரவாளர்களின் வண்டி அழுக்கான பச்சை நிறத்தில் அல்லவா இருக்கும். அதுவும் பதினோறாம் மாடிக்கு வரவேண்டிய அவசியம்! அவன் மண்டை காய்ந்து போனது.

     அடுத்த வீட்டு இந்தோனேஷிய பணிப்பெண் தலையை கம்பிக் கதவிற்கு வெளியே நீட்டி எட்டிப் பார்த்தாள். இவனைப் பார்த்ததும் சட்டென்று உள்ளே இழுத்துக் கொண்டாள். புதுப் பறவைக் கூண்டு வாங்கியிருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பாளோ! ஆனால் இது மனித குரங்கு வைத்து வளார்ப்பதற்கு ஏற்ற அளவில் இருந்தது.

     மனைவி இன்னும் வேலையை விட்டு வந்திருக்கவில்லை. கதவைத் திறந்து வீட்டிற்கு உள்ளே சென்றான். காலையில் விட்டுச் சென்ற வீடு அலங்கோலமாய் அப்படியே இருந்தது. நாற்காலியின் மீது விசிறி எறியப்பட்டிருந்த துண்டு ஈரத்துடன் சுருண்டிருந்தது. அதை விரித்து காய வைத்தபடியே செல்பேசியை எடுத்து மனைவியை விசாரித்தான். “அப்படியா!!!” என்றாள் ஆச்சரியத்துடன்.

மண்டாய் ரோடிற்கு போக வேண்டிய பார்சல் பாதியில் நின்னுபோச்சோ?” என்று ஜோக்கடித்து விட்டு

ஏதாவத் பாம் கீம் இருக்கப் போகுது. பேசாம ட்ரிபிள் நைன்னுக்கு போன் செஞ்சிடுங்கஎன்றாள்.

     அவனுக்கு குழப்பமாக இருந்தது. வெடிகுண்டு என்றால் பொது இடத்தில் அல்லது மக்கள் அதிகம் புழங்கும் இடத்தில் அல்லவா வைக்க வேண்டும்? இங்கே வைக்க வேண்டிய காரணம்? ஒரு வேளை எதிரே இருக்கும் சோங் பாங்மார்கெட் பிரபலம் என்பதால் இங்கே வைத்துவிட்டார்களோ?
அவன் வீடு வாங்கியிருக்கும் இடம் பாம் வைக்குமளவு புகழ் பெற்றது என்பதை அவனால் நம்ப முடியவில்லை. சிங்கப்பூரில் இப்படி நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்ற அடிப்படை உண்மையும் அவனது நம்பிக்கையின்மைக்கான மற்றொரு காரணம்.

     இப்போதைக்கு அவனுடைய முதல் தேவை கோப்பியாக இருந்தது. கோப்பி இருந்தால் மட்டுமே அவனால் எதையும் தெளிவாக சிந்திக்க முடியும். அதை கலந்து எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

     முன்பு கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்த பச்சை விளக்கு, இப்போது மஞ்சள் நிறத்துக்கு மாறியிருந்தது.  இர்ர்ர்ர். . .’ என்ற மெல்லிய சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. உள்ளே சென்று கோப்பையை கழுவும் போது போலீசில் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். கடைசியாக ஒரு முறை அதை பார்வையிட வெளியே வந்தான்.

கூண்டின் முறுக்குக் கம்பிகள் உறுதியானவையாகத் தோன்றின. இப்போது அதில் ஒரு கதவு போன்ற அமைப்பை அவனால் பார்க்க முடிந்தது. கம்பியோடு கம்பியாய் இருந்ததில் இவ்வளவு நேரம் அதை கவனிக்கவில்லை. லேசாய் அதை தொட விலகிக் கொண்டது. உள்ளே இருந்த இருக்கை, பழைய படத்திலெல்லாம் ராஜாக்கள் உட்காருவார்களே!, அது போல அழகாய் சிவப்பு நிறத்தில், ஓரத்திலெல்லாம் தங்க நிற வேலைப்பாடுகளுடன் கவர்ச்சியாக இருந்தது.

சுதா சீக்கிரம் வந்தால், ஜோடியாக உட்கார்ந்து ஒரு படம் எடுத்துக் கொள்ள வேண்டும்.’

இப்போது பயத்தை விட ஆர்வம் அதிகமாயிற்று. உட்கார்ந்து பார்க்கவேண்டும் என்ற ஒரு ஆசை தோன்றியது.

இனி எப்படியும் ராஜாவாகி ஒரு தேசத்தை ஆளப் போவது இல்லை. உட்காந்து பார்த்தால் தான் என்ன?’

ஆனால் பயமாக இருந்தது.

வேண்டாம் என்று பின்னால் போக, ஆர்வம் அதிகமானது. ‘சரி ஒரே ஒருமுறை உட்கார்ந்து பார்த்துவிட்டு உடனே எழுந்துவிடுவோம். அப்போது தான் போலீசுக்கும் சரியான விவரங்களை கொடுக்க முடியும்.’ என்ற சமாதானப் படுத்திக்கொண்டு அதில் ஏறினான்.

      இருக்கையில் அமர்ந்த நொடி கிளிக்கென்ற சத்தத்துடன் கதவை மூடிக் கொண்டு, ‘உய்ய்ங்ங்ங். . .’ கென்ற சத்ததுடன் மிக வேகமாக சுழன்றது அந்த வெள்ளிக் கூண்டு. அவன் பயத்தில் இருக்கையை கெட்டியாய் பிடித்துக் கொண்டான். மூச்சு தாறுமாறாய் வெளியேறியது. அது சுற்றிய வேகத்தில் என்ன நடக்கிறது என்பதை விட, விழுந்துவிடக் கூடாதே என்ற பயம் தான் அதிகமாய் இருந்தது. சற்று நேரத்தில் அந்த கூண்டு ஒரு நிலைக்கு வந்தது. ஆனால் நகர்ந்துக் கொண்டு தான் இருந்தது.

     நகர்ந்தது என்பதை உடலை பின்னோக்கி தள்ளிய விசையை வைத்து மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது. வெளிப்புறக் காட்சிகள் எதுவும் தெரியவில்லை. தெரியாத அளவு மிக வேகமாய் பயணித்திருக்க வேண்டும். காதுக்குள் ங்ர்ர்ர்ர் . . .’ என்ற சத்தம் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தது. மனதிற்குள் ஒருமுறை திறந்திருந்த வீடு வந்து போனது. மனைவி வந்து போனாள். அவள் சொன்னதைக் கேட்காமல் போனோமே என்று எப்போதும் போல நினைத்துக் கொண்டான்.

செல்பேசியைக் கூட முட்டாள் தனமாக வீட்டிலேயே வைத்துவிட்டோமே!’ ‘இது புஷ்பக விமானம் போல இப்படி பறக்கும் என்று யார் எதிர்பார்த்தது? எதிர்பார்த்திருந்தால் ஏறி தான் உட்கார்ந்திருப்பேனா?’

பேசாமல் போலீசுக்கு சொல்லியிருக்கலாம். வீதியில் போன சனியனின் மேல் ஏறி சவாரிசெய்த கதையாகிவிட்டது!’

     என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. செய்ய ஒன்றும் இருக்கவில்லை, கெட்டியாய் இருக்கையை பிடித்து கொள்வதை தவிர. அந்தக் கூண்டு எங்கே போகிறது என்ற யோசனையற்று அந்த நாற்காலியையே வெறித்துப் பார்த்தான். அப்போது தான் கயிறு போன்ற ஒரு அமைப்பை அந்த இருக்கையின் பக்கத்தில் கவனித்தான். இழுத்து மாட்டிக் கொண்ட பிறகு நிலையாக உட்கார முடிந்தது.

தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. இனி ஜானென்ன முழமென்ன? எது வந்தாலும் சமாளித்து தான் ஆக வேண்டும்.’ ‘ங்ர்ர்ர்ர்மட்டும் விடாமல் தொடர்ந்தது.

      சற்று நேரத்தில் மிதப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. பின் ச்ச்சசக்என்று எதிலோ சொருகிக் கொண்டது அந்த கூண்டு. கதவு கிளிக்கென்று திறந்துக் கொண்டது. வேறு வழியின்றி வெளியே வந்த போது சிறிய கண்ணாடி அறை ஒன்றில் நின்றிருந்தான்.

     அந்த அறைக்கு வெளியே வெள்ளை அங்கி அணிந்த நான்கு உருவங்கள் இருந்தன. மனிதர்களைப் போலவே, ஆனால் குள்ளமான உருவங்கள். கண்கள் சற்றே பெரிதாய், முட்டையை நீள வாக்கில் வெட்டி வைத்தது போல. . . தலையில் சுத்தமாய் முடியில்லை. அவற்றிற்குப் பின்னால் இருந்த ஜன்னல் வழியாக ஆதியும் அந்தமும் இல்லாத உயர்ந்த கட்டிடங்களைப் பார்க்க முடிந்தது.

      அந்த உருவங்கள் தங்களுக்குள் எதையோ பேசி தலையை ஆட்டிக் கொண்டன. தலைவனைப் போல இருந்த உருவம் மற்ற உருவங்களுக்கு ஏதோ கட்டளையிட்டது. இரண்டு உருவங்கள் அவனை நெருங்கி வந்தன. மறுப்பதற்கு இடம் கொடுக்கப் படாமல் ஒரு நீளமேஜையில் படுக்க வைக்கப் பட்டான். சுற்றிலும் குழாய் போன்ற அமைப்புகள். எல்லாம் சேர்ந்து ஒரு பரிசோதனைக் கூடம் போல இருந்தது. தான் ஒரு பரிசோதனை எலியின் நிலையில் இருப்பதாக தோன்றியது. என்ன செய்யப்போகிறார்கள் என்று அச்சமாய் இருந்தது. செய்முறை வகுப்பில், மயக்கமாயிருந்த தவளையின் நான்கு கால்களை ஆணியால் அறைந்து, அதன் செரிமான உறுப்புகளைப் பற்றி படித்தது, அநாவசியமாய் ஞாபகத்திற்கு வந்தது.

      ஒரு உருவம் அவன் பக்கம் வந்து, “நலமாய் இருக்கிறீர்களா?” என்றது.

பலவந்தமாய் இழுத்து வந்ததுவிட்டு, இது என்ன கேள்வி என்று கோபம் வந்தாலும், அது சுத்தத் தமிழில் மரியாதையாய் பேசியது அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. பழைய படங்களில் வருவது போல

நான் எங்க இருக்கேன்?” என்றான்.

சிங்கையில் தான். நாம் இப்போது இருப்பது கி.பி.4142 ஆம் ஆண்டு. என் பெயர் சோழன். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.” என்றது.

எனக்கு அப்படி இல்ல. முதல்ல என்ன நடக்குதுன்னே சுத்தமா புரியல!!!”

நீங்கள் ஏறி வந்தது ஒரு கால இயந்திரம். உங்கள் காலத்திலிருந்து சுமார் 2100 வருடங்கள் முன்னோக்கி வந்திருக்கிறீர்கள்என்றது சோழன்.

யாரைக் கேட்டு தூக்கிட்டு வந்தீங்க?’ என்று கோபம் வந்தாலும், தவளையின் ஞாபகம் ஏற்படுத்திய அச்சத்தில், வெளியே சொல்ல பயமாயிருந்தது. அது தமிழில் பேசியது சற்றே ஆறுதலளித்தது. என்ன இருந்தாலும்நம்ம ஆளுஎன்று நினைத்துக் கொண்டான்.

நீங்க எப்படி இவ்வளவு சுத்தமான தமிழ்ல பேசறீங்க?” என்றான் ஆச்சரியத்துடன்.

சிங்கை அரசின் ஆணைப்படி , குடிமக்கள் அனைவரும் அவரவர் தாய் மொழியிலேயே படித்துக் கொண்டிருக்கிறோம். ஆங்கிலம் எங்களுக்கு இரண்டாம் பாடம் மட்டுமே!” என்றது சோழன்.

ஆனா நாங்க தமிழைத் தான் ரெண்டாவது மொழியா படிச்சோம்என்றான் ரவி.

தெரியும். இந்த ஆணை சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் தான் ஏற்படுத்தப் பட்டது.”

. . . அதனால தான் நீ சோழனா?” என்றான் ரவி.

ஆம். குடிமக்கள் குழந்தைகளின் பெயர்களை, தங்கள் பின்புலத்திற்கேற்ப தேர்வு செய்ய வேண்டும் என்பதும் அரசு ஆணையின் ஒரு பகுதி. மக்களுக்கு அதிகம் சிரமம் கொடுக்காமல், அரசே மூன்று பெயர்களை பரிந்துரைத்து அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களுக்கு அளிக்கிறது.”

நான் ராஜ ராஜ சோழன், இவன் கரிகால சோழன், உவன் ராஜேந்திர சோழன். . .”

உங்க தலைவர் சுந்தர சோழனா?”

இல்லை, அவர் அரிமர்தன பாண்டியன்

என்னை இப்போது எதுக்காக இங்க கொண்டுவந்திருக்கீங்க?” என்றான் ரவி.

பயப்பட வேண்டாம். உங்கள் உயிருக்கு எந்த சேதமும் இல்லை. வலியிருக்காது. சற்று நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள்என்றது ராஜ ராஜ சோழன்.

     அவன் அனுமதியின்றி அவன் உடலின் மேல் சிற்சில சோதனைகளைச் செய்தார்கள், சோழர்கள். பின் ஒரு மஞ்சள் அங்கியை அணிவித்து மற்றொரு கலத்தில் ஏற்றினார்கள். அந்த கலம் சக்கர வடிவில் இருந்தது. அது மாடியிலிருந்து நேராக மிதந்தது வெளியேறியது.

     வெளியே வெளிச்சமாய் இருந்தது.  கட்டிடங்களில் இடிபடாமல் இது போன்ற பல கலங்கள் சென்று வந்த வண்ணம் இருந்தன. ஆகாயம் கண்ணாடி போல பளிச்சென்று தோற்றமளித்தது.

எப்படி?” என்றான் ஆகாயத்தைப் பார்த்தவாறே.

முப்பத்தி இரண்டாம் நூற்றாண்டில், பூமியின் வெப்பம் அளவுக்கு அதிகமாய் உயர, கடலின் மட்டமும் உயர்ந்து விட்டது. ஓசோன் படலத்தின் ஓட்டை பெரியதாகி சூரியனின் உக்கிரமும் தாங்க முடியாமல் போய்விட்டது.”

ரவிக்கு இதையெல்லாம் படித்த ஞாபகம் வந்தது.

காதில் கேட்டுகேட்டு புளித்துப் போய், ஒரு செய்தி என்ற அளவிலேயே தங்கிப் போன ஒரு விஷயம், எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தியிருக்கிறது!’

இதனால் உலகை, ஒரு மிகப்பெரிய அல்ட்ரா வயலட் கதிர்கள் ஊடுருவ முடியாத, கண்ணாடிக் குடுவைக்குள் அடைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானோம். இங்கே இருப்பதல்லாம் செயற்கை காற்று, செயற்கை நீர் எல்லாமே செயற்கை. ”

     சூரியன் கண்ணாடியின் வழியாக பளீரென்று பிரகாசித்துக் கொண்டிருந்தது. ரவிக்கு வெப்பம் அதிகமாய் இருப்பதாய் தான் தோன்றியது.

எங்களின் முன்னோர்கள் குளிர்பதனப் பெட்டியும், வண்டியுமாய் அலைந்ததன் விளைவை நாங்கள் அனுபவிக்கிறோம்.” என்றது சோழன்.

     அப்போது கலம் சிங்கப்பூர் மெர்லியனினுக்கு மேலே பறந்துக் கொண்டிருந்தது.. மெர்லியனுக்கு வெளியே போடப்பட்டிருந்த கண்ணாடித் தடுப்பைத் தாண்டி கடலின் மட்டம் கிட்டத்தட்ட பதினோறு அடிகளுக்கு உயந்திருந்தது.” அவனுக்கு பகீர் என்றது.

ஏதாவது பழி கிழி வாங்கப்போகுதுங்களோ?’ என்று பயந்துக் கொண்டே

என்னை எதுக்காக கூட்டிட்டு வந்தீங்க?” என்று கேட்டான்.

 எங்கள் இளையர்களில் சிலர் மக்களின் சுதந்திரத்தில் அரசாங்கம் அளவுக்கு மீறி தலையிடுவதாக, புரட்சியை துவக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு சுதந்திரக் காற்று வேண்டுமாம்! அவர்கள் விருப்பத்திற்கேற்ப வசதிகள் செய்துக் கொள்ள வேண்டுமாம்!

உங்களின் வாழ்கை முறையால் விளைந்த தீமைகள் அவர்களுக்கு தெரியவில்லை. அதனை ஆதியிலிருந்து விளக்க, எங்களுக்கு சில மனித மாதிரிகள்தேவைபடுகின்றன. அதனால் கூண்டு வைத்து பிடித்துக் கொண்டிருக்கிறோம்.”

அடப்பாவிகளா! அதுக்கு நானா கெடச்சேன்!’

அந்த கலம் அவனை ஒரு நெடிய கட்டிடத்தின் 106ம் மாடியின், 55ம் அறையில் இறக்கிவிட்டது.

அடிப்படை வசதிகள் நிறைந்த அறை. வேளாவேளைக்கு உணவிற்கான காய் கனிகள் வந்து சேர்ந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டது. அவனைப் போல ஓரிருவர் அந்த மாடியில். அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் சுதந்திரம் கூட இருந்தது. ஆனால் அந்த கட்டிடத்தை தவிர வேறு எங்கும் செல்ல முடியாதபடி சென்சார் காவல் காத்தது .

அதே மாடியில் 46ம் அறையில் இருந்த சீனர் வந்து இரண்டு நாட்களாகி விட்டதாம்.

ஸா திஸ் கேஜ் இன் பீஷான் பார்க். காட் க்யூரியஸ் அண்ட் காட் இன். மை வைஃப், மை சில்ட்ரன் ஆல் இன் பார்க் ல்லா. டோன்னோ வாட் ஹேப்பண்ட் டு தெம்!என்றார்.

வீட்டுக்குப் போயிருப்பார்கள்என்று நினைத்துக் கொண்டான்

     ஒவ்வொரு அறையின் வாசலிலும் அந்த கட்டிடத்தின் வரைபடம் இருந்தது. அதனருகில் தமிழ், சீன, மலாய் மற்றும் ஆங்கில மொழியில் விளக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. விளக்கத்தின் கீழே 106 ஆராய்ந்தான். ‘ஹோமோசேபியன்ஸ், (1950- 2050)’ என்று இருந்தது. கண்களால் நகலெடுத்துக் கொண்டே கீழே செல்ல, ஐம்பத்தியிரண்டாம் மாடியில்நியான்டர்தால்என்றும் இன்னும் கீழே சென்றதில், ஒன்றாம் மாடியில்குரங்குஎன்று எழுதியிருந்தது.

 கடவுளே! இது மட்டும் கனவா இருக்கட்டும், நான் உனக்கு டை மாலை சாத்தறேன்! என் வீட்டுல இருக்க ஏர்கானகழட்டிடறேன். காரை வித்துடறேன் . . .’ என்று வேண்டிக் கொண்டான் ரவி.

5 கருத்துகள்:

விச்சு சொன்னது…

கால யந்திரத்தின் கதை. நல்ல கற்பனையோடு எழுதியுள்ளீர்கள். நான் இப்போதுதான் படித்தேன். "கி ௪௧௪௨ பி" இதுதான் புரியவில்லை.

ஹேமா (HVL) சொன்னது…

கி க்கும் பி க்கும் நடுவில் இருப்பது 4142 என்ற எண்கள், தமிழில். கி.பி.4142 என்று சொல்ல நினைத்தேன்!

அப்பாதுரை சொன்னது…

கற்பனை அற்புதம். நகைச்சுவையும் பிடித்திருக்கிறது.

அப்பாதுரை சொன்னது…

மறந்து போச்சு.. கிபி உபயோகம் எல்லாம் இப்பவே கிடையாதே..?

ஹேமா (HVL) சொன்னது…

@ அப்பாதுரை
ரொம்ப நன்றிங்க! உங்க கதைக்கு முன்ன இதெல்லாம் ஒன்றுமே இல்லை!